Ad

புதன், 7 ஏப்ரல், 2021

பிஞ்சுக் குழந்தைகளுக்கு பீரியட்ஸ்; வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம்! - எச்சரிக்கும் மருத்துவர்

அக்ஷராவின் தாய் எனக்கு நீண்டநாள் பழக்கமானவர். அவர் சமீபத்தில் ஒருநாள் திடீரென தொலைபேசியில் அழைத்தார். ``டாக்டர் ! முக்கியமான ஒரு விஷயம் பேசணும்" லேசான அழுகையோடு இருந்தது அவர் குரல். ``பதற்றப்படாம சொல்லுங்க!" என்றேன். ``அக்ஷராவுக்கு இப்பதான் 9 வயசு ஆரம்பிக்குது. அதுக்குள்ள பீரியட்ஸ் ஆயிடுச்சி டாக்டர்! இது சரியா? இப்போ என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே!" இப்போது விம்மலுடன் அழுகை நன்றாகவே தெரிந்தது. ``மொதல்ல நீங்க தைரியமா இருங்க, இதுல பயப்படுறத்துக்கு எதுவும் கிடையாது. இதைப்பத்தி பேசுவோம். அவளுக்குப் புரிய வைப்போம். தேவைப்பட்டா மருந்துகள் இருக்கு, உபயோகப்படுத்தலாம்" என்று தைரியம் கூறினேன்.

பொதுவாகவே கடந்த 10 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைவது (Precocious Puberty) அதிகரித்திருக்கிறது. சராசரியாக 14 -15 என்றிருந்த வயது, இப்போது 11 -12 என்றாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் சில பெற்றோர் ஏழாம் வகுப்பு முடித்து எட்டாம் வகுப்புக்குச் செல்லும் குழந்தை, வயதுக்கு வரவில்லை என்றால் கூட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ``இவளுக்கு ஏதாவது பிரச்னையா பாருங்க டாக்டர்! இவ கூட படிக்கிற பொண்ணுங்க எல்லாரும் பெரிய பசங்களாகிட்டாங்க. இவ மட்டும் இன்னும் ஏஜ் அட்டெண்டு பண்ணல..." என்று புகார் வேறு.

Girl Child

எப்படித் தெரியும்?

எட்டு வயதுக்கு முன்பாக பெண் குழந்தைகளுக்கு மார்பகத்தில் மாற்றம், அந்தரங்கப் பகுதிகளில் முடி வளர்ச்சி, உயரம் சட்டென கூடுவது, உடல்வாகு மாறுவது ஆகிய அறிகுறிகள் தெரிந்தால் அந்தக் குழந்தை விரைவில் பூப்படையலாம்.
இந்த மாற்றங்கள் ஆரம்பித்து 1-2 வருடங்களில் குழந்தைகள் பூப்பெய்தி விடுகிறார்கள். இதுவரை உள்ள புள்ளிவிவரப்படி, இளவயதில் பூப்பெய்தும் பெண் குழந்தைகளுக்கு எதிர்கால வாழ்க்கையில், திருமணத்தில், குழந்தை பெறுவதில் எந்தச் சிக்கல்களும் இருப்பதில்லை.

என்ன காரணம்?

பூப்படைவதற்கான ஹார்மோன் சுரப்புகள் முன்கூட்டியே தொடங்குவதுதான் இதற்கு முக்கிய காரணம். மரபு வழிக் காரணமும் இருக்கலாம். அதாவது, தாய், பாட்டி, அத்தை போன்ற உறவுகள் இளவயதில் பூப்படைந்திருந்தால் குழந்தைகளும் இளவயதிலேயே பூப்படையலாம். மூளையில் பாதிப்பு அல்லது கட்டிகள் இருக்கலாம். அட்ரீனல் சுரப்பிகள், ஓவரி என்று சொல்லக்கூடிய கருமுட்டைப்பைகள் இவற்றில் உண்டாகக்கூடிய கட்டிகள் ஆகியவற்றுடன் குழந்தைகள் வயதுக்கு மீறிய எடையுடன் இருப்பதும் வாழ்வியல் மாற்றத்தால் ஏற்பட்ட முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. பல நேரங்களில் இவற்றில் எந்தக் காரணமும் இல்லாமலும் இது நடைபெறலாம்.

பெண் குழந்தைகள் பூப்பெய்திவிட்டால் அதற்கு மேல் அவர்கள் வளர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதன் காரணமாக உளவியல் ரீதியான பிரச்னைகள் அந்தப் பெண் குழந்தைக்கும் அவளின் தாய்க்கும் உண்டாவதையும் பார்க்கிறோம்.
குழந்தையின் வயது மற்றும் உயரம் இது இரண்டையும் பொறுத்து சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு எட்டு வயதுக்குள்ளாகவே இதுபோன்ற வளர்ச்சி தொடங்கிவிட்டால் அவர்கள் பூப்படைவதை சிலகாலம் தள்ளிப்போடுவதற்கு மருந்துகளும் ஹார்மோன் ஊசிகளும் உள்ளன. அதன் பலனாகக் குழந்தை உயரமாவதற்கு உரிய நேரம் கிடைக்கிறது. மேலும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள குழந்தைக்கும் அதன் தாய்க்கும் உளவியல் ரீதியான கவுன்சலிங் கொடுக்கப்படும்

ஜெயஸ்ரீ ஷர்மா

பூப்படைந்துவிட்டால்...

ஒருவேளை சிறிய வயதிலேயே குழந்தை பூப்படைந்துவிட்டாலும், இந்த மருந்துகள் மூலம் சில காலத்துக்கு மாதவிடாயைத் தள்ளிப்போட முடியும். அதன் மூலம் குழந்தை சரியான உயரத்தை அடையும். தேவைப்படும்போது சிகிச்சையை நிறுத்திவிட்டால் மீண்டும் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிடும். தாய் குழந்தையுடன் அந்நியோன்யமான நட்புடன் இருந்தால் மட்டுமே குழந்தை தனக்கு ஏற்படும் மாற்றங்களை மறைக்காமல் பகிர்ந்துகொள்ளும். ஆரம்ப கட்டத்திலேயே இதைக் கவனிக்கும்போது சிகிச்சை அளிப்பது எளிது.

பரிசோதனை தேவை!

ஒருவேளை குழந்தைகளின் உடலில் மாற்றம் தெரிந்தால், இளவயதில் பூப்படைந்துவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை ரத்தப் பரிசோதனைகள், ஹார்மோன்கள் அளவு, கர்ப்பப்பை மற்றும் கருமுட்டைப்பை வளர்ச்சியை அறிந்துகொள்ள ஸ்கேன், எலும்பு வளர்ச்சி போதுமான அளவு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள (முக்கியமாக கைகளுக்கு) எக்ஸ்ரே, மூளைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளைச் செய்து குழந்தைக்கு வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதையும் அறிய வேண்டும்.

தடுப்பதற்கு வழி உண்டா?

பெண் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் எடை அதிகமாகும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. அதிகமான எடை, குழந்தை பூப்பெய்துவதைத் துரிதப்படுத்துகிறது.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், அதிக கொழுப்புச்சத்தும், உப்பும், ரசாயனமும் கலந்தவையாக உள்ளன. இவை எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமையும். முடிந்த வரை நம் பாரம்பர்ய உணவுப் பழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவது அவசியம். உடற்பயிற்சி இல்லாமையும் குழந்தைகள் அதிகமான எடை கூடுவதற்கு முக்கியமான காரணியாகிறது. எனவே, குழந்தைகள் விளையாடுவதற்கும் உடற்பயிற்சி, யோகப் பயிற்சிகள் செய்வதற்கும் ஊக்கப்படுத்த வேண்டும். அதிக நேரம் கைபேசியிலும் கணினியிலும் விளையாடுவதைக் குறைக்க வேண்டும்.

Girl child

கொரோனா லாக்டௌன் காலத்தில் பல குழந்தைகள் இந்தப் பிரச்னையை சந்தித்ததாக மும்பையைச் சேர்ந்த தரவுகள் சொல்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அதுபோன்று அதிகப்படியான எண்ணிக்கையில் இந்தப் பிரச்னைகள் பதிவுசெய்யப்படவில்லை. அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். லாக்டௌன் சமயத்தில் உடல் இயக்கத்துக்கான வாய்ப்புகள் குறைந்ததால் எடை அதிகரிப்பு பிரச்னை அதிகமாக ஏற்பட்டது. இதன் விளைவாக இன்னும் 1-2 வருடங்களில் இளம்வயதிலேயே பூப்பெய்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


- டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா



source https://www.vikatan.com/lifestyle/women/doctor-explains-the-reasons-and-prevention-for-precocious-puberty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக