திரும்பும் திசையெங்கிலும், காதுகளை ரணமாக்கிக் கொண்டிருக்கின்றன மக்களின் மரண ஓலங்கள். உத்தரப்பிரதேசம், ஹைதராபாத், குஜராத் என தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் தகன மேடைகளில் சடலங்களை வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கும் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். சமூக ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் மரணக் காட்சிகள் கண நேரத்தில் நெஞ்சை உலுக்கிவிடுகின்றன.
முதலாம் அலையின் இறுதியில் இப்படியான உயிர்ச் சேதங்கள் நிகழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில மாதங்களில் எல்லாம் மாறிவிட்டது. நோய் தடுக்கும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு, உயிர்காக்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என மூச்சுத்திணறித் துடித்துக்கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகள் இடுகாட்டுக்கு வழிகாட்டி அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.
இது ஒரு வகையில் கையறுபட்ட நிலைமை என்றே சொல்லலாம். ஆக்ஸிஜன் எப்போது கிடைக்கும் என்று உயிரைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் ஒருபுறமிருக்க, மறுபுறம் ஒருகூட்டம் தடுப்பூசி எப்போது வரும் என்று மிரட்சியுடன் காத்துக்கிடக்கிறது. பல மாநிலங்களில் மக்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும், படுக்கைகள் இல்லாமலும் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த இக்கட்டான நேரத்தில் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகவும் உபயோகமானதாக மாறியிருக்கிறது என்றே சொல்லலாம். ட்விட்டர், வாட்ஸ்அப் எனச் சமூக வலைதளங்களைக் கருவிகளாக மாற்றி, களத்தில் இறங்கி உதவிவருகின்றனர் தன்னார்வலர்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பெரிய நம்பிக்கை வெளிச்சமாக மக்களுக்குத் துணை நின்றுகொண்டிருக்கின்றனர் இவர்கள்.
ஆக்ஸிஜன் தேவைப்படுவோருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், மருந்துகள் தேவைப்படுவோருக்கு மருந்தையும் விரைந்து ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், கொரோனா முதலாம் அலையின்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனை படுக்கைகளில் வீழ்ந்து கிடந்த தன்னம்பிக்கை மனிதர்கள் பலர், அதிலிருந்து மீண்டெழுந்து தற்போது மக்கள் சேவகர்களாகக் களத்தில் மாறியிருக்கின்றனர்.
இத்தகைய உயர்ந்த உள்ளம்கொண்டோர் கதைகள் சமூகத்தில் ஏராளமாக நிரம்பிக்கிடக்க, கொரோனா நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து மகத்தான மக்கள் பணி செய்துவரும் இரண்டு 'கொரோனா கால காவலர்கள்' பற்றி இங்கே பார்க்கலாம்.
* பீகாரின் ஆக்ஸிஜன் மனிதன்:
பீகார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்தவர் கௌரவ் ராய். கடந்த ஆண்டு, ஜூலை மாதம் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 52 வயதான கௌரவ் பல வாரங்கள் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனை படுக்கையில் மரணத்துடன் போராடினார். ஒருவழியாக கொரோனாவிலிருந்து மீண்டெழுந்த கௌரவ் அது முதல் பாட்னா பகுதியில் மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு செய்வது, மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்குவது எனக் களத்தில் இறங்கினார்.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மக்கள் பலர் ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்ததைப் பார்த்து மனம் நொந்துபோன கௌரவ், அவர்களுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவத் தொடங்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் மக்களுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கத் தொடங்கிய கௌரவ் தற்போது வரையில் 1,100 கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டரைகளை வழங்கி அவர்களது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
தேவை என்று தன்னிடம் வருபவர்களுக்கு முகம் சுளிக்காமல் உதவிவரும் கௌரவை பாட்னா மக்கள் 'ஆக்ஸிஜன்-மனிதர்' என்றே அழைக்கின்றனர். ஆரம்பத்தில் பாட்னாவில் மட்டுமே இந்தச் சேவையைச் செய்து வந்த கௌரவ், தற்போது பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தன்னார்வலர்களின் மூலம் 'ஆக்ஸிஜன் வங்கிகள்' அமைத்து ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றிவருகிறார். வாழ்த்துகள் கௌரவ்!
* உத்தரப்பிரதேசத்தின் 1 ரூபாய் சேவகர் :
உத்தரப்பிரதேச மாநிலம், ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குப்தா. தொழிலதிபரான மனோஜ், சுமேர்பூர் தொழிற்பேட்டைப் பகுதியில் தொழிற்சாலை ஒன்று நடத்திவருகிறார். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்குள்ளான மனோஜ் மிகக் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் உடல் அசௌகரியங்களை அனுபவித்துள்ளார். பல நாள்களைப் படுக்கையில் கழித்து மீண்டெழுந்த மனோஜ், தான் கொரோனா நோய்த் தொற்றால் அனுபவித்த வலியை மக்கள் யாரும் அனுபவிக்கக் கூடாதென்று எண்ணினார். இந்தநிலையில், மனோஜ் உத்தரப்பிரதேசத்தில் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில்கொண்டு தன்னுடைய ஆலையிலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கிவருகிறார்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிரப்பும் மனோஜ், அவற்றை மாவட்டத்தில் தேவையுள்ள மருத்துவமனைகளுக்கு தன் ஊழியர்களைவைத்து விநியோகித்துவருகிறார். அதேபோல், வீட்டுச் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் ஆதார் கார்டு நகல், விவரங்கள் மற்றும் பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு அவர்களுக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அளித்துவருகிறார்.
உதவிக்குக் கைகூப்பி நன்றி கூறும் மக்களிடம், 'நன்றியெல்லாம் வேண்டாம். நான் உங்களுக்கு இலவசமாகக் கொடுக்கவில்லை. நீங்கள் என்னிடம் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான தொகை 1 ரூபாயைக் கொடுங்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என யாருக்காவது தேவைப்பட்டால் சொல்லுங்கள், விலை 1 ரூபாய்தான்' என்றுகூறி விட்டு மன நிறைவுடன் புன்னகைத்த படி நகர்கிறார் கொரோனா கால சேவகர் மனோஜ். அறப்பணி தொடரட்டும்...!
கௌரவ், மனோஜ் போன்று ஆந்திரா, தமிழ்நாடு, மும்பை எனத் தேசத்தின் எட்டுத்திக்கும் பரவிக்கிடக்கும் இத்தகைய உயர்ந்த உள்ளங்களை இதயம் கனிந்து கொண்டாடி மகிழ்வோம் இணையச் சமுதாயமே!
source https://www.vikatan.com/news/india/covid-recovered-persons-spreading-the-ray-of-hope-by-providing-oxygen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக