தமிழகத்தில் கடந்த 6 -ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதல் மாலை வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு நாள் அன்று 2 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட பெட்டிகள் உள்ளிட்ட 4 பெட்டிகளை, இருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. முறைப்படி அரசு வாகனத்தில் அதிகாரிகள் அனுமதியுடன் எடுத்துச் செல்லவில்லை என கடும் புகார்கள் எழுப்பட்டது.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரத்தில் வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்று, வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் முதலில் அந்த வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. பழுது காரணமாக வேறு இயந்திரம் மாற்றப்பட்டிருக்கிறது. எனினும் அதனை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது விதிமீறல் எனவும், இந்த விதிமீறல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார். குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. முன்னதாக வாக்குகள் பதிவாகாத இயந்திரம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதில் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
source https://www.vikatan.com/news/election/the-vvpat-machine-taken-in-scooter-has-15-votes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக