Ad

சனி, 3 ஏப்ரல், 2021

மகாராஷ்டிரா: `உடனே பொதுமுடக்கம் இல்லை; ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்!’ - உத்தவ் தாக்கரே

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகபட்சமாக கொரோனா தொற்று இருந்து வருகிறது. தினமும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இதில் மும்பை மற்றும் புனேயில் தினமும் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. புனேயில் 3ம் தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டல்கள், வழிபாட்டுத்தலங்கள் ஒரு வாரத்திற்கு அடைக்கப்பட்டு இருக்கும் என்றும் புனே மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதால் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் இரவு 8 மணியில் இருந்து காலை 7 மணி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே டிவி மூலம் ஆற்றிய உரையில், `தற்போதுள்ள நிலை தொடரும் பட்சத்தில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று சொல்ல முடியாது. இப்போது பொது முடக்கம் எதுவும் அறிவிக்கப்போவதில்லை. ஆனால் நிலைமை மோசமடையும் பட்சத்தில் அரசு மாற்று ஏற்பாடுகளை ஆய்வு செய்யும்.

பிரேசில், பிலிப்பைன்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அடுத்த இரண்டு நாள்களில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படும். கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் தீர்வு அல்ல என்றபோதிலும், பொதுமக்கள் இதில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையெனில் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. பெரிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.

உத்தவ் தாக்கரே

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், அடுத்த 15 முதல் 20 நாள்களில் மருத்துவமனையில் படுக்கைகள், வென்டிலேட்டர் உட்பட சுகாதார கட்டமைப்பு வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அடுத்த சில நாள்களுக்கு கொரோனா சோதனை தினமும் 2.5 லட்சம் பேருக்குச் செய்யப்படும். மழையிலிருந்து பாதுகாப்பளிக்கும் குடையை போன்றது தடுப்பூசி. தினமும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இதை மேலும் அதிகரிக்கவிருக்கிறோம். அதோடு கொரோனா சோதனையையும் தீவிரப்படுத்தவிருக்கிறோம். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதிப்பு இருக்காது என்று அர்த்தமில்லை. எனவே, அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்” என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/maharashtra-temporarily-escapes-curfew-restrictions-to-be-tightened

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக