Ad

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: மகாராஷ்டிரா அரசு குற்றச்சாட்டு

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பன்வெல், சாங்கிலி, சதாரா, புனே போன்ற இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது. இது தவிர மாநிலம் முழுவதும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மகாராஷ்டிரா அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், அதனை திசை திருப்ப கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிப்பதாகவும் கருத்து கூறியிருந்தார். இதற்கு மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அளித்துள்ள பதிலில், ``கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. மத்திய அரசு மீது புகார் சொல்ல விரும்பவில்லை.

ராஜேஷ் தோபே

மத்திய அரசுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். சமீபத்திய கொரோனா தடுப்பூசி ஒதுக்கிடு பட்டியல் கிடைத்திருக்கிறது. அதில் மகாராஷ்டிராவிற்கு 7.5 லட்சம் டோஸ் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு 48 லட்சமும், மத்திய பிரதேசத்திற்கு 40 லட்சமும், குஜராத்துக்கு 30 லட்சமும், ஹரியானாவுக்கு 24 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

12 கோடி மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 4.5 லட்சம் கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். தினமும் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு 40 லட்சம் டோஸ் தேவைப்படுகிறது.

தடுப்பூசி இல்லாமல் தற்போது சதாரா, சாங்கிலி, பன்வெல் போன்ற பல இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டிருக்கிறது. நாங்கள் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அதிகப்படியான கொரோனா டோஸ் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. எனவே இந்தியாவிலும் அது போன்று அனுமதிக்கவேண்டும்.

Also Read: மகாராஷ்டிரா: மீண்டும் லாக்-டெளன் அச்சம்.. மும்பை, புனேயை காலி செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

மகாராஷ்டிராவில் தடுப்பூசி மட்டுமல்லாது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ஆக்ஜிசன் மற்றும் ரெம்தெசிவிர் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரெம்தெசிவிர் மருந்தை மத்திய அரசு போதிய அளவில் வழங்கவேண்டும். இம்மருந்து 4,000 ரூபாயிக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்தால் சாமானிய மக்களும் பயனடைவர். இவ்விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் மத்திய மாநில அரசுகள் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/central-government-discriminates-in-providing-corona-vaccine-rajesh-tope

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக