புதுக்கோட்டைச் சட்டமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் இயற்கை விவசாயி மூர்த்தி, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்குப் போட்டியாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மூர்த்தி, புதுக்கோட்டைத் தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், பிரசாரத்தின் கடைசி நாளில் வேட்பாளர் மூர்த்தி புதுக்கோட்டை கீழ 4ம் வீதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மூர்த்தியின் செல்போன் எண்ணுக்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது.
அதில், மூதாட்டியின் அறுவை சிகிச்சைக்காக ஏபி பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுவதாகவும், உங்களால் ரத்ததானம் செய்ய முடியுமா என்று அவர் கேட்க, என்னுடைய ரத்தமும் ஏபி பாசிட்டிவ் தான் இதோ உடனே வருகிறேன் என்று கூறியவர் பிரசாரத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று ரத்ததானம் கொடுத்தார். தேர்தல் பரப்புரைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சரியான நேரத்தில் ரத்தம் கொடுத்து மூதாட்டியின் உயிரைக் காப்பாற்ற வழிவகை செய்த மூர்த்திக்கு மூதாட்டியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
இதுபற்றி இயற்கை விவசாயி மூர்த்தியிடம் கேட்டபோது, "கொடையிலேயே ரத்ததானக் கொடை தான் சிறந்தது. நாம் கொடுக்கும் சிறிதளவு ரத்தம் யாரோ முகம் தெரியாத ஒருவரின் உயிரையே காப்பாற்றும். என்னுடைய வாழ்நாளில் தற்போது 67வது முறையாக ரத்ததானம் செய்கிறேன். நான் ரத்தம் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், ரத்த தானம் அனைவரும் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், சிவகாமி ரத்ததானக் கழகம் என்ற அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான யூனிட் ரத்தத்தைக் கொடையாகப் பிரசவத்திற்கும், மருத்துவமனைக்கும் கொடுத்திருக்கிறோம்.
அதோடு, எங்களுடைய பெயர், செல்போன் நம்பர் உள்ளிட்டவை மருத்துவமனையில் இருக்கிறது. அவசர அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டதால், என்னை அழைச்சிருக்காங்க. பிரசாரத்தைக் கூட அப்பறம் பார்த்துக்கலாம். ஆனா, ஒரு உயிரைக் காப்பாத்தணும்கிறது ரொம்ப முக்கியம்ல, அதனால தான் பரப்புரையை பாதியோட முடிச்சிட்டு உடனே மருத்துவமனைக்குப் போய் ரத்ததானம் கொடுத்தேன். நம்மலாள ஒருத்தவங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கப்போகுதுங்கிறத நினைக்கிறப்பவே மனசுக்கு ரொம்ப மகிழ்வா இருக்கு" என்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/mnm-candidate-stopped-the-campaign-and-went-to-blood-donation-in-emergency
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக