Ad

புதன், 7 ஏப்ரல், 2021

மும்பை வீழ்த்தவே முடியாத அணியா... ரோஹித் ஷர்மா ஹாட்ரிக் சாம்பியன்ஷிப் வெல்வாரா? LEAGUE லீக்ஸ் -7 #MI

தனக்கான ஒரு நிரந்தர கோர் டீம், மாறாத ப்ளேயிங் லெவன், பயமுறுத்தும் பௌலிங் படைபலம், பயமறியா பேட்டிங் லைன் அப், அசத்தும் ஆல் ரவுண்டர்ஸ், கெத்தான கேப்டன்ஷிப் என வெற்றிக்கான அத்தனை அம்சங்களும், மொத்தமாய்ப் பொருந்திப் போகும் அணி மும்பை இந்தியன்ஸ்.

ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் வெறியோடு விளையாட இருக்கும், மும்பைக்கு அதற்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது, பலவீனமேயில்லாத அணிதானா மும்பை, யாராலும் வீழ்த்தவே முடியாதா?!

பலவீனம் - 1 : ஸ்பின் சோகங்கள்!

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை முதல் சீசன் தொட்டு, எந்த பிரச்னையும் மும்பையை ஆட்கொண்டதில்லை. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் மலிங்கா, ஒன்பது சீசன்களாய், ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், அவரது ஓய்வு, வெற்றிடமாய் மாறாமல், பும்ரா நிரப்பி விட்டார். ஆனால், சமீபகாலமாக, அவர்களது சுழற்பந்து வீச்சுதான், அவர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு, சுழலுக்குச் சாதகமான அரபு மண்ணில் கூட, மும்பையின் சுழற் படையால் சாதிக்க முடியவில்லை. பிரதான சுழற்பந்து வீச்சாளரான, ராகுல் சாஹர் மற்றும் பார்ட் டைம் பௌலர் க்ருணால் பாண்டியாவின் கூட்டுச் சராசரி எக்கானமி 7.72. அதேபோல் அவர்களது, விக்கெட் வீழத்தும் பௌலிங் ஸ்ட்ரைக் ரேட், 24.23 மட்டுமே. அதாவது கிட்டத்தட்ட, நான்கு ஓவர்களுக்கு ஒருமுறை மட்டுமே இந்தக் கூட்டணி, விக்கெட் வீழ்த்தியுள்ளது. மும்பையுடன் டெல்லியை ஒப்பிடுகையில், இந்த வருடம் மிகச் சுமாராக இருந்ததாகக் கூறப்படும், முக்கிய ஸ்பின் பௌலர்களான அஷ்வின் மற்றும் அக்ஸரின் கூட்டுச் சராசரி 7.035. இந்த வேறுபாடு மட்டுமல்ல, மிடில் ஓவர்களில், இவர்களது ரன்ரேட் எட்டுக்கும் மேல் என்பது தெளிவாகச் சொல்கிறது எந்த அளவு மிடில் ஓவர்களில், மிக தாராளமாக ரன்களை சஹார், க்ருணால் வாரி வழங்கியுள்ளனர் என்பதை. சிறந்த வீரர்களை உருவாக்குவதில் முனைவர் பட்டம் பெற்ற மும்பை, ஏன் இதற்குரிய தீர்வை இன்னும் காணவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

பலவீனம் - 2 : ரோஹித்தின் ஃபார்ம்!

இந்திய அணியில் ரோஹித்தின் ஃபார்ம் தேய்பிறை வளர்பிறை என இரண்டையும் கண்டாலும், ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக, இறங்குமுகமே கண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 1,356 ரன்களைக் குவித்திருக்கும் ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் 127.8 மட்டுமே. அதற்கு முந்தைய ஆண்டுகளுடைய ஸ்ட்ரைக் ரேட்களின் சராசரி 132. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில்,ரோஹித் ஒரு படி அதிகமாகவே பின்தங்கியுள்ளார். அவரது அதிகபட்ச பேட்டிங் ஆவரேஜ் 29-ஐ கூட தாண்டவில்லை என்பதே எடுத்துரைத்துவிடும் அவரது பேட்டிங் ஃபார்மை. கேப்டனாக ரோஹித்தின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பவே முடியாதெனினும், கோப்பையை மறுபடி ஒருமுறை கையில் ஏந்தத் துடிக்கும் அணிக்கு, பேட்ஸ்மேனாகவும், ஓப்பனராகவும் ரோஹித் இன்னமும் அதிகமாய்த் தேவைப்படுகிறார்.

ரோஹித்

பலவீனம் - 3 : மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்!

ட்ரென்ட் போல்ட், ஆயிரம் வோல்ட்டாக, பேட்ஸ்மேன்களை பவர்ப்ளே ஓவர்களில் அதிர வைக்கிறார். பும்ராவோ டெத் ஓவர்களில், பேட்ஸ்மேன்களை டெட் எண்டுக்கே அழைத்துச் செல்கிறார். ஆனாலும் அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்பது இன்னமும் தீராத குழப்பமாகத்தான் இருக்கிறது. ஏழு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே கூல்டர் நைல் வீழ்த்தி இருந்தார். இதை அடுத்து இந்த வருடம் மும்பை அவரை அணியில் இருந்து வெளியேற்றியது. கடந்த ஆண்டு 8 கோடிக்கு அவரை அணியில் வாங்கியிருந்த மும்பை இந்தியன்ஸ் அவரை விடுவித்துவிட்டு மீண்டும் இந்தாண்டு அவரையே 5 கோடிக்கு வாங்கியது. அதேபோல், பேட்டின்சன் கடந்த சீசனில், 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார். தலா 15 போட்டிகளில், முறையே 27 மற்றும் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த பும்ரா மற்றும் போல்ட் ஏற்படுத்திய தாக்கத்தை இவரால் ஏற்படுத்த முடியவில்லை. சாம்பியன்ஷிப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு, பூதக்கண்ணாடி அணிந்து பார்க்கும்போது, இந்த பலவீனங்களும் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியவையாகவே மாறுகின்றன.

2021 சவால்கள்! ப்யூஷ் சாவ்லா ஸ்பின் பிரச்னைக்குத் தீர்வா?!

ஸ்பின் பிரச்னையை சரி செய்வதற்காக, மும்பை இந்தியன்ஸ் இந்த ஐபிஎல்-ல் சாவ்லாவை புதிதாக எடுத்துள்ளது சரியான முடிவுதானா என்பது அனைவரையும் விழிவிரிக்கச் செய்யும் விஷயமாகவே உள்ளது. ஏனெனில் 6.75 கோடிக்கு, சிஎஸ்கேயால் வாங்கப்பட்ட சாவ்லா, கோடிக்கு ஒரு விக்கெட்டாக ஆறு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார். இவருக்கு சஹாரே பரவாயில்லை எனுமளவிற்கு 9.09-வாக இருக்கிறது அவரது கடந்த ஆண்டு எக்கானமி. இப்படி ஒருவர் எப்படி மும்பையின் ஸ்பின் பௌலிங் பிரச்னையைத் தீர்ப்பார் என்பதே ரசிகர்களின் ஆதங்கம். அதில் நியாயம் இல்லாமலும் இல்லை.

ஆடம் மில்னே!

நைலை வெளியேற்றிய வேகத்தில், ஆடம் மில்னேவை 3.20 கோடிக்கு வாங்கிப் போட்டுள்ளது மும்பை. 2016 -17 சீசன்களில், ஆர்சிபிக்காக விளையாடிய மில்னே, 2018-ல் கம்மின்ஸ் காயமடைந்த போது அவருக்கு மாற்று வீரராக, மும்பையில் இணைந்தார். எனினும் ஒரு போட்டியில் கூட மும்பைக்காக ஆடவில்லை. அந்த மில்னேவை திரும்பக் கொண்டு வந்துள்ளது மும்பை. 23 சர்வதேசப் போட்டிகளில், நியூஸிலாந்துக்காக ஆடி இருக்கும் மில்னே, மொத்தம், 28 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 21.39 என்பது மில்னேவின் கௌரவமான பௌலிங் ஆவரேஜ். இதுதான் மும்பையின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பேஷ் தொடரில் 12 போட்டிகளில், 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழத்தி இருந்த மில்னேயின் பௌலிங் ஸட்ரைக் ரேட் 52.8. இந்த எண்கள்தான் மும்பை தேடிக் கொண்டிருந்த மூன்றாவது வேகப் பந்து வீச்சாளர் மில்னேதானா என்பதை சந்தேகிக்க வைக்கிறது.

பும்ரா

எதிர்பார்ப்பு அதிகம்!

குறுகிய காலத்தில், 70 சர்வதேச சதங்களைச் சேர்த்திருந்தாலும், அந்த வராத ஒரு சதம்தான் இங்கே எல்லோரையும் உறுத்துகிறது. கோலி தனக்காக நிர்ணயம் செய்து வைத்த அளவுகோல் அப்படி. அதேதான் மும்பை இந்தியன்ஸுக்கும்! தோல்வி அவர்களைத் துவளச் செய்யாது எனினும், ஹாட்ரிக் சாம்பியன்ஷிப்புக்கான தொடர் என்னும் முள்கிரீடம், சற்று அதிகமான அழுத்தத்தையே அவர்கள் மேல் ஏற்றி வைக்கும். அதை மும்பை எப்படி எதிர்கொள்ள இருக்கிறது என்பதுவே அவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதற்கான ஊன்றுகோல்! இது மட்டுமன்றி, மும்பையுடன் மோதுகிறோம் என்பதே எதிரணிக்கு சிறப்பான திட்டமிடலைச் செய்ய வைக்கும். மும்பைக்கான ப்ளஸ்ஸும் இதுதான், மைனஸும் இதுதான்!

2021 சாதகங்கள் : பௌலர் பாண்டியா இஸ் பேக்!

போன சீசன் முழுவதும் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா பௌலிங் செய்யவில்லை, இருந்தாலும் மற்ற பௌலர்களை வைத்துச் சமாளித்து வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது மும்பை இந்தியன்ஸ். இந்த வருடம் ஹர்திக் பாண்டியா டி20 ஃபார்மேட்டில் மீண்டும் பௌலிங் செய்யத் தொடங்கியிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் அற்புதமாகப் பந்து வீசி, பல ஸ்லோ கட்டர்கள், பவுன்சர்கள் என தன்னுடைய பழைய ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார். இவரோடு சேர்த்து ஏழு பௌலர்கள் இருக்க, அணிக்கு அசுரபலம் கிடைத்துள்ளது.

சூர்யா - இஷான்!

மற்ற அணிகளில் எல்லாம் பவர்ப்ளே ஓவர்களில், ஓப்பனர்கள் அவுட் ஆனால் கவலைப்படுவார்கள். ஆனால், மும்பை அணியிலோ அப்படி எந்த ஒரு கவலையும் இல்லை. அணியின் ரன்ரேட் விகிதம் ஒருபோதும் குறையாது. அதற்கு முழுக்காரணம் இந்த ஜோடிதான் . கிரீஸுக்குள் வந்தவுடன் தங்களின் ரன்வேட்டையை ஆரம்பித்துவிடுவார்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன். கடந்த இரண்டு வருடங்களில் இருவரும் இணைந்து எடுத்துள்ள ரன்கள் மட்டும் 1521. இருவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 135-க்குக் குறையவில்லை . இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இருவரும் அதிரடி அரை சதம் அடித்து அசத்தியிருக்கிறார்கள். இதே ஃபார்ம் தொடரவே அதிக வாய்ப்பிருக்கிறது. டி காக்கிற்கு ஒருவேளை காயம் ஏற்பட்டால், அந்த வெற்றிடத்தை நிரப்ப இஷான் தயாராக இருப்பது, அணிக்குக் கூடுதல் பலம்.

பாண்டியா - பொல்லார்ட்!

அதிரடியே தங்கள் பிரதானம், அதுவே தங்கள் தாரக மந்திரம் என்பதை மிகவும் நம்பும் கூட்டணி பாண்டியா - பொல்லார்ட் கூட்டணி. உள்ளே வந்த முதல் பந்தில் இருந்து, தாங்கள் நிற்கும் கடைசிப்பந்து வரை, பந்தை பவுண்டரி லைனுக்கு அனுப்புவதையே தங்கள் வாடிக்கையாக வைத்துள்னர். இந்த இருவரும் கடந்த இரண்டாண்டுகளில் டெத் ஓவர்களில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் எடுத்துள்ள ரன்கள் மட்டுமே 682. அதுவும் டெத் ஓவர்களில், இவர்களின் ஸ்ட்ரைக் ரேட் 12-ற்கு எப்போதும் குறையாது. இந்த ரன்களும் ஸ்ட்ரைக் ரேட்டுமே சொல்லிவிடும், இவர்கள் எத்தகைய அதிரடி ஆட்டத்தை ஆடியிருக்கிறார்கள் என்று. இந்த ஆண்டும் இந்த அதிரடி தொடரும் பட்சத்தில், கோப்பையை மும்பையின் பெயரிலேயே எழுதிவிடலாம்.

இஷான் கிஷன்

போல்ட் - பும்ரா!

கடந்த சீசனில் மும்பை எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் கோப்பையை எளிதாக வெல்ல காரணமாக இருந்தவர்களில் முக்கியமான கூட்டணி பும்ரா, போல்ட் கூட்டணி. கடந்த சீசனில் மட்டும் இருவரும் சேர்ந்து எடுத்துள்ள விக்கெட்டுகள் மட்டும் 52 அதுவும் ஓப்பனிங் ஓவர்களில் போல்ட் விக்கெட்டுகள் எடுக்க, டெத் ஒவர்களில் பும்ரா விக்கெட் எடுக்க என இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு எதிரணியை தடுத்து நிறுத்தினார்கள். பும்ரா கடந்த 3 ஆண்டுகளில் டெத் ஓவர்களில் மட்டும் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுவும் எக்கானமி 8-ஐ கூட எப்போதும் தொட்டதில்லை. மலிங்கா இல்லாத குறையை இனிவரும் ஆண்டுகளில் பார்த்துகொள்ளும் பௌலராக பும்ரா இருக்கப்போகிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பும்ரா போல்ட் கூட்டணியை உடைப்பதில் தான் எதிரணியின் வெற்றியே அடங்கியிருக்கிறது.

உத்தேச ப்ளேயிங் லெவன்!

ரோஹித் ஷர்மா, டி காக் , சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் , பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா , க்ருணால் பாண்டியா , தீபக் சஹார், பும்ரா , ட்ரென்ட் போல்ட் , ஆடம் மில்னே/ கூல்ட்டர் நைல்

இதுவரை 5 கோப்பைகளை வென்ற அணி 6-வது முறையாக கோப்பையை வெல்லவும், ஹாட்ரிக் கோப்பையை தங்கள் கைகளில் தழுவவும் ஆயத்தமாகி வருகிறது . போன சீசனில் விளையாடிய அதே அதிரடி யுக்தியை கையிலெடுத்து அதைச் சிறப்பாகச் செய்தாலே போதும், கோப்பை மும்பையைத் தேடி தானாக வரும் .



source https://sports.vikatan.com/ipl/mumbai-indians-team-analysis-for-2021-iplpl-season

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக