Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

ஆவடி: டார்ச் லைட் சின்னத்தை விட்டுக்கொடுத்தவருக்கு அடி உதை! - வாக்குப்பதிவு நாளில் நடந்தது என்ன?

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பாண்டியராஜனும், தி.முக சார்பில் நாசரும் போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் விஸ்வாதான், அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் பெயரிலேயே கட்சி தொடங்கி தற்போது இரண்டாம் முறையாகத் தேர்தலை எதிர்கொள்கிறார்.

இந்தாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கியிருந்த டார்ச் லைட் சின்னத்தை இந்தமுறை விஸ்வநாதனின் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது.

எம்.ஜி.ஆர் விஸ்வநாதன்

மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் மறுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னத்தை ம.நீ.ம-வுக்கு திருப்பி தருமாறு கமல் கட்சியின் நிர்வாகிகள் கேட்டதின் பேரில் விஸ்வநாதன் டார்ச் லைட் சின்னத்தை விட்டுக்கொடுத்தார். டார்ச் லைட் சின்னம் விவகாரத்தின் மூலமாக மக்கள் அறிமுகம் விஸ்வநாதனுக்குக் கிடைத்தது.

சின்னத்தைத் திரும்ப ஒப்படைத்த விஸ்வநாதனுக்கு மாற்று சின்னத்தை வாக்குப்பதிவு நாள் நெருங்கும் வரையிலும், தேர்தல் ஆணையம் வழங்காததால் ஒதுக்காததால், ஆவடி தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஸ்வநாதன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் விஸ்வநாதனின் வழக்கைத் தள்ளுபடி செய்தது. தேர்தலை ஒத்திவைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததால், விஸ்வநாதன் தொகுதியில் பிரதான அரசியல் கட்சிகளின் கோபத்துக்கு ஆளாகியிருந்தார்.

இந்நிலையில் வாக்குப்பதிவின் போது, ஆவடியில் வாக்களித்துவிட்டு தொகுதியில் அமைந்துள்ள திருமுல்லைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியை பார்வையிடச் சென்றிருக்கிறார். பொதுவாக, வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்களைத் தவிர்த்து நுழைபவர்கள் தக்க அடையாள அட்டையைத் தேர்தல் அலுவலரிடமும், காவலர்களிடமும் காண்பிக்க வேண்டும். ஆனால் விஸ்வநாதன் தனது வேட்பாளர் அடையாள அட்டையை மறந்து காரிலேயே வைத்துவிட்டு வாக்குச்சாவடிக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது வாக்குச்சாவடிக்குள் காவலர்கள் விஸ்வநாதனிடம் அடையாள அட்டையைக் கேட்டிருக்கின்றனர். அதற்கு விஸ்வநாதன் தனது காரில் உள்ளதாகவும் இதோ எடுத்து வருவதாகவும் விளக்கம் கூறியிருக்கிறார். அதற்குள், வாக்குச்சாவடிக்குள் முகாமிட்டிருந்த அரசியல் கட்சியினர் சிலர் விஸ்வநாதன் மேல் கொண்ட முன் விரோதத்தின் காரணமாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காவலர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, ` நீங்கள் யார் என்னைக் கேட்பது, நானும் வேட்பாளர் தான்' என்று விஸ்வநாதன் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்தவர்கள் காவலர்கள் முன்பாகவே விஸ்வநாதனை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். அருகிலிருந்த காவலர்கள் தடுக்க முற்பட்டப் போதிலும் விஸ்வநாதன் மீது ஆத்திரம் தணியாதவர்கள் அவரை அடித்து உதைத்திருக்கின்றனர். பூத்தில் இருந்தவர்கள் தாக்கியதில் விஸ்வநாதன் நிலைக்குலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறார்.

வாக்குச்சாவடியில் எம்.ஜி.ஆர் விஸ்வநாதன்

அதைத் தொடர்ந்து காவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். அந்த மனுவில், ``வாக்குப்பதிவை ஆய்வு செய்யச் சென்ற வேட்பாளராகிய என்னை, அரசியல் கட்சியினர் சிலர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி வாக்குச்சாவடியில் அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டனர். எனவே, சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று விஸ்வநாதன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர் விஸ்வநாதனிடம் தொடர்புகொண்டு பேசினோம், ``எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியின் சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிடுகிறேன். ஏற்கனவே, கமல்ஹாசனின் டார்ச் லைட் சின்னத்தினை தேர்தல் ஆணையம் எங்கள் கட்சிக்கு ஒதுக்கிய போதே மக்கள் நீதி மய்யத்திலிருந்து கமலுக்கு நெருக்கமான சிலர் என்னிடம் சின்னத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு மிரட்டினார்கள். நான் அதன் பிறகே டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திடமே ஒப்படைத்தேன். புதிய சின்னம் ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தியதால் ஆவடியில் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தேன். அப்போது சிலர் என்னை தொலைப்பேசி மூலமாக மிரட்டினார்கள்.

இந்த நிலையில், பூத்தில் பார்வையிடச் சென்ற என்னைக் காவலர்கள் முன்னிலையிலேயே சில அரசியல் கட்சியினர் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். ஒரு வேட்பாளரைத் தேர்தல் பூத்தில் வைத்து குண்டர்கள் தாக்குகிறார்கள் என்றால், வெளியில் என்னவெல்லாம் செய்வார்கள். கும்பலாக வந்து தாக்கியதால் என்னைத் தாக்கியவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. ஆனால், என்னைத் தாக்கியவர்கள் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பாண்டியராஜன் ஆட்களாகத் தான் இருக்க வேண்டும்.

விஸ்வநாதனின் புகார் மனு

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். மேற்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/mgr-viswanathan-attacked-inside-a-polling-booth-at-avadi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக