Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

உத்தரப்பிரதேசம்: கொரோனா சிகிச்சை முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதன் காரணமாக, பல்வேறு மாநிலங்கள் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிச் சிதைந்து கொண்டிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றின் முதலாம் அலையின் போது பெரிதான உயிர்ச் சேதங்களையும், பாதிப்புகளையும் கண்டிராத உத்தரப்பிரதேசம் தற்போது மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம்

தீவிரம் அடைந்து வரும் கொரோனா தொற்றால் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மஹாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக மிகவும் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வரும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறியிருக்கிறது. மாநில சுகாதாரத்துறை நிலைமை கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்து வந்தாலும் உண்மையில் நிலைமை அங்கு தலைகீழாகத் தான் இருக்கிறது.

மருத்துவக்கட்டமைப்பு ரீதியாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், முதல்வர் யோகி ஆதித்யநாத் `உத்தரப்பிரதேசத்தில் நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக' கூறி வருகிறார்.

யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததின் காரணமாக, அங்கு பிரத்தியேக கொரோனா மருத்துவமனைகளும், சிகிச்சைக்கான படுக்கைகளும் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலத்தில் பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான படுக்கைகள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், உலகப் புகழ்பெற்ற இமாம்பரா மசூதி அறக்கட்டளை நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள மசூதிகள் அனைத்தையும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற முன்வந்துள்ளது.

இமாம்பரா மசூதி

இது குறித்து ஹுசைனாபாத் அறக்கட்டளை தலைமை நிர்வாகி மவுலானா ஜவாத் கூறுகையில், 'நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோவில் நிலைமை மோசமாக மாறியிருக்கிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகள் போதிய படுக்கைகள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பால் முழு மனித இனமும் ஆபத்தில் உள்ளது.

சக மனிதர்கள் துயரில் தவிக்கும் போது ஆதரவு கரம் நீட்ட வேண்டியது இஸ்லாம் மார்க்கத்தின் தலையாய கடமையாக இருக்கிறது. குரான், 'நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்றினால் கூட, அது மொத்த மனிதத்தையும் காப்பாற்றுவதற்குச் சமம்' என்கிறது. அந்த வகையில் மக்களுக்கு நாங்கள் இந்த நேரத்தில் உதவக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே, உலகப்புகழ் பெற்ற இமாம்பரா மசூதி மற்றும் ஹுசைனாபாத் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் அனைத்து மசூதிகளையும் நாங்கள் தற்காலிக கொரோனா சிகிச்சை முகாம்களாக மாற்ற முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் அறக்கட்டளை மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இந்த நேரத்தில் இறைவனின் தொழுகை கூடாரங்களைச் சிகிச்சை மையங்களாக மாற்றி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மவுலானா ஜவாத்

மசூதிகளைச் சிகிச்சை மையங்களாக மாற்றி அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் அனுமதி கேட்கவிருக்கிறோம். ஒவ்வொரு மசூதி கட்டிடங்களையும் குறைந்தது 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்களாக மாற்ற முடியும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவுதற்கு எங்கள் அறக்கட்டளையிடம் போதுமான நிதி இருப்பதால் எங்களால் முடிந்த அளவுக்குக் களத்தில் இறங்கி உதவுவோம். மக்கள் உயிரைக் காப்பாற்றுவது குறித்ததான பிரார்த்தனை தான் இஸ்லாத்தின் மிகப்பெரிய பிரார்த்தனை. மக்கள் உயிரைக் காப்பதைத் தான் இந்த நேரத்தில் நாங்கள் மிக முக்கிய பணியாகக் கருதுகிறோம்" என்றார்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் மசூதிகளை மருத்துவமனைகளாக மாற்ற முன்வந்துள்ள இமாம்பரா மசூதி நிர்வாகத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமாக இருக்கின்றன.



source https://www.vikatan.com/news/general-news/uttarpradesh-muslim-association-willing-to-use-mosques-for-corona-treatment-camp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக