தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஏழெட்டு மாதங்களில் நடைபெறவிருக்கிறது. மேற்குவங்கத்தில் இரண்டு முறை அடுத்தடுத்து வெற்றி பெற்றதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, 2021 தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் அடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே மம்தா பானர்ஜிக்கும், பா.ஜ.க தலைவர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் வார்த்தைப்போர், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் உக்கிரமடைந்துவருகிறது.
மம்தாவுக்கும் பிரதமர் மோடிக்கும் மோதல், மம்தாவுக்கும் கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும் மோதல், மம்தாவுக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் திலீப் கோஷுக்கும் மோதல் என மேற்குவங்கத்தில் கடும் மோதல் தொடர்ந்துவருகிறது. மேற்குவங்க கவர்னராகக் கடந்த ஆண்டு ஜக்தீப் தன்கர் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஜக்தீப் தன்கருக்கும் மம்தாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப்போகவில்லை. பல விவகாரங்களில் இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. `பல்கலைக்கழகங்களின் வேந்தர்’ என்ற அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் துணைவேந்தர்கள் கூட்டத்தை கவர்னர் தன்கர் நடத்தினார். ஆனால், துணைவேந்தர்கள் யாரும் அந்தக் கூட்டத்துக்குப் போகவில்லை. அதற்காக மம்தா பானர்ஜி மீது கவர்னர் குற்றம்சாட்டினார். மேற்குவங்கத்தில் கல்வித்துறை, அரசியல் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதாக கவர்னர் விமர்சித்தார். அதற்கு, `அரசியல் கட்சியைப்போல கவர்னர் செயல்படுகிறார்’ என்று பதிலடி கொடுத்தார் மம்தா.
Also Read: `அவர்களுக்கு வசதியானதை பலவந்தமாகச் செய்கிறார்கள்!’ - மத்திய அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி
அதற்கடுத்து மற்றொரு சர்ச்சை கிளம்பியது. ஆளுநர் மாளிகையை மம்தா அரசு கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருப்பதாக கவர்னர் குற்றம்சாட்டினார். ``ராஜ்பவன் கண்காணிப்பில் இருக்கிறது. அரசியல் சாசனப் பதவியில் இருப்பவரின் இடத்தைக் கண்காணிப்புக்குள் எப்படிக் கொண்டுவரலாம்...’’’ என்று அவர் கொந்தளித்தார். நாட்டின் 74-வது சுதந்திர தினத்தன்று கவர்னர் ஜக்தீப் தன்கர் தேநீர் விருந்து கொடுத்தார். சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் பாரம்பர்யமாக நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்வது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கவர்னரின் தேநீர் நிகழ்வை மம்தா புறக்கணித்தார். அந்தத் தேநீர் நிகழ்வில் வெல்வெட் நாற்காலியில் கவர்னர் ஜக்தீப் தன்கர் அமர்ந்திருக்க, அவரது வலப்பக்கத்தில் இருந்த நாற்காலி காலியாக இருந்தது. அதன்மீது `முதல்வர் மம்தா பானர்ஜி’ என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. மம்தாவின் புறக்கணிப்பு, கவர்னருக்கு அவமானத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
கொரோனா பிரச்னையால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் மீறப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதனை செய்வதற்காக, மத்திய அரசின் குழு மேற்குவங்கம் வந்தது. அது மம்தா பானர்ஜிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அது குறித்து பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மம்தா கடிதம் எழுதினார். பதிலுக்கு கவர்னர் ஒரு கடிதத்தை மம்தாவுக்கு எழுதினார். அதில், மத்திய அரசின் குழு மேற்குவங்கத்துக்கு வந்தபோது, அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று முதல்வரை கவர்னர் குற்றம்சாட்டினார்.
மேலும், உணவுப் பொருள் விநியோகத்தில் ஊழல் நடந்திருப்பதாக கவர்னர் ஒரு கடிதம் எழுதினார். `மேற்குவங்கத்தில் பொது விநியோகத் திட்டத்தின் நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது’ என்று ஒரு கடிதத்தை அவர் எழுதினார். கவர்னரின் இந்தச் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மாநில அரசுடனான மோதல் போக்கை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கின்றன.
கொரோனா பிரச்னையால் மேற்குவங்க மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அம்பன் புயல் பெரும் பாதிப்புகளை மேற்குவங்கத்தில் ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்த பிறகு சில வாரங்கள் வெளியே தலைகாட்டாமல் இருந்த பிரதமர் மோடி, முதன்முறையாக மேற்குவங்கத்துக்குச் சென்றார். அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மம்தாவுடன் சென்று பிரதமர் பார்வையிட்டார். பிரதமர் விமானத்திலிருந்து இறங்கியபோது, கவர்னரும் அதிகாரிகளும் வணக்கத்துடன் அவரை வரவேற்க... மம்தா பானர்ஜி `சீரியஸாக’ செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த புகைப்படம் வைரலானது.
தற்போது சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு மேற்குவங்கத்தில் ஆரம்பித்திருக்கும் நிலையில் பா.ஜ.க-வுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கடந்த ஜூலை 21-ம் தேதி நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது, பா.ஜ.க-வையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய மம்தா பானர்ஜி, `பயப்படாதீர்கள், நான் இருக்கிறேன்’ என்று தொண்டர்களுக்கு தைரியம் சொன்னார். 34 ஆண்டுகளாக அங்கு ஆட்சியிலிருந்த இடதுசாரிகளையும் காங்கிரஸ் கட்சியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, திரிணாமுல் தொண்டர்கள் அச்சப்படும் அளவுக்கு பா.ஜ.க வளர்ச்சியடைந்திருப்பது மம்தாவின் பேச்சில் தெரிகிறது.
2011 சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி அரசை வீழ்த்திவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றினார் மம்தா பானர்ஜி. அந்தத் தேர்தலில் வெறும் நான்கு சதவிகித வாக்குகளுடன் நான்கு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றிபெற்றது. இன்றைக்கு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 18 சதவிகித வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க., 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இன்றைக்கு பா.ஜ.க-வுக்கு அங்கு 18 எம்.பி-கள் இருக்கிறார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் மம்தாவை ஆட்சியிலிருந்து அகற்றிவிடுவது என்ற வேகத்துடன் பா.ஜ.க வேலை செய்துவருகிறது. பா.ஜ.க-வின் யுக்திகள் டெல்லியில் வகுக்கப்படுகின்றன. 50 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் இலக்கு. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை எப்படியும் சாத்தியமாக்க வேண்டும் என்பதற்காக பிரசாந்த் கிஷோரின் ஐபேக்கை தி.மு.க நாடியிருப்பதுபோல, மம்தாவுக்கும் ஐபேக் வேலை செய்துவருகிறது.
Also Read: அன்னா ஹசாரேவின் போராட்டப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-ஸும் பா.ஜ.க-வும் இருந்தனவா?
‘ஐபேக்’ ஆலோசனைகள்படி பல்வேறு திட்டங்களை மம்தா பானர்ஜி அமல்படுத்திவருகிறார். வளர்ச்சி குன்றிய கிராமப் பஞ்சாயத்துகளை அடையாளம்கண்டு, அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்துகொடுப்பது, கட்சியின் கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்களைச் செய்வது, மாவட்டத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இளைஞர்களையும் புதுமுகங்களையும் அமர்த்துவது என்று பல அதிரடிகளைச் செய்துவருகிறார். மம்தாவுக்கு எதிராக மதப் பிரச்னையை பா.ஜ.க கையிலெடுக்கிறது. அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, அன்றைய தினம் மேற்குவங்கத்தில் முழு ஊரடங்கை மம்தா அமல்படுத்தினார். எனவே, அவர் ஓர் இந்து விரோதி என்று பா.ஜ.க தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.
பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவிருக்கும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான திலீப் கோஷ், ‘கொரோனா போய்விட்டது. ஆனால், பா.ஜ.க பொதுக்கூட்டங்கள் நடத்துவதைத் தடுப்பதற்காக மம்தா அரசு ஊரடங்கை அமலில்வைத்திருக்கிறது’ என்று குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலடி கொடுத்த மம்தா கட்சியினர், `மேற்குவங்கத்தில் 3,000 பேரும், இந்தியா முழுவதும் 95,000 பேரும் தினமும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகிறார்கள். ஆனால், `கொரோனா போய்விட்டது’ என்று திலீப் கோஷ் கூறுகிறார். அவர் `டாக்டரை’ப் போய் பார்க்க வேண்டும்’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்கான உத்திகளை வகுப்பதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தனி கவனம் செலுத்திவருகிறார்கள். அவர்களுடன் சளைக்காமல் போராடிவருகிறார் மம்தா பானர்ஜி. 2014 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு பா.ஜ.க விரும்பியது. பிரதமர் மோடி, தன் நண்பர் என்றபோதிலும், பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர ஜெயலலிதா விரும்பவில்லை. அது மட்டுமல்ல, மோடிக்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகியிருந்த நிலையில், மோடியை அவர் கடுமையாக விமர்சித்தார். `மோடியா, இந்த லேடியா?’ என்று சவால்விட்டார். மோடி பிரதமராகும் அளவுக்கு பா.ஜ.க வெற்றி பெற்றபோதிலும் தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில்தான் பா.ஜ.க வெற்றிபெற்றது. இன்றைக்கு பா.ஜ.க-வுடன் நேருக்கு நேர் மோதும் மம்தா பானர்ஜி, ஜெயலலிதாவைப்போல பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/tussle-between-mamta-banerjee-and-bjp-in-west-bengal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக