Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

யாரை அடித்துத் துரத்துகிறார் 'கர்ணன்' தனுஷ், மாரி செல்வராஜின் வாள் வென்றதா?! +/- ரிப்போர்ட்! #Karnan

பொடியன் குளம் என்ற சிறிய கிராமத்தை ஒடுக்குகிறது அருகிலிருக்கும் மேலூர் கிராமம். பேருந்துகூட நிற்காத அந்தக் கிராமத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நெஞ்சை நிமிர்த்துகிறது அதன் இளம் தலைமுறை. வாளேந்தும் கர்ணனை தங்களின் மீட்பராகப் பார்க்கும் கிராமம், ஒரு கட்டத்தில் அதிகாரத்துக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் திமிறி எழுகிறது. இந்த மாபெரும் யுத்தத்தின் இறுதியில் வென்றது காவல்துறையின் அதிகாரமா மக்களின் போராட்டமா என்பதை அரசியலும் அழகியலும் கலந்து சொல்லும் படமே 'கர்ணன்'.
தனுஷ் #Karnan

'பரியேறும் பெருமாள்' மூலம் இரு தரப்புக்குமான ஓர் உரையாடலைத் தொடங்கிவைத்த மாரி செல்வராஜின் இரண்டாவது படம் 'கர்ணன்'. தென் மாவட்டங்களில் நிகழும் சாதியப் பிரச்னைகள், எளிய மக்களிடமிருந்து பறிக்கப்படும் உரிமைகள், இதில் கலந்திருக்கும் அரசியல் என அனைத்தையும் சமரசமில்லாமல் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். காலங்காலமாக ஒடுக்கப்படும் ஒரு சமூகம் வன்முறையை எதிர்க்க வாள் ஏந்த அதனால் ஏற்படும் அதிர்வுகளை அதற்குரிய பதைபதைப்புடன் படமாக்கியிருக்கிறார்.

கர்ணனாக தனுஷ். 'அசுரன்' படத்துக்காக தன் கரியரின் இரண்டாவது தேசிய விருதை வாங்கியிருப்பவருக்கு மீண்டும் அதே போன்றதொரு கணமான கதாபாத்திரம். லுங்கியுடன் ஊரில் திரியும் ஜாலியான, அதே சமயம் தைரியமான இளைஞன். தன் மக்களுக்கு அநீதிகள் நடக்க, தன் கிராமத்தை அதிகார வர்க்கம் இழிவுபடுத்த, அதனால் கோபம் கொண்டு எழுவது, நேசித்தவர்களின் இழப்பைக் கண்டு வருந்துவது என தன் நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். 'வாள் தூக்கி நின்னான் பாரு' என்ற வரிக்கு ஏற்றவாறு வரும் காட்சிகள் அனைத்திலும் நம் மனதில் நிற்கிறார். இன்னொரு தேசிய விருது காத்திருக்கிறது கர்ணா!

கர்ணன்

படத்தின் மற்றொரு முக்கிய பாத்திரம் ஏமராஜாவாக வரும் லால். இதுவரை கமர்ஷியல் படங்களில் வில்லனாகத் திரிந்தவருக்குப் பல காலம் கொண்டாடப்படும்படியான ஆழமான பாத்திரம். வேறு மொழி வேறு கலாசாரம் வேறு வாழ்வியல் என்பதெல்லாம் வெளிப்படாதவாறு பொடியன் குளத்தின் ஏமனாகவே வாழ்ந்திருக்கிறார். வயது வித்தியாசம் பார்க்காத நண்பனாக, அதே சமயம் பல இடங்களில் பொறுப்பான தாத்தாவாக என அத்தனை எதார்த்தமான பாத்திரப்படைப்பு. தன் மஞ்சணத்திக்காக உருகும்போதும், கர்ணனுக்கு வழிகாட்டும் குருவாக மிளிரும்போதும், வெள்ளந்தியாக திட்டுவாங்கும்போதும் நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார். உச்சந்தலை முத்தமிட்டு வீரநடை போட்டுவரும் அந்தக் காட்சி தமிழ் சினிமா இதுவரை பதிவு செய்யாத காதல் கவிதை!

காவல்துறை அதிகாரியாக நட்ராஜ் (நட்டி), கர்ணனின் அக்காவாக லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, அரசியல்வாதியாக அழகம்பெருமாள், யோகிபாபு, கர்ணனின் காதலி திரௌபதையாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன், சண்முகராஜன், கௌரி கிஷன், ஜி.எம்.குமார், 'பூ' ராமு எனப் பல தெரிந்த முகங்கள் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தாலும் அவர்களையும் தாண்டி ஸ்கோர் செய்திருக்கிறார்கள் கிராமத்து மனிதர்கள். 'கோழிக் குஞ்சு' பாட்டி, குதிரை சிறுவன், தனுஷுடன் நிற்கும் ஊர் இளைஞர்கள், பஸ் மேல் கல் எறியும் சிறுவன் என எல்லா பாத்திரங்களும் மனதில் நிற்கின்றன.

கர்ணன்

புராணக் கர்ணனுக்குப் பலம் கவசக்குண்டலம் என்றால் இந்தக் கர்ணனின் பலம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணின் இசையும். 'கண்டா வரச்சொல்லுங்க', 'மஞ்சணத்திப் புராணம்', 'தட்டான் தட்டான்' என ஹிட்டடித்த பாடல்களின் ஒளிப்பதிவில் அத்தனை அழகியல். குறிப்பாகப் பதைபதைப்பைக் கிளப்பும் 'கண்டா வரச்சொல்லுங்க' பாடலில் தோன்றும் அந்தக் கிராம மனிதர்களின் முகங்கள் இறுதிவரை நம் மனதிலிருந்து அகல மறுக்கிறது. கலை இயக்குநர் ராமலிங்கத்தின் உழைப்பு, 90-களின் அச்சு அசல் கிராமம் ஒன்றை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறது.

இறந்தவர்களைத் தெய்வமாகக் கும்பிடும் வழக்கம், நாட்டார் தெய்வ வழிபாடு, அது தொடர்பான சடங்குகள் போன்றவை தமிழ் சினிமாவில் புதியதொரு பதிவு. தலை வெட்டப்பட்டு இருக்கும் பௌத்த சிலை, தலையில்லா சுவர் ஓவியம், பேருந்து தொடர்பான வன்முறைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல், பெயர்களை வைத்துப் பேசும் சாதி அரசியல், குதிரையில் வலம் வரும் கர்ணன், கால் கட்டப்பட்டுச் சுற்றும் கழுதை, படம் நெடுக எல்லாக் காட்சிகளிலும் தோன்றும் விலங்குகள் எனப் படம் முழுவதும் ஏகப்பட்ட குறியீடுகள். ஆனால் இவை எதுவும் துருத்திக்கொண்டு தெரியாமல் கதையின் போக்கோடே வருவது படத்தின் பலம்.

கர்ணன்

படத்தின் பெரிய குறை அதன் நீளம். குறிப்பாக முதல் பாதியின் தொடக்கத்தில் அந்த கிராமத்தின் வாழ்வியல், அந்த மனிதர்களின் வாழ்க்கை முறை போன்றவற்றை நீளமாகப் பதிவு செய்திருப்பது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனாலும், மின்னல் வேகத்தில் நகரும் இரண்டாம் பாதி அதற்கு ஈடு செய்திருக்கிறது.

இப்படியொரு ஆழமான அரசியல் படத்தில் பெண் பாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் நாயகி பாத்திரத்துக்குக் கர்ணனைக் காதல் செய்வதைவிட வேறு எதுவும் வேலையில்லை. ஒடுக்கப்பட்ட சமூகம் அவர்களுக்கான உரிமைகளைப் பெற ஒன்றாகப் போராடாமல் மீட்பராக வரும் நாயகனின் பின்னால் நிற்பது வழக்கமான தமிழ் சினிமா டெம்ப்ளேட்!

கர்ணன்
இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் மொத்தப் படக்குழுவும் 'கர்ணன்' படத்துக்குப் போட்டிருக்கும் உழைப்பு அளப்பரியது. தமிழ் சினிமாவில் பேசப்படாத மனிதர்களின் கதைகளைப் பேசும் படங்களில் மிக முக்கியமானதொரு படம் இந்த 'கர்ணன்'.


source https://cinema.vikatan.com/tamil-cinema/dhanush-starrer-karnan-movie-plus-minus-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக