Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

திருவாரூர்: ரூ. 4.6 லட்சம் கொள்ளை; 18 மணி நேரத்தில் மீட்பு! -ஆந்திரக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள அரிச்சபுரத்தைச் சேர்ந்தவர் பள்ளி ஆசிரியர் கண்ணன். இவர் மன்னார்குடி பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் ரூ. 4.6 லட்சம் கடன் தொகை பெற்று வெளியில் வந்தபோது சில மர்ம நபர்கள் இவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். அது இந்தப் பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்ட காவல்துறையின் வேகமான நடவடிக்கைகளால், அடுத்த 18 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் சிக்கினர். மேலும் பணத்தைக் கைப்பற்றி, ஆசிரியர் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.

எஸ்.பி கயல்விழிக்கு பாராட்டு தெரிவிக்கும் மக்கள்

பள்ளிக்கூட ஆசிரியர் கண்ணன், கடந்த 21-ம் தேதி மன்னார்குடியிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி கிளைக்கு சென்றுள்ளார். மன்னார்குடியில் புதிதாகக் கட்டிவரும் தனது வீட்டுக்கான கடன் தொகையில் முதல் தவணையாக 4.6 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வெளியில் வந்து, தனது இருசக்கர வாகனத்தில் ஏறியபோது, இவரிடமிருந்த பணத்தைக் கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு அங்கிருந்து மாயமாகியிருக்கிறார்கள். இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அறிந்த திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி உடனடியாக கொள்ளையர்களைப் பிடிக்க, டி.எஸ்.பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படையை அமைத்தார்.

அடுத்த 18 மணிநேரத்தில் கொள்ளையர்கள் காண்டுபிடிக்கப்பட்டு, 4.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பனாலா பிரசாந்த், மேக்கல பிரசன்ன குமார், மேக்கல பிரவீன்குமார் சன்னா, உதயகிரண் மதத் ஆகிய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

கைது

இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழியை நேரில் சந்தித்து மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர். பணம் கொள்ளையடிக்கப்பட்ட அடுத்த 18 மணி நேரத்தில் எப்படி கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது? இது குறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழியிடம் நாம் கேட்டபோது ‘``பேங்க் கஸ்டமர்ங்ககிட்ட கொள்ளையடிக்கக்கூடிய கொள்ளையர்கள், ரொம்ப கவனமா செயல்படுவாங்க. யார் அதிக தொகை எடுக்குறாங்கனு நிதானமா நோட்டம்விடுவாங்க. அதுமாதிரியான நபர்கள் கிடைக்குற வரைக்கும் பொறுமையா, கவனமா காத்திருப்பாங்க. இதை நோட்டம்விடக்கூடிய நபர், அந்த இடத்துல பணத்தைப் பறிக்க முயற்சி செய்ய மாட்டாங்க. வெளியில தயாராக நிற்கக்கூடிய நபருக்குத் தகவல் சொல்லுவாங்க. இந்த அடிப்படையில்தான் எங்களோட தேடுதல் வியூகத்தை ஆரம்பிச்சோம்.

திருவாரூர் எஸ்.பி. கயல்விழி

மன்னார்குடி பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்குள் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தோம். ஆசிரியர் கண்ணன், படிவத்துல எழுதுறதை, ஒரு நபர் நோட்டம்விடுறது தெரிஞ்சுது. பேங்க் வெளியில இருக்குற சிசிடிவி கேமிரா பதிவுகளை செக் பண்ணினோம். 4.6 லட்சம் பணத்தோடு பேங்க்ல இருந்து வெளியில வந்த ஆசிரியர் கண்ணன், தன்னோட டூ வீலர் டேங்க் கவர்ல பணத்தைவெச்சுட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணப் போகும்போது, மர்ம நபர் ஒருத்தர், கண்ணன்கிட்ட, `உங்களோட பணம் ஏதோ கீழே விழுந்து கிடக்கு’னு சொல்றாரு. கண்ணன் கீழே குனிஞ்சிப் பார்க்கும்போது, அந்த மர்ம நபர்கள் டேங்க் கவர்ல இருந்து பணத்தை எடுத்துக்கிட்டு, ஒரு டூ வீலர்ல தப்பிச்சுப் போயிடுறாங்க.

அந்த டூ வீலர் தொடர்ந்து எங்கெல்லாம் போகுதுனு கண்டுபிடிச்சாத்தான் கொள்ளையர்களைப் பிடிக்க முடியும். பேங்க் வாசல் தொடங்கி, வேதாரண்யம் சாலை வரைக்கும் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த 24 சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டோம். இதுக்கு மட்டுமே 24 பேரை நியமிச்சேன். கொள்ளையர்கள் தப்பிச்சுப்போன அந்த டூ வீலரோட நம்பர் ஓரளவுக்குத்தான் தெரிஞ்சுது. ஆனாலும் நம்பிக்கையோடு கண்காணிச்சோம். அந்த டூ வீலர், வேதாரண்யம் ரோட்டுல போயி திரும்பிய பிறகு, எங்கே போச்சுன்னு கண்டுபிடிக்க முடியலை. ஒண்ணு, கும்பகோணம் போயிருக்கலாம்... இல்லைன்னா, வேளாங்கண்ணி போயிருக்கலாம்னு அனுமானிச்சோம்.

திருவாரூர் மாவட்ட காவல்துறையினர்

கொள்ளையர்கள் பெரும்பாலும் வேளாங்கண்ணி போயிட்டு அங்கேயிருந்து தப்பிச்சிப் போவாங்க. அது சுற்றுலாதலம்... கூட்டம் அதிகமாக இருக்கும். அங்க இருந்து தப்பிச்சுப் போறது வசதியா இருக்கும்னு நினைப்பாங்க. ஆனாலும் கும்பகோணம், வேளாங்கண்னி இரண்டு இடத்துக்குமே ஒரே நேரத்துல எங்களோட இரண்டு டீம்கள் தனித் தனியா போய்த் தேடினாங்க. வேளாங்கண்ணியில் ஒரு லாட்ஜில் சில நபர்கள் தங்கியிருக்குறதாகம், அவங்களோட நடவடிக்கைகள் சந்தேகப்படக்கூடியவிதத்துல இருக்குறதாகவும் தகவல் கிடைச்சுது. கொள்ளையர்கள் தப்பிச்சுப்போன, டூ வீலர் நம்பர் உள்ள வண்டியும் அங்கே இருந்துச்சு. எங்களோட டீமைச் சேர்ந்த எட்டுப் பேர் அந்த லாட்ஜ் வளாகத்தையே நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தாங்க. அது ராத்திரி நேரம். அந்த நேரத்துல கொள்ளையர்களைப் பிடிக்கப் போனால், தப்பிச்சுப் போக வாய்ப்புகள் அதிகம். லாட்ஜுல தங்கியிருக்கக்கூடிய மத்தவங்களுக்கும் அது தொந்தரவாப்போயிடும்.

அதனால், எங்க டீமைச் சேர்ந்த எட்டுப் பேரையும் லாட்ஜ் வாசல்லயே மறுநாள் விடியுற வரைக்கும் காத்திருக்கச் சொன்னேன். பொழுது விடிஞ்சதும் கண்டிப்பாக வெளியில் வந்து, அந்த டூ வீலரை எடுப்பாங்கன்னு தெரியும். அங்கே தங்கியிருந்தது நாலு கொள்ளையர்கள். அதுல யாராவது ஒருத்தர் தப்பிச்சுப் போனா, அங்கே காத்திருக்கக்கூடிய காவல்துறையினர் எல்லாரும் அந்த நபரைத் துரத்திக்கிட்டு போனா, மத்தவங்களும் தப்பிச்சிடுவாங்க. அதனால் எங்க டீமைச் சேர்ந்த இரண்டு நபர்கள், ஒரு கொள்ளையரை மட்டுமே கண்காணிச்சு, பிடித்தால் போதும், அந்தக் கொள்ளையர் தப்பிச்சுப் போனா, எங்க டீமைச் சேர்ந்த அந்த இரண்டு நபர் மட்டும் துரத்திப் பிடிக்கணும்னு சொல்லியிருந்தேன். நாங்க போட்ட பிளான் நல்லாவே வொர்கஅவுட் ஆனது. ரூம்ல இருந்து வெளியில வந்த கொள்ளையர்கள்ல மூணு பேரு டூ வீலர்களை எடுக்கும்போது எங்க டீம்ல மடக்கிப் பிடிச்சுது. ஒரு நபர் மட்டும் தப்பிச்சு ஓடியிருக்கான். `பச்சை சட்டை போட்ட அந்த ஆளைப் பிடிங்க’னு எங்களோட எஸ்.ஐ கத்திக்கிட்டே துரத்தினதும், அந்தக் கொள்ளையன், அலெர்ட் ஆகி, சட்டையை மாத்திக்கிட்டு ஓடியிருக்கான். அவனுக்கு வழியில எப்படியோ ஒரு ஆட்டோ கிடைச்சிருக்கு. அதுல ஏறி தப்பிச்சிப் போகப் பார்த்திருக்கான்.

கைது

எங்களோட எஸ்.ஐ ஒரு டூ வீலர்ல துரத்திக்கிட்டுப் போயி பிடிச்சுட்டார். கொள்ளையர்கள் நாலு பேரையும் கைது பண்ணி பணத்தை பறிமுதல் செஞ்சோம்’’ எனத் தெரிவித்தார். 18 மணி நேரத்தில் கொள்ளையர்களைக் கண்டுபிடித்த காவல்துறை சிறப்புப் படைக்கும், அதிரடியாகச் செயல்பட்ட எஸ்.பி கயல்விழிக்கும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்துவருகின்றன.



source https://www.vikatan.com/news/crime/police-arrested-a-gang-and-saved-money-from-them-in-18-hours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக