மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் வேட்பாளர் பத்மபிரியா, “பூத் ஏஜெண்டாக பணியாற்ற ஆட்கள் தேவை” என்று விளம்பரம் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார். ஒரு கட்சியில் பூத் ஏஜெண்டாக பணியாற்றக் கூடவா ஆட்களில்லை? என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. சரி, பூத் ஏஜெண்டுகள் என்றால் யார்? அவர்களுக்கான பணிதான் என்ன? என்பது குறித்து திராவிடக் கட்சியின் சென்னையிலுள்ள தொகுதி ஒன்றின் வேட்பாளரின் பூத் ஏஜென்ட்டிடம் பேசினோம்.
“அரசியல் கட்சிகளில் நாங்கள் பி.எல்.ஏ என்று அழைப்போம். அதாவது பூத் லெவல் ஏஜென்ட். ஒரு பாகத்துக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். ஒரே பள்ளி வளாகத்தில் நான்கைந்து பூத்கள் கூட அமைக்கப்படும். அப்படி அமைக்கப்படும்போது ஒவ்வொரு பூத்திலும் அத்தொகுதியின் வேட்பாளர் அங்கேயே இருக்க முடியாது. அதற்காகத்தான் ஒவ்வொரு பூத்துக்கும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளாக பூத் ஏஜென்ண்ட்டுகள் இருப்போம். இதற்காக வேட்பாளரும், அவர் சார்ந்த கட்சியும் எங்களைத் தேர்வு செய்து, கையொப்பமிட்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திட வேண்டும்.
அப்படி அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் பூத் ஏஜென்ட்களாக செயல்பட முடியும். இடையில் வந்து சேர்ந்துகொள்வது என்பது முடியாத காரியம். எனினும் எங்களுக்கு துணைக்காக நாங்கள் சப்-ஏஜென்ட்டுகளை நியமித்துக்கொள்ளலாம். பூத்துக்கு செல்வதற்கு முன்பாக எங்களிடம் அந்த பாகத்தில் இருக்கும் வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல் கொடுக்கப்படும். ரமேஷ் என்பவர் வாக்களிக்க வருகிறார் என்றால், குறிப்பிட்ட பாகத்தில், எத்தனையாவது சீரியல் எண்ணில் அவர் பெயர் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதற்காக அவர் வாக்காளர்கள் அடையாள அட்டையோ, அது இல்லாமல் பூத் சிலிப்போ இல்லை, ஆதார், பான், பாஸ்போர்ட் போன்ற இதர 14 வகையான அடையாள அட்டையோ வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
ரமேஷ் என்பவரின் பெயர் சரியாக இருக்கும்பட்சத்தில், அவர் அப்போதுதான் வாக்களிக்க வருகிறாரா இல்லை ஏற்கனவே வாக்களித்துவிட்டுச் சென்றுவிட்டாரா என்பதையும் சரிபார்க்கவேண்டும். பூத்தில் இருக்கும் அரசு அதிகாரி இதனை வாக்காளர்கள் பட்டியலை வைத்து சோதித்துப் பார்த்து, பெயர் இந்த பாகத்தில், இந்த சீரியல் எண்ணில் இருக்கிறது என்று சொல்லும்போது, வேட்பாளர்களின் பூத் ஏஜென்ட்டுகளும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டியலில் சரிபார்த்து ஓகே சொல்லிட வேண்டும். அதன்பிறகுதான் அந்த நபர் வாக்களிக்கும் விரலில் மை வைத்துக்கொண்டு, வாக்களிக்க வேண்டும். அப்படி ஒருவேளை ரமேஷ் பெயரில் ஏற்கனவே வாக்குப் பதிவாகி இருந்தது என்றால், அதுகுறித்து பூத் ஆபிஸரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றிட வேண்டும்.
முக்கியமான விஷயம், வாக்குப்பதிவு தொடங்கும் முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதித்துப் பார்க்கும் விதமாக அனைத்து வேட்பாளர்களின் ஏஜென்ட்டுகளையும் சாம்பிள் வாக்கைச் செலுத்தச் சொல்வார்கள். சரியாக பட்டன் வேலை செய்கிறதா, எந்த கட்சி வேட்பாளரின் பெயர், சின்னத்துக்கு அருகே இருக்கும் பட்டனை அழுத்தினோமோ அந்த கட்சிக்குத்தான் ஓட்டுப் பதிவானதா? ஒப்புகைச்சீட்டு வரும்படியான எந்திரம் என்றால் அந்த ஒப்புகைச்சீட்டு சரியாக வருகிறதா என்பதையெல்லாம் சோதனை செய்த பிறகு, முழுமையாக அதனை அழித்துவிட்டுத்தான் வாக்குக்குப் பதிவையே துவக்குவார்கள். காலையில் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி, மாலையில் அதிக மக்கள் வந்தார்கள் என்றால், பூத் ஆபிசரிடம் நாங்கள்தான் நேரத்தை அதிகப்படுத்திக் கேட்க வேண்டும்.
Also Read: திமுக நிர்வாகிகள் வீடுகளில் ஐ.டி ரெய்டு; செக் வைக்கும் டெல்லி - 5 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தமா?
பூத் ஏஜென்ட்டுகளாலும் முழு நேரமும் வாக்குச்சாவடியிலேயே இருக்க முடியாது. அவ்வப்போது இயற்கை உபாதைகள் அழைக்கும், மதிய உணவு உட்கொள்ள வேண்டும். அந்நேரங்களில் நாங்கள் சப்-ஏஜென்ட்டாக நியமித்தவர்களை உள்ளே உட்காரைவைத்துவிட்டுச் செல்வோம். எனினும் வாக்குப்பதிவு முடிவடையும் சமயத்தில் மெயின் ஏஜென்ட்களான நாங்கள்தான் பூத்தில் இருந்தாக வேண்டும். வாக்குப்பதிவு மொத்தமாக முடிந்த பிற்பாடு, ஒரு பூத்தில் எத்தனை வாக்குகள் பதிவானது என்பது குறித்து பூத் ஆபிசர் சோதித்து அதனை காப்பியாக ஏஜென்ட்டுகளுக்குக் கொடுப்பார். ஒரு பூத்தில் 1100 வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்றால், அதுகுறித்து எழுத்து வடிவத்தில் ஏஜென்ட்டுகளுக்கு காப்பியை வழங்குவார் பூத் அதிகாரி. அதன்பிறகு ஒவ்வொரு வேட்பாளரின் பூத் ஏஜென்ட் முன்னிலையிலும், வாக்கு எந்திரம் சீல் வைக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று, வாக்குப்பதிவின்போது கொடுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் சான்றான பேப்பர் காப்பியை பூத் ஏஜென்ட் கையில் எடுத்துச்செல்ல வேண்டும். வாக்குப்பதிவின்போது, ஒரு தொகுதிக்குள் சுமார் 15 முதல் 20 பூத் வரை இருக்கும். அதனால், 15 முதல் 20 பூத் ஏஜென்ட்டுகள் இருப்பார்கள். ஆனால், வாக்கு எண்ணிக்கை நாளன்று, தொகுதிக்கு சேர்த்தே மூன்று பூத் ஏஜென்ட்டுகள்தான் இருப்பார்கள். அதில் ஒருவர் வாக்கு எண்ணும் அறையில் இருக்க வேண்டும். இருவர் வெளியில் இருப்பார்கள். அப்போது குறிப்பிட்ட பூத்தின் வாக்கு எந்திரத்தின் சீல் பூத் ஏஜென்ட்களின் முன்னிலையில் திறக்கப்படும். வாக்குப்பதிவின்போது எப்படி சீல் வைக்கப்பட்டதோ, அதேபோல இப்போதும் இருக்கிறதா இல்லை பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஏதும் மாறுதல் செய்யப்பட்டுவிட்டதா என்பதையும் நாங்கள் சோதித்துச் சொல்ல வேண்டும்.
பிறகு எந்திரம் வெளியே எடுக்கப்பட்டவுடன், நாங்கள் வாக்களிக்கும் நாளன்று எந்திரத்தில் பதிவாகி இருந்த அதே எண்ணிக்கையிலான ஓட்டுகள்தான் பதிவாகியிருக்கிறதா என்பதை எங்களுக்கு கொடுக்கப்பட்ட பேப்பர் காப்பியைப் பார்த்து உறுதி செய்துகொண்டபின்னர்தான் வாக்கு எண்ணிக்கையே தொடங்கும். ஒவ்வொரு பூத்தும் எண்ணி முடிக்கப்பட்டவுடன், எந்தெந்த வேட்பாளர்களுக்கு எத்தனை வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பது குறித்து அறிவிக்கப்படும், பேப்பர் காப்பியும் கொடுக்கப்படும். ஒவ்வொரு பூத்தாக எண்ணி முடிக்கும்போது இறுதியில் ஒரு வேட்பாளர் எத்தனை வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பதையும் முழுமையாக உறுதி செய்துவிட்டு, எங்களது வேட்பாளர் வெற்றி பெற்றார் என்றால், அவர் வந்து வெற்றிக்கான சான்றிதழைப் பெற்றுச் செல்லும் வரை எங்களது பணி இருக்கும்” என்றார்.
“பூத் கமிட்டி என்றால் என்ன?” என்று அவரிடம் கேட்டபோது, “பூத் கமிட்டி என்கிற மந்திரம்தான் இன்று தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வராததற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. ரஜினி மக்கள் மன்றத்திற்கு ஆரம்பத்தில் பூத் கமிட்டியை தடபுடலாக அமைத்தார்கள். போகப்போக பல இடங்களில் பூத் கமிட்டி அமைக்க முடியாமல் போகவே, ரஜினி டென்ஷனாகி தனது எண்ணத்தையே கைவிட்டார். அந்தளவுக்கு பூத் கமிட்டி என்பது கட்சிகளுக்கு முக்கியம். தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தவிர வேறு எந்த ஒரு கட்சிக்கும் பூத் கமிட்டி முழுமையாக கிடையவே கிடையாது.
பாகத்தில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 20 முதல் 30 பேர் வரை பூத் கமிட்டியில் இடம் பெறுவார்கள். அந்த 20 பேரும் அதே பாகத்தில் வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி. அந்த பாகத்தில் இருப்பவர்களுக்குத்தான், அங்கு வாக்காளர்களாக இருக்கும் மக்களைத் தெரிந்திருக்க முடியும். ஒரு பாகத்தில் 4 தெருக்கள், 800 வீடுகள் இருக்கிறது என்றால், இந்த 20 பேரும் தலா 40 வீடுகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பிரித்துக்கொண்டு, வீடு வீடாக பிரசாரம் செய்திட வேண்டும். இதுதான் பூத் கமிட்டியின் பணி.
அப்படி கேன்வாஸ் செய்யும்போது, பாகத்தில் புதிதாக யாரும் குடிவந்திருக்கிறார்களா, ஏற்கனவே குடியிருந்தவர்கள் வீட்டை காலிசெய்துவிட்டுப் போய்விட்டார்களா.. ஒரு குடும்பத்தில் மகனுக்கு திருமணம் முடித்து புதிதாக உறுப்பினர் வந்திருக்கிறார்களா... புதியவர்களுக்கு வாக்காளர் அட்டை உள்ளதா போன்ற மொத்த தகவல்களையும் பூத் கமிட்டி சேகரித்திட வேண்டும். மேலும் வாக்குப்பதிவு நாளன்று, நாங்கள் பூத் ஏஜென்ட்டுகள் பூத் உள்ளே இருப்போம், பூத் கமிட்டி ஆட்கள் வெளியில் டேபிள் போட்டு, பாகத்தில் உள்ளவர்களின் வாக்காளர்கள் பட்டியலை வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு கட்சியின் பூத் கமிட்டியும் இதுபோல டேபிள் போட்டு இருப்பார்கள். மக்கள் அவர்களிடம் சென்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதைப் பார்த்துக்கொள்வார்கள்.
பூத் கமிட்டியில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது பழைய விதி. அதாவது, பட்டியலினத்தவர், ஏனைய சமுகத்தவர், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் என கலந்திருக்க வேண்டும். அப்போது பலவாரான மக்களை நேரில் சென்று சந்தித்து கேன்வாஸ் செய்ய முடியும் என்பதால் இந்த விதியை வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது அப்படியெல்லாம் எந்தக் கட்சியிலும் இருப்பதில்லை. பூத்தில் ஆள் கிடைப்பதே பெரிது என்ற நிலை வந்துவிட்டது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வில் மட்டும்தான் மாநில முழுக்க பூத் கமிட்டியில் 20 பேர் வரை இருக்கிறார்கள். காங்கிரஸில் பூத்தில் இருவர் மட்டுமே, அதிலும் பல இடங்களில் இல்லை. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை இன்னும் குறைவாக தான் இருக்கிறார்கள். இரண்டு கட்சிகளுக்கு அடுத்து அ.ம.மு.க-வில் ஓரளவுக்கு பூத் கமிட்டி இருக்கிறது!” என்பதோடு முடித்துக்கொண்டார்.
Also Read: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகளில் வெற்றி யாருக்கு? ஜூனியர் விகடன் சர்வே!
source https://www.vikatan.com/news/politics/in-politics-who-is-booth-agent-what-all-his-job-a-detailed-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக