Ad

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

மும்பை: பொது முடக்கத்துக்குப் பின் நாய்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு! - அதிர்ச்சி தகவல்கள்

மும்பையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கிறது. இந்த தெரு நாய்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி சாப்பாடு போடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் தெருநாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தையே சுற்றிச்சுற்றி வருவது வழக்கம். சிலர் தினமும் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுப்பது வழக்கம். அப்படிப்பட்டவரை கண்டால் உடனே தெரு நாய்கள் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும். அப்படி பாசத்துடன் சுற்றி வரும் நாய்களை சிலர் தங்களது காம இச்சைக்கு பயன்படுத்தும் கொடூரமான சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் மும்பை அந்தேரி டி.என்.நகர் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்யும் அகமத்சஹி(65), அப்பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு அடிக்கடி சாப்பாடு போடுவது வழக்கம். நாய்களிடம் பிஸ்கெட் போன்ற உணவுப்பொருட்களை காட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று சாப்பாடு கொடுப்பது வழக்கம். அப்படி சாப்பாடு கொடுக்கும் போது அகமத் சில நாய்களை வன்கொடுமை செய்து வந்தார்.

வளர்ப்பு நாய்

ஆனால் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், அகமத்தின் செயலை வீடியோ எடுத்து அதனை அப்பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் விஜய் என்பவருக்கு அனுப்பி வைத்தார். உடனே விஜய் அந்த வீடியோவுடன் சென்று போலீஸில் புகார் செய்தார். வீடியோவை பார்த்த போலீஸார் உடனே அகமத்தை அழைத்து விசாரித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து அகமத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது 30க்கும் அதிகமான தெரு நாய்களை இது போன்று பாலியல் இச்சைக்கு ஆளாக்கி இருப்பது தெரிய வந்தது.

கடந்த மாதம் 19-ம் தேதி சாந்தாகுரூஸ் கலீனாவில் தெருவில் பிரட் விற்பனை செய்யும் தவுபீக் அகமத்(20) என்ற வாலிபர் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்தது, அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. போலீஸார் அவரை கைது செய்யும் முன்பு சொந்த ஊருக்கு தப்பிச்சென்றுவிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பவாயில் 8 வயது பெண் நாய் வன்கொடுமை செய்யப்பட்டு தெருவில் உயிருக்கு போராடிய படி கிடந்தது. அதனை சிகிச்சைக்காக எடுத்து சென்ற போது அதன் பிறப்புறுப்பில் மரக்கட்டையை விஷமிகள் சொருகி இருந்தனர். இது தொடர்பாக வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நவிமும்பை நெரூல் பகுதியில் தெரு நாயை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய 65 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவை ஒரு சில சம்பவங்கள் தான். மனிதர்கள் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர். போலீஸாரின் கவனத்திற்கு வராமல் எத்தனையோ சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது என கவலை கொள்கிறார்கள் விலங்கு நல ஆர்வலர்கள்.

நாய்கள் உணவு

அதுவும் கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு வீட்டு விலங்குகள், குறிப்பாக நாய்களுக்கு எதிரான கொடுமைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து மும்பை விலங்குகள் நல ஆர்வலர் விஜய் கூறுகையில், ''கொரோனா பொது முடக்கத்தால் வேலை பறிபோய்விட்ட வெறுப்பு, செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இப்போது அதிகரித்துள்ளது” என்றார்.

மும்பையில் நடப்பு ஆண்டில் முதல் இரண்டு மாதத்தில் தினமும் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதாக 8 சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இரண்டு மாதத்தில் 480 சம்பவங்கள் இது போன்று நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 886 விலங்குகள் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளது. இவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகுதான் அதிக அளவில் நடந்துள்ளது. இதில் 266 சம்பவங்கள் மட்டுமே விபத்து சம்பவங்கள் ஆகும். மற்ற அனைத்தும் விலங்குகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமை, அடித்து சித்ரவதை செய்தல், பட்டினி போடுதல் போன்ற சம்பங்கள் ஆகும்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``பாதுகாப்பற்ற விலங்குகளை அடிப்பது, எட்டி உதைப்பது சுடுதண்ணீரை ஊற்றுவது, நாய் வாலை வெட்டுவது, கத்தியால் தாக்குவது போன்ற காரியங்களை சிலர் விளையாட்டாக செய்கின்றனர்" என்றார்.

பி.எப்.ஏ.என்ற விலங்குகள் நல அமைப்பை நடத்தி வரும் லதா பார்மர் இது குறித்து கூறுகையில், விலங்குகள் மீதான அக்கறையின்மை, சட்டத்தை கண்டுகொள்ளாமைதான் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணமாகும். பலருக்கு சட்டம் தெரியாமல் இருக்கிறது. மற்றவர்கள் விலங்குகளை காயப்படுத்தினால் தண்டனை கிடைப்பது அபூர்வம் என்ற அச்சமின்மை போன்றவையும் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு காரணமாகும். மும்பையில் விலங்குகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவமனை மட்டுமே இருக்கிறது. அதிலும் இலவசமாக சிகிச்சையளிக்கப்படுவதில்லை. விபத்து அல்லது கொடுமைக்கு ஆளாகும் விலங்குகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர் தான் அதற்கான செலவுகளை ஏற்கவேண்டியிருக்கிறது" என்றார்.

நாய் கண்காட்சியில் பங்குபெற்ற நாட்டுநாய்கள்  

கடந்த 10 ஆண்டில் மும்பையில் விலங்குகளுக்கு எதிரான 20 ஆயிரம் வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

விலங்குகளுக்கு எதிரான அனைத்து விதமான கொடுமைகளுக்கும் தண்டனை உண்டு. ஆனால் அபராதம் தான் மிகவும் சொற்பமாக இருக்கிறது. 10 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை மட்டுமே அபராதம் வசூலிக்கப்படுகிறது. போலீஸாரும் விலங்குகளுக்கு எதிரான குற்றங்களை சரியாக விசாரிப்பதில்லை. போலீஸார் இது போன்ற சம்பங்களை பெரிதாக எடுத்துக்கொள்வதுமில்லை. மேலும் விலங்குகளை கொடுமைப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களை எந்த வித வாரண்டும் இல்லாமல் கைது செய்யவும் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சட்டம் சரியாக அமல்படுத்தப்படாமல் இருப்பதால் விலங்குகள் தினமும் சித்ரவதைக்கு ஆளாகின்றன.



source https://www.vikatan.com/news/animals/sexual-crime-against-animals-increased-in-mumbai-after-lock-down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக