Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

`பெண்ணின் உடல் பெண்ணின் உரிமைல்ல!' - அதிர்ச்சியூட்டும் ஐ.நா ஆய்வு... இந்தியாவின் நிலை என்ன?

சுகாதாரம், கருத்தடை மற்றும் இணையுடன் உறவுகொள்வது போன்றவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வளர்ந்து வரும் நாடுகளில் வாழ்கின்ற பெண்களுக்கு இல்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள், ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக வளர்ந்துவரும் 57 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் 45% பெண்களுக்கு கருத்தடை குறித்து முடிவெடுக்கும் உரிமையோ, தன் இணையுடன் உறவு கொள்ளலாமா, வேண்டாமா என்கிற தீர்மானத்துக்கு வருவதற்கான உரிமையோ இல்லை என்கிற தகவலும் கிடைத்திருக்கிறது.

பெண்கள் உரிமைகள்

வளர்ந்து வரும் நாடுகளில் பெண்களை அடிமைகளாக நடத்துவது மிகவும் இயல்பான ஒரு செயலாகப் பார்க்கப்படுகிறது. `இதிலென்ன தவறு இருக்கிறது?’ என்கிற ஆதிக்க மனோபாவமே மனித மனங்களை ஆக்கிரமித்துள்ளது. ஆனால், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது உரிமைகளை முழுமையாகப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் ஐ. நா-வின் `தி யுனைடட் நேஷன்ஸ் பாப்புலேஷன் ஃபண்ட் (The United Nations Population Fund)' என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புதான் `என் உடல் என் உரிமை’ (My Body is My Own)' என்கிற தலைப்பின் கீழ், மேற்சொன்ன ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வு முடிவுகளின்படி மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவில் வாழ்கின்ற பெண்களில் 50%-க்கும் குறைவான பெண்களே தங்களது உடல் குறித்த முடிவுகளை எடுக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்களாம். அதுவே, ஆசியா கண்டத்தின் பிற பகுதிகளில் 76% பெண்கள் தங்களது உடல் குறித்த அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர் என்றும் ஐ.நா சபை மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவில் வாழ்கின்ற பெண்களில் 50%-க்கும் குறைவான பெண்களே தங்களது உடல் குறித்த முடிவுகளை எடுக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள் என்ற மேற்சொன்ன ஆய்வு முடிவில் இந்தியாவும் அடக்கம் என்பது வேதனை தரும் ஒரு செய்தி. இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண்களிடம் உடல் சார்ந்த அடக்குமுறையைப் பிரயோகிப்பது என்பது பரம்பரை பரம்பரையாக ஆண்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதே கண்கூடாகத் தெரியும் உண்மையாக இருக்கிறது.

கருக்கலைப்பு

இந்தியாவைப் போலவே பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளிலும் பெண்களின் உடல் மீதான அடக்குமுறை பெருமளவு இருப்பதாக ஐ.நா சபையின் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெண்களின் உடல் மீது ஆண்கள் கையாளும் அடக்கு முறைக்கு ஆதரவாக ஒவ்வொரு நாடும் என்ன மாதிரியான சமூக வரையறைகளை வகுத்துள்ளன என்பது குறித்தும் `தி யுனைடட் நேஷன்ஸ் பாப்புலேஷன் ஃபண்ட்’ ஆய்வை மேற்கொண்டது. இந்திய நாடானது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஒரு பெண் அந்தக் கொடுமையை நிகழ்த்திய குற்றவாளியையே திருமணம் செய்துகொள்வதை ஆதரிக்கும் மக்களைக் கொண்டதாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

இது ஒருபுறமிருக்க ஆசியாவைச் சேர்ந்த மற்ற 20 நாடுகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஒரு பெண் அந்தக் கொடுமையை நிகழ்த்திய குற்றவாளியையே திருமணம் செய்துகொள்வதை ஆதரிக்கும் சட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், குற்றவாளியை சட்டத்தின் கடுமையிலிருந்து காப்பாற்றுவதற்கென்றே இதுபோன்ற சட்டங்கள் அந்நாடுகளில் இயற்றப்பட்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியூட்டுகின்றன.

`பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள், அதற்கு தான் பொறுப்பல்ல, குற்றவாளியே தண்டனைக்கு உரியவன் என்று உணராமல், நடந்த சம்பவத்துக்காக வெட்கித் தலைகுனிகிறார்கள். அவர்களை அந்நிலையில் இருந்து மீட்பதற்கு இதுபோன்ற திருமணங்கள் உதவும் என்கிற கேவலமான எண்ணமும் அம்மக்களிடையே இருக்கிறது' என்று ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பாலியல் குற்றம் செய்த நபருக்கு அவரால் பாதிக்கப்பட்ட நபரையே திருமணம் செய்து வைப்பதுதான் தண்டனை (?) என்கிற நம்பிக்கையைக் கொண்டவர்களாக மேற்சொன்ன 20 ஆசிய நாடுகளின் மக்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆண்கள் மகிழ்ந்து அனுபவிக்கும் உரிமைகளில் 75% மட்டுமே பெண்களுக்குக் கிடைக்கின்றன. ஆனால், மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கான உரிமைகள் நம்பிக்கை அளிக்கும் வண்ணம் இருக்கின்றன என்கிற தகவலும் ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை

Also Read: ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்... யார் இந்த அரோரா அகங்க்ஷா?

ஆனால், திருமணத்துக்குப் பிறகு கணவனால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைக்கு (Marital Rape) எதிரான சட்டங்கள் மற்ற 43 ஆசிய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதன் காரணமாக ஒரு பெண்ணுக்கு தனது இணையுடன் எப்போது உறவுகொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்ற உரிமை கிடைக்காமலேயே போய்விடுகிறது என்பதையும் ஐ.நா சபையின் ஆய்வு முடிவுகள் அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றன.

பெண், இந்தப் பூமியின் ஒடுக்கப்பட்ட இனம். அவள் உடல் எப்போதுமே பாதிக்கப்பட்ட நிலம்.



source https://www.vikatan.com/social-affairs/women/unfpa-report-says-women-in-57-developing-countries-denied-bodily-autonomy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக