ஏப்ரல் 4-ம் தேதி இரவு 7 மணியுடன் அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்கள் முடிவுக்கு வந்துவிடும். ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நள்ளிரவு வரை மாநிலம் முழுக்கப் பணப்பட்டுவாடா ரகசியமாக நடைபெறும். இந்தக் கடைசிக் கட்டத்தில்தான் வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து பேசி யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை முடிவு செய்வர். அத்தகைய முடிவெடுக்கும் நேரத்தில் ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள் பற்றிய ஊழல் செய்திகள் வெளியானால், அவை மக்கள் மனதை மாற்றும். அத்தகைய யுக்தி ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறது தி.மு.க.
இது குறித்து தி.மு.க ஐடி விங்க் நிர்வாகிகள் மத்தியில் விசாரித்தோம். ``அ.தி.மு.க-வைக் கலாய்த்தும், அவர்களது ஊழல்களை அம்பலப்படுத்தியும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுவிட்டோம். இதன் இறுதி அஸ்திரமாக சில வீடியோக்களைத் தயார் செய்துவைத்திருக்கிறோம். யாருக்கு வாக்களிக்கலாம் என வாக்காளர்கள் பேசி முடிவுக்கு வரும் இறுதிக்கட்டத்தில் அவற்றை வெளியிடுவதற்காக வைத்திருந்தோம். இதோ, தேர்தல் நாளே வந்துவிட்டது. அதனால், வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியாகிவருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர்களின் ஊழல்கள் குறித்த பட்டியலை தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழக ஆளுநரிடம் கொடுத்தார். அதில் இடம்பெற்ற தகவல்களையும், ஆட்சி முடியும் தறுவாயில் எந்தெந்த அமைச்சர்கள் எங்கெல்லாம் சொத்துகளைக் குவித்துள்ளனர் என்பது குறித்த தகவல்களையும் சேர்த்து ஒவ்வொரு அமைச்சரின் பெயர், அவர் சேர்த்துள்ள சொத்துககளின் விவரங்கள் அனைத்தையும் வாட்ஸ்அப்பில் பரப்பிவிட்டிருக்கிறோம்.
செய்தி சேனல்களில் வருவது போன்று `பிரேக்கிங் நியூஸ்' என்று தொடங்கும் வீடியோ, வாய்ஸ் எதுவும் இன்றி பின்னணி இசை மட்டும் சேர்த்து அமைச்சர்களின் ஊழல்களை எழுத்துகளாக ஓடவிட்டிருக்கிறோம். மக்கள் சேனலில் வந்தது என்று நம்புவதற்காக ஏதோ ஒரு பெயரில் போலியாக சேனல் லோகோ மட்டும் ஓரத்தில் இடம்பெற்றிருக்கும். 80 சதவிகிதம் உண்மைத் தகவல் இருந்தது என்றால், சமையலுக்குக் கொஞ்சல் சால்ட்-பெப்பர் சேர்ப்பதுபோல `பிரேக்கிங் நியூஸ்' என்று 'உடான்ஸ்' தகவல்களையும் 20 சதவிகிதம் கலந்துகட்டியிருக்கிறார்கள்.
Also Read: உதயநிதியை உசுப்பேற்றுகிறதா ஐ-பேக்?! - பிரசாரத்தின்போது நடந்த கைதின் பின்னணி
மதுரையில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ என இரு அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் இருவர் குறித்த வீடியோ மதுரையில் மட்டுமே பரப்பப்படும். கட்சியின் வாடஸ்அப் குரூப்புகள், கட்சியினர் இணைக்கப்பட்டிருக்கும் இன்னும் பல வாடஸ்அப் குழுக்களிலும் தொடர்ச்சியாக ஷேர் செய்யப்படுகிறது. இதேபோல், அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த வீடியோ புதுக்கோட்டை மாவட்டத்திலும், தங்கமணி குறித்த வீடியோ நாமக்கல் மாவட்டத்திலும் பரவிவருகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்த செய்தியை விருதுநகர் மாவட்டத்துக்குள் பரப்பிவிட்டுள்ளோம். நாங்கள் அந்தந்த மாவட்டத்துக்கு தனியாகத்தான் வீடியோக்களை வெளியிடுகிறோம். எனினும், வாடஸ்அப் சமூக ஊடகம் என்பதாலும், எல்லை இல்லாதது என்பதாலும் மாவட்டம் தாண்டியும், மாநிலம் தாண்டியும், நாடு கடந்தும் வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டுவருகின்றன.
எங்கே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி ஏதும் இல்லையா என்றுதானே கேட்கிறீர்கள்... அவர் மற்ற அமைச்சர்கள் லிஸ்ட்டில் வர மாட்டார், ஏனெனில் அவர் ஸ்பெஷல். இதனால், வேலுமணிக்கு தனியாகப் பல விஷயங்களை ஸ்பெஷலாக செய்துவருகிறோம். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று வேலுமணி குவித்த சொத்துகள் பற்றியும் வீடியோக்களை கோவையில் பரப்பிவிட்டோம். அதேசமயத்தில், 2,000 ரூபாய் நோட்டில் வேலுமணி படம் போட்டு, ரிசர்வ் பேங் ஆஃப் அதிமுக எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள படம்தான் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. வாக்குப்பதிவு நெருக்கத்தில் இதைப் பார்க்கும் வாக்காளர்கள், என்னதான் ஆளுங்கட்சி பணம் கொடுத்தாலும், அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற ஒரு எண்ணம். நாங்கள் நினைத்ததுபோலவே வீடியோக்கள் தீயாகப் பரவிவருகின்றன!" என்றார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/the-last-plan-of-the-dmk-will-change-the-voters-mind
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக