கிறிஸ்துமஸ் போலவே ஈஸ்டரும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது எல்லா மதத்தினரும் கொண்டாடும் ஒரு பொதுப் பண்டிகையாகிவிட்டது. ஈஸ்டர் என்றாலே முதலில் ஞாபகம் வருவது வண்ணமயமான ஈஸ்டர் முட்டைகள். குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் இந்த ஈஸ்டர் முட்டைகள் மிகப்பிரபலம்.
ஈஸ்டர் முட்டைகளுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. தொழில்முறை விவசாயம் ஆரம்பிப்பதற்கு முந்தைய காலத்தில், வசந்தகாலம் மலரும் போது முட்டைகள் மிகவும் மவுசு வாய்ந்தவையாக இருந்தது. ஏனெனில் பொதுவாக குளிர் காலங்களில் வெப்பநிலை போதமை காரணமாக கோழிகள் முட்டையிடுவதில்லை. குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கும் போது முட்டைக்கு சந்தையில் பெரும் தேவை நிலவியது. போதகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தின் கட்டணமாக கூட அக்காலத்தில் முட்டைகள் கொடுக்கப்பட்டன.
Easter Bunny!
ஈஸ்டர் மரபுகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகத் தான் உருவாகியுள்ளன. கிறிஸ்தவர்களுக்கு, ஈஸ்டர் என்பது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் கொண்டாட்டம். எனினும் தற்போது பின்பற்றப்படும் பல ஈஸ்டர் மரபுகள் பைபிளில் இல்லை. ஈஸ்டரின் மிக முக்கியமான சின்னமான ஈஸ்டர் Bunny அமெரிக்காவிற்கு குடியேறிய ஜேர்மானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட காதுகளையும் குட்டி வாலையும் கொண்ட 'Osterhase' அல்லது 'Oschter Haws' எனப்படும் இந்த முட்டையிடும் முயல் பற்றிய புராதனக் கதைகள் ஜெர்மனியில் இருந்து வந்தது என்கிறார்கள்.
15-ம் நூற்றாண்டில் ஜெர்மானியர்கள் முதல் முதலாக ஈஸ்டர் bunny கதையை உருவாக்கினர். ஒரு ஏழைத் தாய் ஈஸ்டர் அன்று தன் குழந்தைகளுக்காக பல நிறம் தீட்டப்பட்ட முட்டைகளை ஒளித்து வைத்தாராம். குழந்தைகள் அவற்றை கண்டு பிடித்தபோது, கூட்டம் கூட்டமாக முயல்கள் அங்கே துள்ளிக் குதித்து பாய்ந்து சென்றனவாம். உடனே குழந்தைகள் அந்த முயல் கூட்டம்தான் அந்த முட்டைகளை போட்டுள்ளன என்று நினைத்தார்களாம். 1680-ல் இந்தக் கதை ஜெர்மானிய இலக்கியத்தில் பதிவாகி பிரசுரமானது. பின் 1700-களில் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த ஜெர்மானியர்களால் இந்தக் கதை உலகெங்கும் பரவி இன்று நாம் காணும் ஈஸ்டர் bunny-க்கள் உருவாக்கியது.
முயல் முட்டை!
ஈஸ்டருக்கு சொல்லப்படும் இன்னொரு கதையும் மிக சுவாரஸ்யமானது. அதாவது ஒரு காலத்தில் பிறப்புக்கு பொறுப்பான கடவுளான Eostre, ஒரு நாள் கடும் பனியில் சாகக் கிடந்த ஒரு பறவையை கண்டதாம். அதன் மேல் இரக்கப்பட்ட இந்தக் கடவுள் உடனே அதனை ஒரு முயலாக மாற்றியதாம். அந்த முயலும் பனியை தாக்குபிடித்து, வசந்தகாலம் மலரும் போது பல முட்டைகளை இட்டதாம். இந்த முயல் ஏற்கனவே ஒரு பறவையாக இருந்த காரணத்தினால் முட்டை இட்டதாகவும் அதுவே ஈஸ்டர் Bunny என்றும் அக்கதை சொல்கிறது.
கொண்டாட்டத்தின் குறியீடு!
ஈஸ்டர் பண்டிகைக்கு முட்டைகளை அலங்கரிப்பது கிட்டத்தட்ட 13-ம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு வழக்கம். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் (Lent Days) தடைசெய்யப்பட்ட உணவாக முட்டை இருந்தது. எனவே மக்கள் நோன்பின் முடிவைக் குறிக்க அவற்றை வண்ணம் தீட்டி அலங்கரித்து, பின்னர் அவற்றை ஈஸ்டர் பண்டிகையன்று ஒரு கொண்டாட்டமாக சாப்பிட்டார்கள். அதுவே பின் மருகி இன்றைய பலவர்ண ஈஸ்டர் முட்டை சம்பிரதாயமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இதனை எல்லாம் சரியாக மோப்பம் பிடித்த வணிக நிறுவனங்கள் மிதமிஞ்சிய விளம்பரம் மூலம் ஈஸ்டர் பண்டிகையையும் முழுமையாக வணிகமயமாக்கி விட்டார்கள். இப்போதெல்லாம் பண்டிகைகள் வரும்போது வழிபாட்டுத் தளங்கள் களை கட்டுகிறதோ இல்லையோ வியபாரஸ்தலங்கள் சிறப்பாகவே கல்லா கட்டிவிடுகின்றன.
bunny சாக்லேட்டாக மாறியது, இனிப்பு பண்டங்கள் பரிமாறும் வழக்கம் தொடங்கியது, கலர்ஃபுல் விளையாட்டு முட்டைகள் வந்தன, அவற்றை அடுக்கி வைக்க அலங்கரிக்கப்பட்ட கூடைகளும் வந்தன.
எப்படியோ ஈஸ்டரில் சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா, மட்டன் பிரியாணி சாப்பிடலாமா வகையறா பட்டிமன்றங்களை வீட்டில் உட்கார்ந்து டிவியில் பார்ப்பதற்கு பதிலாக குழந்தைகளோடு ஈஸ்டர் முட்டைகளை ஒளித்து bunnyயை தேடி விளையாடலாம்.
Happy Easter!
source https://www.vikatan.com/spiritual/news/interesting-stories-behind-easter-eggs-and-easter-bunny
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக