Ad

சனி, 5 செப்டம்பர், 2020

சீரியல் கில்லரும் சின்சியர் போலீஸும்... ட்விஸ்ட் என்னென்னா? #VTheMovie #Nani25

தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் நானியின் 25-வது படம். அவரை அறிமுகப்படுத்திய, அதே சமயம் தற்போது தெலுங்கு சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் மோகன கிருஷ்ண இந்திராகாந்தியின் படம். நானியுடன் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்க, அமித் திரிவேதி இசையமைக்கிறார் என இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக லிஸ்ட்டில் இருந்தது 'V'. 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படத்தை அமேசான் ப்ரைம் வெளியிட்டு தன் நேரடி தெலுங்கு ரீலிஸ் கணக்கைத் துவங்கியிருக்கிறது. 'V' படமாக எப்படி?
#VTheMovie

கலவரங்களை ஒடுக்கி, ரவுடிகளைப் பிடித்து, குற்றங்களைக் குறைத்து... ஆம், அதே சின்சியர் 'சிங்கம்' காப் டெம்ப்ளேட்டில் இந்த முறை சுதீர் பாபு. ஏகப்பட்ட மெடல்களும் விருதுகளும் அலங்கரிக்க, சுதீருக்கு சவாலாக வருகிறார் சீரியல் கில்லர் நானி. கொலையைச் செய்துவிட்டு, சுதீருக்கு க்ளூஸையும் விட்டுவிட்டு போன் செய்து வேறு வெறுப்பேற்றுகிறார் நானி. அடுத்தடுத்து நான்கு பேரைக் கொல்லப்போவதாகவும் அதற்கான க்ளூக்களையும் ஷேர் செய்கிறார். தன்னை தடுத்து நிறுத்த முடியாவிட்டால் மெடல்களையும் விருதுகளையும் திருப்பிக்கொடுத்துவிட்டு சுதீர் வேலையை ராஜினாமா செய்யவேண்டும் என்று சவாலும் விடுகிறார். இந்த எலி - பூனை மோதலில், யார் எலி? யார் பூனை?

'ஜெர்ஸி', 'நானிஸ் கேங்க் லீடர்' எனத் தொடர் வெற்றிகளுக்குப் பின், தன் 25-வது படத்தில் ஒரு மாஸ் வில்லன் ரோலை ஏற்றிருக்கிறார் நானி. 'நேச்சுரல் ஸ்டார்' என்ற அடைமொழியுடன் உலாவும் அவரின் பலமே அந்த இயல்பான பக்கத்துவீட்டுப் பையன் லுக்கும், அதிகம் சவுண்டுவிடும் தெலுங்கு ஹீரோக்களுக்கு மத்தியில் துருதுரு ஹீரோவாக ஸ்கோர் செய்யும் அந்த யதார்த்தமும்தான். ஆனால், அதையெல்லாம் பேக் செய்துவிட்டு, மூக்கை உறிஞ்சிக்கொண்டு பல்வேறு மாடுலேஷன்களில் இழுத்து இழுத்து பன்ச் டைலாக் பேசுகிறார். முதலில் அந்த மேனரிஸம் சற்றே ஈர்த்தாலும் பின்னர் அதுவே ஒரு கட்டத்தில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. இயல்பான நானி வெளிப்படும் அந்த ஆர்மி ப்ளாஷ்பேக்கூட ஒரு சில காட்சிகள் மட்டுமே வருகிறது.

#VTheMovie

ஸ்ட்ரிக்ட் போலீஸாக சுதீர் பாபு, அதற்கேற்றவாறு சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து உடல்மொழியில் ஈர்த்தாலும் முகத்தில் பெரிதாக எக்ஸ்ப்ரெஷன்கள் இல்லை. போலீஸ்தான், அதுக்காக இப்படியா? அழும்போதுகூட "கிளிசரின் வழியுது சார்!" என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

இரண்டு நாயகிகள் இருந்தும் நிவேதா தாமஸ்தான் அதிக நேரம் திரையை ஆக்கிரமிக்கிறார். கதையில் எப்படியாவது அவரைப் பொருத்திவிடவேண்டும் என்பதற்காக 'க்ரிமினல் சைக்காலஜி கன்சல்டன்ட்' எனவும், எழுத்தாளர் எனவும் ஏதேதோ முறுக்குச் சுற்றியிருக்கிறார்கள். சரி, அப்படியாவது கதையை நகர்த்த உதவுவார் என நிமிர்ந்து உட்கார்ந்தால், அவர் கண்டுபிடிக்க வேண்டியதையும் ஹீரோவே கண்டுபிடித்து ஸ்கோர் செய்துவிட்டு இவருக்கு 'தேங்ஸ்' சொல்கிறார். ஃப்ளாஷ்பேக்கில் அதிதிக்குப் பெரிய வேலையில்லை. ஒரு சில காட்சிகளில் மட்டும் தலையைக் காட்டும் அவருக்கு இறுதியில் ஒரு டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் ஃப்ளாஷ்பேக்கில் வரும் ஹீரோயினுக்கு என்னவாகிறதோ அதுவே வழக்கம்போல நிகழ்கிறது. ஒரே நடிகையாக இருந்திருந்தால், 'காரசிங்கம் ஏ.சி' தியேட்டரில் க்ளைமேக்ஸுக்கு ரீல் மாற்றி போட்டு ஒப்பேற்றுவதைப் போல இங்கே ப்ளாஷ்பேக்குக்கு செய்திருக்கலாம். கைவசம் பல படங்கள் இதே கதைபோக்கில் சிக்கியிருக்கும்.

#VTheMovie

'விக்ரம் வேதா', 'இமைக்கா நொடிகள்', 'தெறி' எனப் பல்வேறு படங்களில் நாம் பார்த்துச் சலித்த அதே டெம்ப்ளேட்தான். தெலுங்கு சினிமாவுக்கும் இது புதிதல்ல என்றாலும் ஆங்காங்கே சிற்சில மாற்றங்கள் செய்து மசாலா மேஜிக் நிகழ்த்த முயன்றிருக்கிறார்கள். சஸ்பென்ஸ், தொடர் கொலைகள், இன்வெஸ்டிகேஷன் என முதல் பாதியும், பழிவாங்கல், ப்ளாஷ்பேக்கில் சென்டிமென்ட், காதல், இறப்பு என இரண்டாம் பாதியும் நகர்கிறது. கதை பழசுனா ஓகே பாஸ், மசாலாவும் பழசுனா எப்படி?

ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக இன்னும் பல சுவாரஸ்யங்களையும் ட்விட்ஸ்களையும் உள்ளே சேர்க்க வாய்ப்பிருந்தும் திரைக்கதை நமக்குப் பெரிதாக யோசிக்க இடம் தராமல், நாம் நினைத்த வழியிலேயே பயணிக்கிறது. தியேட்டராக இருந்திருந்தால், 'ஃப்ளாஷ்பேக்ல அந்த கேரக்டர் சாகும் பாரேன்' என யாராவது கத்தியிருப்பார்கள். அந்த அளவுக்கு அடுத்த பக்கத்தில் கதை எப்படி நகரும் என்பதைத் திருப்பாமலே புரிந்துகொள்ளலாம் என்பது போன்ற காட்சியமைப்புகள் பொறுமையைச் சோதிக்கின்றன.

#VTheMovie

படத்தின் பெரிய பலம் அதன் மேக்கிங். ஒரு பக்கா கமர்ஷியல் படத்துக்கான தரமான மேக்கிங்கும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும் ஈர்க்கின்றன. குறிப்பாக சில நிமிடங்களே வரும் அந்த காஷ்மீர் போர்ஷனுக்கும் ஆரம்பத்தில் வரும் அந்தக் கலவரம் தொடர்பான காட்சிகளுக்கும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால், அந்த உழைப்பைக் கொஞ்சம் திரைக்கதைக்கும் கொடுத்திருக்கலாமே!

அமித் திரிவேதியின் பாடல்கள் ஈர்த்தாலும் பின்னணி இசையில் தமன் 'ராட்சசன்' தீம் மியூசிக்கையெல்லாம் உல்டா அடித்திருப்பது 'இது அதுல்ல...' எனக் கேட்க வைக்கிறது. சீரியல் கில்லர் பட மியூசிக்குக்கு சீரியல் கில்லர் படத்துல இருந்தே ரெஃபரன்ஸ், இன்ஸ்பிரேஷனா எப்படிங்க! சீரியல் கில்லர்கதைதான், ஆனால் எதற்கெடுத்தாலும் கழுத்தை அறுக்கும் ரத்தக்களரிக் காட்சிகளை வைக்காமல் கொஞ்சம் குறைத்திருக்கலாமே!

Also Read: #CUSoon ஐபோனில் ஒரு படம்... எப்படியிருக்கிறது ஃபகத் ஃபாசிலின் லாக்டெளன் சினிமா?!

இறுதியில் இன்னும் கொஞ்சம் யூகிக்க முடியாத ட்விஸ்ட்கள் வைத்து, க்ளைமேக்ஸில் ஸ்கோர் செய்திருந்தாலும் ஒரு சில ஏமாற்றங்களை மறந்திருப்போம். அதற்கும் இந்த ஸ்க்ரிப்ட் வழிசெய்யவில்லை. நானி, இப்படியான படங்கள் நடிக்கத் தெலுங்கில் பல ஹீரோக்கள் இருக்கின்றனர். உங்களிடம் எதிர்பார்ப்பது 'ஜெர்ஸி' போன்ற படங்களைத்தான். மற்றபடி, 25-வது படத்துக்கு வாழ்த்துகள்!


source https://cinema.vikatan.com/tamil-cinema/nani-25th-outing-v-telugu-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக