Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

புத்தம் புது காலை : நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி... சீனாவிடம் கற்றுக்கொள்ளலாமா?! #MalariaDay

ஒரு நோய், பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து இன்றுவரை மனிதனை தாக்கிக் கொன்று கொண்டேயிருக்கிறது. அதுவும் அது அழியாமல் இருக்க ஒரு சாதாரண கொசு மூலமாகப் பரவுகிறது என்பதும் ஆச்சரியமான விஷயம் அல்லவா?

கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே வாழும் ஓர் உயிரினம், இதுவரை கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்த உயிரினம்... ஏன் கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் அழிவுக்குக் கூட காரணம் என கருதப்படும் ஓர் உயிரினம்... நாம் அற்பமாய் நினைக்கும் அந்தக் கொசு!

கொசுக்களின் ராணி என அழைக்கப்படும் அனாஃபிலிஸ் பெண் கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவும் நோய் மலேரியா. அந்த கொசுக்கள் மனிதனைக் கடிக்கும்போது அவற்றின் உமிழ்நீர் மூலமாக உள்ளே நுழைந்து, மனிதனின் இரத்த நாளங்களிலும், பிறகு கல்லீரலிலும் பெருகி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இரத்த சோகை, காமாலை, மூளைக்காய்ச்சல், சிறுநீரகம், நுரையீரல் என் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மலேரியா அளவு வேறெந்த தொற்றும் மனிதனை இவ்வளவு பாதிக்காததால் இதை 'தொற்றுநோய்களின் அரசன்' என்றே அழைக்கிறார்கள்.

அனாஃபிலிஸ் கொசு

ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் ரோமாபுரியைத் தாக்கி சாம்ராஜ்யத்தையே சாய்த்திருக்கிறது இந்த நோய். மோசமான காற்று (Mal air) மூலமாக ஏற்பட்ட நோய் என்று நம்பப்பட்ட பெயரே நிலைத்து, மலேரியா நோய் என உலகெங்கும் அழைக்கப்படுகிறது.

இந்த கொடூரமான மலேரியா நோயைப் பற்றிய முதல் குறிப்பேடுகள் காணப்படுவது Nei Ching என்ற பண்டைய சீன மருத்துவ நூலில் தான். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'மூன்று அரக்கர்கள்' என சீனர்களால் அச்சத்துடன் பார்க்கப்பட்ட மலேரியா, சீனத்தில் மட்டுமே ஆண்டுக்கு மூன்று கோடி நோய்த்தொற்று, முப்பது லட்சம் உயிரிழப்புகள் என பல வருடங்களாக தாண்டவமாடியிருக்கிறது. ஆனால், இந்த நோயைக் கட்டுப்படுத்தி, கடந்த மூன்று வருடங்களாக 'மலேரியா இல்லாத நாடு' என்ற நிலையை எட்டியுள்ளது சீனா.

மக்கள்தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் இது எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு, ''டீம் வொர்க் வொர்க்ஸ்'' என்கிறார் பேராசிரியர் யாங்- ஷ. "மலேரியா அதிகம் காணப்பட்ட ஊரைச் சேர்ந்தவன் நான். எனது தந்தையின் சகோதரர்கள் இறந்ததும் தீவிர மலேரிய நோயால் தான். அவ்வாறு இருந்த நிலையை மாற்றி, 'ஜீரோ மலேரியா' என்ற வெற்றிப்பாதைக்கு காரணம் அனைவரது கூட்டு முயற்சி தான் " என்று சொல்லியிருக்கிறார் அவர்.


கிட்டத்தட்ட சீன அமைச்சகங்களில் பதிமூன்று அமைச்சகங்கள் ஒன்று சேர்ந்து, '1-3-7' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளன. அதாவது, ஒருவரிடம் மலேரியா நோய் கண்டறியப்பட்ட முதல் நாளே அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் அவரிடமிருந்து யாருக்கெல்லாம் நோய் பரவும் என அறிந்து அவற்றை அடைக்க வேண்டும். ஏழாவது நாளுக்குள் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவற்றைச் செயல்படுத்தியும் வருகின்றனர்.

ZERO MALARIA - CHINA

நோயாளிக்கு முறையான பரிசோதனைகள், முழுமையான சிகிச்சைகள் என நோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் சீனர்கள் அத்தோடு நிற்கவில்லை. மலேரியாவைப் பரவச் செய்யும் அனாஃபிலிஸ் கொசுக்களைக் உண்ணும் கேம்பூசியா மீன் வளர்ப்பு என்ற இயற்கை முறை, மலேரியக் கிருமிகள் வளர இயலாத மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட கொசு உற்பத்தி என்ற ஜீன் டெக்னாலஜி என அனைத்து விதமான தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர்.

"இப்படியெல்லாம் செய்யவில்லை என்றால் மறுபடியும் எங்கிருந்தாவது மலேரியா மறுபடியும் உயிர்பெற்று வந்துவிடும்" என்பதை உணர்ந்திருக்கிறோம் என்று சொல்லும் சீனா, தனது முறைகளைத் தொடர்ச்சியாக செயல்படுத்தியும் வருகிறது.

நம்மிடையே வருடந்தோறும் இருபதாயிரத்திற்கும் மேலான உயிரிழப்புகளையும், லட்சக்கணக்கான நோய்த்தொற்றையும் மலேரியா ஏற்படுத்தி வரும் இன்றைய நிலையில், கொரோனா என்று புதிய அரக்கனும் சேர்ந்திருக்கிறது. நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் அதிகம் என்பதை சீனா நமக்கு உணர்த்துகிறது. முயன்றால் முடியாதது இல்லை என்பதும் நன்கு புரிகிறது!

மலேரியா நோய்க்கட்டுப்பாட்டிலும், மற்ற அனைத்திலும்!

#ZeroMalaria



source https://www.vikatan.com/news/healthy/how-china-eliminated-malaria-disease

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக