மகாராஷ்டிராவில் தினமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு இம்மாதம் 30-ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லை என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ``கொரோனாவை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று ஏற்கனவே எச்சரித்திருந்தேன்.
மகாராஷ்டிராவில் சுகாதாரப்பணியாளர்கள் 86 சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 41 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்கள் 73 சதவீதம் பேருக்கு மட்டுமே முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 41 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 25 சதவீதம் முதியோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியில் கவனம் செலுத்தாத இது போன்ற அரசுகள் கவனத்தை திசை திருப்ப மருந்து பற்றாக்குறை என்று கூறுகின்றன. மகாராஷ்டிரா மக்கள் பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது என்று கூறுவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியதை திசை திருப்பவே. மகாராஷ்டிரா அரசு இதில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளாமல் இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மாறாக மக்களிடம் பயத்தை பரப்பி அவர்களை முட்டாளாக்க பார்க்கிறது. கொரோனா தடுப்பூசி விநியோகம் சீராக கண்காணிக்கப்படுகிறது. தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்று கூறப்படுவது ஆதாரமற்றது.
சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் மகாராஷ்டிரா அரசின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை. பண வசூலுக்காக அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்து கொரோனா நோயாளிகளை தப்பிக்க விட்டு, மக்களை ஆபத்தில் தள்ளி இருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மகாராஷ்டிராவிற்கு அனைத்துவிதமான ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளது. அதோடு மத்திய குழுவையும் அனுப்பி உதவி இருக்கிறது. ஆனால் மாநில அரசு இதில் போதிய ஆர்வம் காட்டவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பாஜக விமர்சனம் செய்து வருவதை சிவசேனா கண்டித்துள்ளது. ``கட்டுப்பாடுகளை கொண்டு வந்த போது எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நவிஸ் அதற்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் இப்போது அதனை பட்நவிஸ் எதிர்க்கிறார்” சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/maharashtra-government-fails-to-control-corona-union-health-minister-harshwardhan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக