Ad

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

இந்து - முஸ்லீம் ஒற்றுமை: மதங்களை கடந்த நட்பு, ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்

ஜெயங்கொண்டம் அருகே மதங்களைக் கடந்து அன்பால் நண்பர்களாக இருந்த இந்து,முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த இருவர் ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நண்பர் ஜெய்லாபுதீன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜுப்லி சாலையில் வசித்து வருபவர் மகாலிங்கம் (75). இவர் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் உள்ள காளியம்மன் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவரது வீட்டுக்கு அருகில் இஸ்லாமியரான ஜெய்லாபுதீன் (66) வசிக்கிறார். ஜெய்லாபுதீனுக்கு அதே பகுதியில் அரவை மில் தொழில். இவர்கள் இருவரும் மதங்களைக் கடந்து குடும்ப நண்பர்களாக இருந்தனர்.

அவர்கள் மட்டுமல்ல, அவர்களது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் அதே போன்று இணைப்பிரியா நட்பைத் தொடர்கின்றனர். மகாலிங்கமும், ஜெய்லாபுதீனும் பள்ளி பருவத் தோழர்கள். இருவரது குடும்பமும் ஒரே குடும்பத்தினரை போல் சொந்தங்களாகவே வாழ்ந்தனர். இரு குடும்பத்தினரின் நட்பை அக்கம்பக்கத்தினர் நெகிழ்ந்து பாராட்டுகின்றனர். ஜெய்லாபுதீனுக்கு எதாவது என்றால் மகாலிங்கம் துடி துடித்து விடுவாராம். ஜெய்லாபுதீனும், மகாலிங்கத்துக்கு உடம்பு சரியில்லை என்றால் சரியாக சாப்பிடமாட்டாராம். இப்படியாக இவர்களின் உன்னத நட்பு மதங்களைக் கடந்து தொடர்ந்திருக்கிறது.

உறவினர்கள்

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மகாலிங்கத்துக்கு உடம்பு சரியில்லாமல் போகவே ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நண்பன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை எண்ணி மனம் வருந்தியிருக்கிறார் ஜெய்லாபுதீன். சிறிது நேரத்தில் ஜெய்லாபுதீனுக்கும் உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருவரும் அருகருகில் உள்ள பெட்டில் சிகிச்சை பெற்று வந்தனர். உடன் இருக்கும் உறவினர்களிடம், `அவனுக்கு ஒண்ணும் ஆகாதுல்ல, நல்லா இருக்கானா' என ஒருவரை ஒருவர் கேட்டு தெரிந்து தங்களை தேற்றிக் கொண்டனர். `உனக்கு எதுவும் ஆகாதுடா' என தங்களுக்குள் பேசி ஆறுதல்படுத்திக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி ஜெய்லாபுதீன் நெஞ்சு வலியில் துடித்திருக்கிறார்.

கோயில்

ஜெய்லாபுதீனின் வேதனைக் குரலைக் கேட்ட மகாலிங்கத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது. சிறிது நேரத்தில் ஜெய்லாபுதீன் உயிர்ப் பிரிந்தது. இருவரது குடும்பமும் கண்ணீர் விட்டு கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. `என் நண்பன் என்னைய விட்டுட்டு போய்ட்டானே' என மகாலிங்கம் புலம்பிக் கொண்டிருந்திருக்கிறார். ஜெய்லாபுதீன் உடலை அவருடைய வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

அவரது உடல் வீட்டுக்கு கொண்டு செல்வதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. நண்பன் இறந்த சோகத்தில் மகாலிங்கமும் மரணித்திருக்கிறார். மதம் கடந்து தலைமுறைகளைக் கடந்து நண்பர்களாக இருந்தவர்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து மகாலிங்கத்தின் பேரன் குருவிடம் பேசினோம், ``நட்புக்கு உதாரணமாக எங்க தாத்தாக்களை சொல்லலாம். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினை பார்த்து பல முறை வியந்திருக்கிறேன். எனக்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது அதுதான் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்ட கடைசி சுப நிகழ்ச்சி. அப்போதிலிருந்தே இருவருக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது.

மசூதி

எனக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்திய ஜெய்லாபுதீன் தாத்தா, `பேராண்டி நிச்சயதார்த்தம் முடிஞ்சுடுச்சு. இனி உன்ன மணக் கோலத்துல பார்க்கணும். நானும் என் நண்பனும் நேர்ல வந்து வாழ்த்தணும்', என ஆசையாகச் சொன்னார். ஆனால் அது நிறைவேறுவதற்குள் ரெண்டு பேருமே இறந்தது எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு. எப்போதும் பிரியாம இருப்பதுடன், எந்த இடத்திலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்துக்க மாட்டாங்க. உயிரைக் கூட ஒண்ணா சேர்த்து விட்டுட்டாங்க. இது அவங்க வச்சிருந்த உண்மையான நட்பை காட்டுது. இதன் பிறகும் எங்களது குடும்ப நட்பு தொடரும். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாவாகவும் எங்கள் குடுபங்கள் இருக்கும்" என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/2-friends-beyond-religion-dies-in-the-same-place-same-moment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக