Ad

சனி, 10 ஏப்ரல், 2021

IPL 2021: `யார் சாமி இவன்?' - ஒரே ஸ்பெல்லில் ஆர்சிபியின் வரலாற்றையே மாற்றிய ஹர்ஷல் படேல்!

ஆர்சிபி முதல் போட்டியை வென்றதை விட, மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது ஹர்ஷல் படேலின் 5 விக்கெட் ஹால். ஹர்ஷல் படேலை ட்ரேடிங் முறையில் 20 லட்ச ரூபாய்க்கு டெல்லியிடமிருந்து ஆர்சிபி அணி வாங்கிப் போட்டிருந்தது. அந்த அணியின் ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும் என விவாதிக்கும் போது கூட ஹர்ஷல் படேலை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நேற்றைய போட்டியில் சூப்பர் ஹீரோவாக ஜொலித்தது ஹர்ஷல்தான்.

கோலி, டீவில்லியர்ஸ் என்ற மாபெரும் பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்தும் ஆர்சிபியால் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற முடியாமல் இருந்ததற்கு அவர்களின் மோசமான பௌலிங்கும் ஒரு காரணமாக இருந்தது. குறிப்பாக, டெத் ஓவர்களில் கடுமையாக சொதப்புவார்கள். கடந்த சீசனில் கூட, மும்பைக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி 5 ஓவர்களில் 75 ரன்களுக்கு மேல் கொடுத்து சூப்பர் ஓவர்வரை ஆட்டத்தை இழுத்து சென்றிருப்பார்கள்.

Virat Kohli | #IPL2021

இந்த முறையும் மும்பை அணிக்கு எதிராக, அதுவும் இஷன் கிஷன், பாண்டியா ப்ரதர்ஸ், பொல்லார்ட் ஆகியோர் வரிசயில் நிற்க ஆர்சிபியின் பௌலர்கள் அடித்து நொறுக்கப்படுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 5 ஓவர்களில் மும்பை அணியால் 34 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. காரணம், ஹர்ஷல் படேல். கடைசி 5 ஓவர்களில் 3 ஓவர்களை ஹர்ஷல் படேல் வீசி 12 ரன்களை மட்டுமே கொடுத்தார். கட்டுப்படுத்தவே முடியாத முரட்டுக்காளையாக திமிறும் மும்பை அணியின் பிக் ஹிட்டர்களை அசால்ட்டாக சமாளித்துக் காண்பித்தார்.

8வது ஓவரில் தான் முதல்முதலாக ஹர்ஷல் படேலை பந்துவீச அழைத்தார் கோலி. முதல் பந்தையே நோபாலாக வீசிதான் தொடங்கினார் ஹர்ஷல் படேல். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் உட்பட 15 ரன்களை கொடுத்தார். அத்தோடு ஹர்ஷலின் ஓவரை கட் செய்துவிட்டார் கோலி. கோலிக்கு நிறைய பௌலிங் ஆப்ஷன் இருந்ததால் அவ்வளவுதான் கோலி இனிமேல் ஹர்ஷலுக்கு ஓவர் கொடுக்கமாட்டார் என்றே தோன்றியது. ஆனால், மீண்டும் 16 வது ஓவரை ஹர்ஷல் படேல் கையில் ஒப்படைத்தார் கோலி.

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் டக் அவுட் கமெண்ட்ரியில் பேசிக்கொண்டிருந்த ஸ்காட் ஸ்டைரிஸ் 'Big over alert' கொடுத்து, ஹர்ஷல் படேலை மும்பை பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கப்போகிறார்கள் என கமெண்ட் அடித்தார். ஆனால், நடந்தது அப்படியே தலைகீழ்!

ஹர்ஷல் படேல் | #IPL2021

16 வது ஓவரில் இஷன் கிஷனும் ஹர்திக் பாண்டியாவும் க்ரீஸில் இருந்தனர். இந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரியை மட்டுமே கொடுத்த ஹர்ஷல் கடைசி பந்தில் ஹர்திக்கின் விக்கெட்டையும் வீழ்த்திவிட்டார். ஃபுல்டாஷாக வீசப்பட்ட பந்தில் lbw ஆகி ஹர்திக் பாண்டியா வெளியேறினார். பேஸ் வேரியேஷனை இந்த ஓவரில் ஹர்ஷல் படேல் அற்புதமாக பயன்படுத்தியிருப்பார். 116.8, 135.7, 121.1, 133.0, 136.0, 119.0 kmph என ஒரு பந்தை வேகமாகவும் அடுத்த பந்தை மெதுவாகவும் வீசியிருந்தார். ஹர்திக் அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை 136 கி.மீ வேகத்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசியிருப்பார் ஹர்ஷல். ஹர்திக் அவுட் ஆன பந்தை வேகத்தை குறைத்து 119 கி.மீ இல் லெக் ஸ்டம்ப் லைனில் ஃபுல் டாஷாக வீசியிருப்பார். இதை கணிக்க முடியாத ஹர்திக் பாண்டியா lbw ஆகி வெளியேறியிருப்பார்.

இதேமாதிரிதான் அடுத்த 18வது ஓவரில் இஷன் கிஷனின் விக்கெட்டையும் வீழ்த்தியிருப்பார். 121.1 கி.மீ இல் இஷன் கிஷனுக்கு ஒரு ஸ்லோ பவுன்சை வீசியிருப்பார். அதை ஸ்கொயர் லெகில் அவர் தூக்கியடிக்க சிராஜ் அந்த கேட்ச்சை ட்ராப் செய்திருப்பார். அதற்கு அடுத்த பந்தை இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி 133.1 கி.மீ இல் ஃபுல் லெந்த்தில் வீசியிருப்பார். அந்தப் பந்தை கணிக்க முடியாமல் இஷன் கிஷன் lbw ஆகியிருப்பார்.

RCB | #IPL2021

இப்படி வேகத்தையும் லைன் & லெந்த்தையும் எதிரெதிராக கூட்டி குறைத்தே மும்பை பேட்ஸ்மேன்களை திணறடித்தார் ஹர்ஷல் படேல். உச்சமாக கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும், அடுத்தடுத்த பந்தில் க்ரூணால் மட்டும் பொல்லார்டின் விக்கெட்டை வீழ்த்தியது அபாரம். பொல்லார்ட் அவுட் ஆன பந்தெல்லாம் வெறும் 114.6 கி.மீ வேகத்தில் மட்டுமே வந்தது. இன்னும் கொஞ்சம் வேகம் கொடுத்திருந்தால் பொல்லார்டின் பவருக்கு பந்து மைதானத்தை விட்டு வெளியே பறந்திருக்கும்.

கடந்த சீசனில் பேட்டிங்கில் டெத் ஓவரில் அதிக ரன்களை அடித்த அணி மும்பைதான். அதேமாதிரி, பௌலிங்கில் டெத் ஓவரில் அதிக ரன்களை கொடுத்தது பெங்களூர்தான். ஆனால், நேற்றைய போட்டி அப்படியே தலைகீழாக அமைந்தது. கோலி வழிநடத்திய பெங்களூர் அணியின் வரலாற்றிலேயே சிறந்த டெத் ஓவர் பௌலிங் இதுவாகத்தான் இருக்கும்.

ஹர்ஷல் படேல் 2012-ம் ஆண்டு முதலே ஆர்சிபி அணிக்காகத்தான் ஆடி வந்தார். 2015 சீசனில் ஆர்சிபிக்காக 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால், அதன்பிறகு அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. 2018 ஏலத்துக்கு முன்பாக ஆர்சிபி அவரை விடுவிக்க, டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

RCB | #IPL2021

2019 ரஞ்சி சீசனில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த ஆண்டின் சையத் முஷ்தாக் அலி தொடரிலும் பேட்டிங்-பௌலிங் இரண்டிலுமே சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். ஆனாலும் டெல்லி அணி அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் மீண்டும் பெங்களூர் அணி அவரை ட்ரேடிங் முறையில் எடுத்தது.

ரஞ்சியில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருக்கிறார். 8 சீசனாக ஐ.பி.எல் ஆடியிருக்கிறார். இத்தனை வருட உழைப்பின் பலனை நேற்றைய 5 விக்கெட் ஹால் ஸ்பெல்லின் மூலம் அறுவடை செய்திருக்கிறார் ஹர்ஷல் படேல்.

ஆர்சிபியின் டெத் பௌலிங் பிரச்னையும் சரியாகிடுச்சே! அப்ப இந்த முறை ஈ சாலா கப் நம்தே தானா!??


source https://sports.vikatan.com/ipl/ipl-2021-who-is-harshal-patel-how-he-solved-the-death-over-issue-of-rcb

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக