Ad

திங்கள், 26 ஏப்ரல், 2021

``தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றிய கவலை வேண்டாம்!” - நம்பிக்கை தரும் மருத்துவக் கட்டமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த நாட்டையும் மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3 லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனால், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 70 லட்சத்தை எட்டியிருக்கிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 28 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில், தமிழகத்திலும் நேற்று கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இதுவரைக்கும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1,05,180 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

கொரோனா

அதேவேளை, வட மாநில மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், ஒரே படுக்கையில் மூன்று பேர் படுத்திருப்பதும் ஆக்ஸிஜன் உருளைகளுடன் மக்கள் ஆங்காங்கே மரத்தடிகளில் சோர்வாகக் காட்சியளிப்பதையும் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆனால், அதுபோன்ற ஒரு நிலை தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் போதுமான அளவு படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைக் கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் இந்த நேரத்தில் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவுக்காக மட்டுமே மருத்துவமனைகளில் 54,417 படுக்கைகளும், தீவிர சிகிச்சைக்காக 6,879 படுக்கைகளும், தவிர கோவிட் கேர் சென்டர்களில் 38,426 படுக்கை வசதிகள் என கிட்டத்தட்ட ஒரு லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. இன்னும் படுக்கை வ்சதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல, கொரோனா வைரஸ் முதன்மையாகத் தாக்குவது நுரையீரலைத்தான். அதனால் ஏற்படும் மூச்சுத்திணறலைச் சமாளிக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கையாக ஆக்ஸிஜன் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இறந்தவர்களைப் புதைக்கக்கூட இடமில்லாத அளவுக்கு அங்கு மரணங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், இந்த விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாகத்தான் திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் கோரோனாவுக்காக உருவாக்கப்பட்ட 54,417 படுக்கைகளில், 32,942 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், மாவட்டந்தோறும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் திரவ ஆக்ஸிஜனைச் சேமித்து வைத்துக்கொள்ளும் டாங்குகள் இருக்கின்றன. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 888 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனைச் சேமித்து வைத்துக் கொள்ளும் கிடங்கு வசதி இருக்கிறது. அரசு மட்டுமல்லாது தனியார் வசம் உள்ள கிடங்குகளையும் சேர்த்துக்கொண்டால் ஒட்டுமொத்தமாக,1,167 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு வசதியுள்ளது. அதுதான் தற்போது தமிழகத்துக்குக் கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை, 395 மெட்ரிக் டன்னாக இருந்த சேமிப்புக் கிடங்கு வசதி இந்த ஓராண்டில் 888 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 240 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன் தேவை இருக்கிறது. இதற்காகவே தனியாக ஒரு கட்டுப்பாட்டு மையத்தை அரசு உருவாக்கியுள்ளது. மேலும், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் தரவுகளின் படி, தமிழ்நாட்டில் ஏற்கனவே மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 220 மெட்ரிக் டன் என்ற அளவைத்தாண்டி ஆக்ஸிஜன் நுகர்வு 310 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதமும் எழுதியுள்ளார். ''தற்போது மாநிலத்தின் ஆக்ஸிஜன் உற்பத்தித் திறனானது 400 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. ஆனால், விரைவில் இங்கு 450 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலை வரக்கூடும்'' எனவும் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

ஆக்ஸிஜன் தொடர்பாக மேலும் சில தகவல்களைத் தெரிந்துகொள்ள மருத்துவ அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்:

''தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் நாளொன்றுக்கு இருபதாயிரம் லிட்டர் கொள்ளளவு வசதிகொண்ட இரண்டு ஆக்ஸிஜன் டேங்க் இருக்கிறது. நாளொன்றுக்கு தற்போது இருபதாயிரம் லிட்டர் வரை செலவாகிறது. தொடர்ந்து ஃபில் செய்து கொண்டே இருக்கிறோம். இதற்காகவே இரண்டு பேர் பணியமர்த்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு மட்டுமல்ல ஸ்டான்லி உள்ளிட்ட பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இதே போல டேங்குகள் இருக்கின்றன. மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் கடந்த ஆண்டு வரை 6000 லிட்டர் வசதியுடன் இருந்த டேங்க் இப்போது இருபதாயிரம் லிட்டர் வசதி கொண்ட டேங்காக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது. ஆனால், எந்த மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. தனியார் நிறுவனங்களிடம் இருந்தான் ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்கிறோம். உதாரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு திருப்பெரும்புதூர் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஐநாக்ஸ் (INOX) கம்பெனியில் இருந்துதான் வாங்கிக் கொள்கிறோம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்படும்.

Also Read: `தமிழ்நாட்டுக்கு ஆக்ஸிஜன் தேவை; பிற மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது' - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் உள்ளது போன்ற ஆக்ஸிஜனைச் சேமித்து வைக்கும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் வட இந்திய மாநிலங்களில் தற்போது கடும் சிரமத்துக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். அதேபோல, அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று நமது அரசு போட்டிருக்கிற ஒப்பந்தங்கள்தான் இப்போது நம் மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தற்போதுவரை நம் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவையைவிட அதிகமாகவே இருக்கிறது. ஆனால், நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் தேவை அதிகமாகி வருகிறது. அதற்கும் தகுந்த முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

ஆக்சிஜன் படுக்கை அறைகள்

தமிழக அரசு மருத்துவமனைகளில், பல ஆண்டுகளாக அறுவை சிகிச்சைகள் நடந்து வருவதால் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது. அதேபோல, புயல், வெள்ளம் போன்ற எந்தவொரு நெருக்கடியான காலகட்டத்திலும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படும்'' என்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/what-is-the-status-of-tamil-nadu-in-medical-oxygen-production

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக