Ad

சனி, 10 ஏப்ரல், 2021

`மோடியை கேட்டுக்கொள்கிறேன்.. முதலில் அமித் ஷாவைக் கட்டுப்படுத்துங்கள்!’ - மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் அவர் மாநிலத்தில் வன்முறையைத் தூண்ட முயல்வதாகக் குற்றம் சாட்டினார். முதலில் அமித் ஷாவை கட்டுப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துவேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறியதுடன், இதை நான் பொதுவில் பேசியதற்காகக் கொலை கூட செய்யப்படுவேன் என்றும் கூறினார்.

அமித்ஷா

"இதுபோன்ற ஒரு 'குண்டா' (கேங்க்ஸ்டர்), 'டங்காபாஸ்' (கலகக்காரர்) உள்துறை அமைச்சரை எனது முழு வாழ்க்கையிலும் நான் பார்த்ததில்லை. ஒரு புலியை விட அமித் ஷா மிகவும் ஆபத்தானவர். மக்கள் அவருடன் பேச அஞ்சுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியை நான் கேட்டுக்கொள்கிறேன் முதலில் அமித் ஷாவைக் கட்டுப்படுத்துங்கள். அவர் இங்கு கலவரத்தைத் தூண்டுகிறார்" என்று பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள மேமரியில் நடந்த பேரணியில் உரையாற்றியபோது மம்தா கூறியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

அமித் ஷாவின் உத்தரவின் பேரில் மத்திய காவல் படைகள் செயல்படுவதாக மம்தா முன்னரே குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் மம்தா தெரிவிக்கையில், "இந்தத் தேர்தல் வங்காளத்தை மக்கள் மற்றொரு குஜராத்தாக மாற்றுவதைத் தடுப்பதாகும். இந்தத் தேர்தல் குறிப்பாக வங்காளத்தின் பெண்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளைப் பாதுகாப்பதற்கும், எங்கள் நிலத்தின் இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும் ஆகும்" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, வட வங்காளத்தின் மாதபங்கா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் கட்சி வேட்பாளர் கிரிந்திர நாத் பர்மன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமித் ஷா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜி

"அமித் ஷா இந்த தாக்குதலைத் திட்டமிட்டுள்ளார். இங்கு (வங்காளம்) சட்டம் ஒழுங்கை குலைக்கும் வகையில் அவர் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார். அவர்கள்(பாஜக) தேர்தலில் தோல்வியடைவது உறுதியாகியுள்ளதால் இதைச் செய்கிறார்கள். நான் இதையெல்லாம் பேசுகிறேன் என்பதால் நீங்கள் என்னை கொலை கூட செய்யலாம், என் காலில் காயம் அடைய செய்த உங்களுக்கு என்னைக் கொல்ல கண்டிப்பாக திட்டமிடுவீர்கள். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. என் வாழ்க்கையின் கடைசி நாள் வரை நான் ஒரு புலி போல வாழ்வேன்" என்று அவர் கூறினார்.

மார்ச் 10 ம் தேதி தனது தொகுதியான நந்திகிராமில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலாம் மம்தாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரசாரத்திற்கு சென்று தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்கிறார்.. பா.ஜ.க. செய்த சதித்திட்டத்தின் விளைவாக அவரது காலில் காயம் ஏற்பட்டதாக திரிணாமுல் கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் இது ஒரு விபத்து, திட்டமிட்டு நடந்தது இல்லை என குறிப்பிடுகிறது.



source https://www.vikatan.com/news/politics/mamata-banerjee-target-amit-shah-in-west-bengal-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக