Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

``திரௌபதி பார்த்து என்ன தப்பாகூட நெனச்சிருக்கலாம்; ஆனா, இப்ப?!" - ஷீலா ராஜ்குமார்

தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது மண்டேலா திரைப்படம். மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது மண்டேலா. இது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிய அவலங்களையும் சுய ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றுகிற அரசியல்வாதிகளையும் மிகக் கூர்மையாகவும் நேரடியாகவும் கேள்விகேட்கும் படம். படத்தில் யோகி பாபுவுடன் நடித்திருக்கிறார் டுலெட் மற்றும் திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார், அவரிடம் பேசினோம்.

மண்டேலா

``மண்டேலா படம் அனுபவம்?"

``எனக்கு போஸ்ட் வுமன் கேரக்டர்னு சொன்னதும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. போஸ்ட் வுமன் தேன்மொழிதான் மண்டேலா கேரக்டருக்கு அடையாளத்தையே கொடுக்குறாங்க. எல்லோருக்கும் பேரு இருக்கு, ஆனா அந்த அடையாளத்தை வச்சு நம்ம என்ன பண்றோம்ங்குறது முக்கியம். ஒரே ஒரு பெயரால என்னல்லாம் மாற்றங்கள் நடக்குதுங்குற விஷயமாதான் மண்டேலா கதையைப் பார்த்தேன். அதுதான் இந்தப் படத்துல கண்டிப்பா நடிச்சே ஆகணும்ங்குற உந்துதலை எனக்குக் கொடுத்துச்சு."

``யோகி பாபுவுடன் முதல்முறை நடிச்ச அனுபவம் பற்றி..?"

Sheela Rajkumar

``யோகி பாபு கூட நடிச்சிருக்கீங்க... அவர் காமெடி பண்ணிகிட்டே இருப்பாரே... எப்படி அவரை சமாளிச்சீங்கனு நிறைய பேரு கேட்டாங்க. உண்மையில நானே செம வாலுதான். பார்க்கிறதுக்குதான் அமைதி, சைலன்ட்டா இருந்துகிட்டே நிறைய சேட்டை பண்ணுவேன். யோகி பாபுவோட சேர்ந்து நானும் நல்லா காமெடி பண்ணுவேன். அவரு ஒரு கவுன்டர் சொல்ல நான் இன்னொண்ணு சொல்லனு மாறி மாறி செட்டையே கலகலன்னு வச்சிருப்போம். ஷூட்டிங் ஸ்பாட்ல ஆரம்பிச்ச பாண்டிங் இப்போ ஒரு ஃபேமிலி மாதிரி மாறிடுச்சு."

``மண்டேலா மாதிரி ஆண்களை நிஜ வாழ்க்கையிலும் பொண்ணுங்களுக்குப் பிடிக்குமா?"

``மண்டேலா கதாபாத்திரத்தை எல்லா வில்லேஜ் பொண்ணுங்களுக்கும் பிடிக்கும். பர்சனாலிட்டி எல்லாம் தாண்டி ஒரு மனுஷனா இருந்து என்ன பண்ணுறோம், அது மத்தவங்களை எப்படி இன்ஸ்பையர் பண்ணுதுங்கிறதுதான் நிஜ வாழ்க்கையில முக்கியம். அப்படியான ஒரு கதாபாத்திரம்தான் மண்டேலா. மண்டேலா தன்னோட அடையாளத்தைத் தெரிஞ்சிகிட்டு மாற்றத்தை அவர்கிட்ட அவரே கொண்டுவந்ததோடு நிறுத்தாம ஊர் மக்கள்கிட்டேயும் கொண்டுவந்தது தேன்மொழிக்குப் பிடிச்சிருந்திருக்கு. அதனாலதான் தேன்மொழி மண்டேலாவை நேசிக்க ஆரம்பிச்சாங்க. இப்படிப்பட்ட மண்டேலா கேரக்டரை எந்தப் பொண்ணுக்குதான் பிடிக்காது?"

Sheela Rajkumar

``டுலெட் டு மண்டேலா... சினிமா பயணம் எப்படிப் போகுது?"

``சின்ன வயசுல இருந்தே நடிப்பு மேல எனக்கு ஆர்வம் இருந்துச்சு. ஒவ்வொரு முறையும் ஸ்கூல்ல ஜஸ்ட் பாஸ் ரேஞ்சுல மார்க் வாங்குறப்போ `என்ன மார்க் வாங்கியிருக்க நீ'ன்னு டீச்சர்ஸ் திட்டுவாங்க. உள்ளுக்குள்ள கூலா ஃபீல் பண்ணினாலும் விதவிதமா முகத்தை பாவமா வச்சிப்பேன்.

நான் எம்.ஏ பரதநாட்டியம் படிச்சு முடிச்சிட்டு ஃப்ரீலான்ஸ் தியேட்டர் ஆர்டிஸ்ட்டா இருந்தேன். கூத்துப்பட்டறையிலும் நாடகங்கள் பண்ணியிருக்கேன். தியேட்டர் மூலமா சினிமா துறைக்குள்ள நுழைஞ்சா திறமையை முழுமையா நிரூபிக்கலாம்னு நம்பினேன். டுலெட் பட வாய்ப்பு மூலமா சினிமா துறைக்குள்ள வந்தேன். அந்தப் படம் பண்ணிட்டு இருந்தபோதே ஜீ தமிழ் சேனல்ல `அழகிய தமிழ் மகள்' சீரியல்ல நடிக்குற வாய்ப்பு வந்துச்சு. அப்படி அடுத்தடுத்து எனக்கு வந்த ஒவ்வொரு வாய்ப்பும் நல்ல சோஷியல் இம்பேக்ட் கொடுக்கக்கூடிய ஸ்ட்ராங் கதைக்களமா அமைஞ்சது."

``ஆனா, திரௌபதி மாதிரியான படங்கள் என்ன விதமான இம்பேக்ட்டை சமூகத்துல உருவாக்கும்னு யோசிச்சீங்களா?"

``பொதுவா, ஒரே மாதிரியான கேரக்டர்கள் பண்றதைவிட வித்தியாசமான கேரக்டர் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து பண்ணத்தான் எனக்குப் பிடிக்கும். ஒரு ஆர்டிஸ்ட்டா திரௌபதி கதையைக் கேட்டபோது எனக்குப் பிடிச்சது. எந்த கேரக்டர் பண்ணினா என்னோட கரியர் எப்படிப் பாதிக்கும்ங்குற புரிந்துணர்வோடதான் என் கேரக்டரைத் தேர்ந்தெடுக்கிறேன். கருத்து ரீதியா அந்தப் படத்தைப் பத்தி எதையும் நான் பேச விருப்பப்படல.

Sheela Rajkumar

Also Read: யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

படத்துல நடிச்சுக் கொடுக்குறது நடிகர்கள் கையில இருந்தாலும் படம் எப்படி புரொமோட் ஆகுது, எப்படி வெளிய வருதுங்குறது டைரக்டர்களை சார்ந்து இருக்கு. திரௌபதி படத்தோட கரு எனக்கு ரொம்ப பிடிச்சது, அதனால பண்ணேன்... பத்து பேரு என்ன தப்பாகூட நெனச்சிருக்கலாம். இப்ப மண்டேலா கதை கேட்டதும் பிடிச்சது. பண்ணியிருக்கேன். இப்ப மண்டேலா படம் பார்த்துட்டு அதே பத்து பேருக்கு என்மேல நல்ல அபிப்ராயம் வரலாம். எல்லாம் ஒரு பாடம்... அவ்ளோதான்!"



source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-sheela-rajkumar-speaks-about-mandela-draupathi-movie-experiences-her-journey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக