Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

தோனி தந்திரங்கள்... ரோஹித்தைக் குழப்பிய கேப்டன் தோனியின் 5 முடிவுகள்?! #MIvsCSK #Dhoni

மும்பைக்கு எதிராகத் தொடர் தோல்விகளைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸின் சோகம் இந்த ஆண்டும் தொடரும் என கணித்தவர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அம்பதி ராயுடு, டுப்ளெஸ்ஸி, லுங்கி எங்கிடி, சாம் கரண், தீபக் சஹார் என சென்னையின் இந்த வெற்றியில் பலரின் கூட்டுழைப்பு இருக்கிறது. ஆனால், தலைவனாக முன் நின்று தோனி எடுத்த 5 சர்ப்ரைஸ் முடிவுகள்தான் சென்னையின் வெற்றியைத் தீர்மானித்தன. அந்த 5 முடிவுகள் என்னென்ன?
#CSK

இம்ரான் தாஹிர் அவுட்!

ப்ளேயிங் லெவனில் எப்போதுமே சர்ப்ரைஸ் கொடுப்பது தோனியின் வழக்கம். ஆனால், நேற்று ஒன்றல்ல மூன்று சர்ப்ரைஸ்கள் வைத்திருந்தார். கடந்த ஆண்டின் பர்ப்பிள் கேப் வின்னராக 26 விக்கெட்டுகள் எடுத்தவர் இம்ரான் தாஹிர். சமீபத்தில் நட்ந்த கரீபியன் லீகிலும் பல விக்கெட்டுகள் எடுத்தார். கரீபியனைப்போலவே ஸ்பின்னுக்கு சாதகமான அபுதாபி பிட்ச்சில் இம்ரான் தாஹிரை எதிர்கொள்ளப் பல வியூகங்கள் வகுத்து கிளம்பிவந்த ரோஹித்துக்கு ஷாக் கொடுத்தார் தோனி. தாஹிருக்கு பதில் அவரைப்போன்றே வலது கை லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா அணிக்குள் இருந்தார். இரண்டு ஃபுல் டைம் ஸ்பின்னர்கள் இருப்பார்கள் என எதிர்பார்த்தால் அங்கேயும் ஏமாற்றமே. பியுஷ் சாவ்லாவை மட்டுமே வைத்துக்கொண்டு தீபக் சஹார், லுங்கி எங்கிடி என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை இறக்கினார்.

அடுத்து பிராவோவின் ஸ்டேட்டஸ் என்ன என்பதை மேட்சுக்கு முந்தைய நாள் ஃப்ளெம்மிங் சொல்லவே இல்லை. ரோஹித் ஷர்மா, தங்களுடைய ப்ளேயிங் லெவன் இப்படித்தான் இருக்கும், நான் ஓப்பனிங் இறங்குவேன் எனப்பல விஷயங்களை மேட்சுக்கு முந்தைய நாளே சொன்னார். அதன்படிதான் ப்ளேயிங் லெவன் இருந்தது. ஒரே ஒரு மாற்றமாக நாதன் கூல்ட்டர் நைலுக்கு பதிலாக ஜேம்ஸ் பேட்டின்சன் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், பிராவோ ஃபிட்டா, இல்லையா என்றே சொல்லாமல் இருந்தது சென்னை அணி. டாஸ் வென்றதும் டுப்பெளஸ்ஸி, வாட்சன், சாம் கரண், லுங்கி எங்கிடி என அணிக்குள் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் என தோனி அறிவித்தபோதுதான் பிராவோவுக்கு பதில் கரண் விளையாடப்போகிறார் என்பதே எல்லோருக்கும் தெரியும். லுங்கி எங்கிடியும் செம சர்ப்ரைஸ் பேக்கேஜ்.

Sam Curran

சாம் கரண் மேல் அபார நம்பிக்கை!

பிராவோ அணியில் இல்லையென்றால் அவருக்கு பதில் ஆல்ரவுண்டர் ஸ்பாட்டில் அனுபவ வீரரான மிட்செல் சான்ட்னரைத் தேர்ந்தெடுக்கவே வாய்ப்புகள் அதிகம். ஸ்பின்னர்களுக்கு சாதகமான ஸ்லோ பிட்ச்சில் சான்ட்னரைத்தான் இறக்கியிருக்கவேண்டும் தோனி. ஆனால், தோனி எடுத்த பெரிய ரிஸ்க் இதுதான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த டி20, ஒருநாள் போட்டிகளில் சாம் கரண் அணியில் இருந்தாரே தவிர அவர் ஆடியது ஒரே ஒரு போட்டியில்தான். ஆனால், கரீபியன் லீகில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே நல்ல பர்ஃபாமென்ஸைக் கொடுத்தவர் சான்ட்னர். ஆனால், இவரும் ஜடேஜாவைப் போன்று இடது கை ஆர்த்தடாக்ஸ் பெளலர் என்பதால் சாம் கரணை அணிக்குள் கொண்டுவந்து ரிஸ்க் எடுத்தார் தோனி. இந்த முடிவுதான் தோனிக்கு வெற்றியைத்தேடித்தந்தது. நல்ல ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்த டி காக்கின் விக்கெட்டை எடுத்ததோடு எக்கனாமிக்கலாகவும் பந்து வீசினார் கரண். அதேபோல் 17 பந்துகளில் 29 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற ப்ரஷர் சூழலில் கரணை இறக்கிவிட்டார் தோனி. ஆறே பந்துகளில் 18 ரன்களை அடித்து ஆட்டத்தை சென்னைப்பக்கம் திருப்பிவிட்டுப் போய்விட்டார் கரண்.

பெளலிங் ரொட்டேஷன்!

தீபக் சஹார் - சாம் கரண்தான் தோனியின் ஓப்பனிங் பெளலர் சாய்ஸஸ். சஹாரின் முதல் ஓவரில் 12 ரன்கள் போனாலும் மீண்டும் அவரிடமே மூன்றாவது ஓவரைக்கொடுத்தார் தோனி. நான்காவது ஓவர் மீண்டும் சாம் கரண்தான் வருவார் என எதிர்பார்க்க பந்து எங்கிடி கையில் போனது. இந்த ஓவரில் முதல் விக்கெட்டை எடுக்கவேண்டும் என்பதுதான் தோனியின் பிளான். ஆனால், 18 ரன்கள் போனது. டிகாக்கும், லுங்கி எங்கிடியும் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடிவருபவர்கள் என்பதால் என்கிடியின் லைன் அண்ட் லென்த்களை சரியாகக் கணித்து பவுண்டரிகள் அடித்தார் டிகாக்.

Lungi Ngidi

இதனால் அடுத்த ஓவருக்கு உடனே ஸ்பின்னரான பியுஷ் சாவ்லாவை இறக்கி, ரோஹித்தின் விக்கெட்டை எடுக்கவைத்தார். டிகாக் களத்தில் இருப்பதால் மீண்டும் எங்கிடியைக் கொண்டுவரவில்லை. பவர்ப்ளேயின் கடைசி ஓவர் மீண்டும் சாம் கரணிடம் கொடுத்தார். கரணின் ஆஃப் கட்டரில் டிகாக் முதல் பந்திலேயே அவுட். பவர்ப்ளே முடிந்ததும் ஜடேஜா, சாவ்லா என ஸ்பின்னர்கள் கையில் கொஞ்ச நேரம் பந்தைக் கொடுத்தவர் மீண்டும் 11-வது ஓவரில் தீபக் சஹாரைக் கொண்டுவந்தார். இந்த ஓவரில் சூர்யகுமாரின் விக்கெட் விழுந்தது. தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர், ஸ்பின்னர் என மாறி மாறி பயன்படுத்திக்கொண்டேயிருந்தார் தோனி.

14வது ஓவரின் முடிவில் 121 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பவர்ஃபுல்லாக இருந்தது மும்பை. ஹர்திக், பொலார்ட், க்ருணால் என பவர் ஹிட்டர்கள் வரப்போகிறார்கள், டெத் ஓவர்களில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்றால்கூட எப்படியும் டார்கெட் 180 ரன்களைத்தாண்டிவிடும் என எல்லோரும் எதிர்பார்க்க இங்கேதான் தோனியின் இன்னொரு ட்விஸ்ட். டெத் ஓவர் தொடங்கிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜடேஜாவின் பந்தில் திவாரி அவுட். அற்புதமான கேட்ச். அடுத்த நான்காவது பந்திலேயே பாண்டியாவும் அதேப்போல அவுட். கடைசி 6 ஓவர்களில் எங்கிடிக்கு மட்டுமே இரண்டு ஓவர். ஜடேஜா, சாவ்லா, கரண், சஹார் என பெளலர்களை தோனி மாற்றிக்கொண்டேயிருக்க, விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருந்தன.

கடைசி 6 ஓவர்களில் வெறும் 39 ரன்கள்தான் அடித்தது மும்பை. முதல் இரண்டு ஒவர்களில் 29 ரன்கள் கொடுத்து விக்கெட் இல்லாமல் இருந்த லுங்கி எங்கிடி கடைசி இரண்டு ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் எடுத்தார். வேறு யாராவது கேப்டனாக இருந்திருந்தால் என்கிடியின் முதல் இரண்டு ஓவர்களோடே அவரை நிறுத்திவிட்டு வேறு பெளலிங் ஆப்ஷன்களைத்தேட ஆரம்பித்திருப்பார்கள். ஆனால், தோனி அதை செய்யாததில்தான் தலைவனின் பக்குவம் இருக்கிறது.

Faf Du Plesis

ஃபீல்டிங் ப்ளேஸ்மென்ட்!

டுப்ளெஸ்ஸி, ஜடேஜா இருவரும்தான் சென்னை அணிக்குள் இருக்கும் சிறந்த ஃபீல்டர்கள். இவர்கள் இருவரையும் தொடர்ந்து சரியான பொசிஷனில் நிற்கவைத்தார் தோனி. ஸ்பின்னர்களின் பெளலிங்கில் லாங் ஆனில் சிக்ஸர் அடிக்க பேட்ஸ்மேன்கள் ஆசைப்படுவார்கள் என்பதால் அங்கே தாவிப்பறந்து கேட்ச் பிடிக்க டுப்ளெஸ்ஸியை நிறுத்தியிருந்தார். ஜடேஜாவை எக்ஸ்ட்ரா கவர், டீப் மிட்விக்கெட் என பவுண்டரிகளைத் தடுக்கவேண்டிய ஏரியாக்களில் எல்லாம் தொடர்ந்து மாறி மாறி நிறுத்தினார் தோனி.

Also Read: அடித்து வெளுத்த அம்பதி... செம ஃபார்ம் சிஎஸ்கே... தொடரும் மும்பை சோகம்! #MIvsCSK

பேட்டிங் ஆர்டர் ராஜதந்திரங்கள்!

டுப்ளெஸ்ஸியையும், வாட்சனையும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக எதிர்பார்க்க முரளி விஜய் வந்தார். டுப்ளெஸ்ஸி 1 டவுன். ராயுடுவின் விக்கெட் விழுந்தபோது சென்னை 24 பந்துகளில் 42 ரன்கள் அடிக்கவேண்டும். எல்லோரும் தோனியை எதிர்பார்க்க தோனியோ ஜடேஜாவை இறக்கினார், அடுத்து கரணை இறக்கினார் என ரோஹித்தை குழப்பியடித்தார். "இடது கை ஸ்பின்னரான க்ருணாலுக்கு ஓவர் இருந்ததால் இடது கை பேட்ஸ்மேன்களான ஜடேஜாவையும், அடுத்து சாம் கரணயும் இறக்கினேன்" என கூலாக பதில் சொன்னார் தோனி. இந்த பேட்டிங் ஆர்டர் மாற்றங்கள் தோனியின் ப்ரஷரை மொத்தமாகக் குறைத்து அவரை ரிலாக்ஸாக களத்துக்குள் இறங்கவைத்தது. ஆனால், கடைசி ஓவரில் தோனிக்கு வேலை வைக்காமலேயே ஆட்டத்தை முடித்துவிட்டார் டுப்ளெஸ்ஸி.

Du Plessis, Rayudu
தோனியின் தந்திரங்களில் இன்னும் புரிந்துகொள்ளமுடியாமலே இருப்பது கேதர் ஜாதவை அவர் ஏன் அணிக்குள் வைத்திருக்கிறார் என்பதுதான். ஆல்ரவுண்டரான அவருக்கு தோனி, பெளலிங் வாய்ப்பும் கொடுப்பதில்லை, பேட்டிங் ஆர்டரிலும் அவருக்கான இடத்தில் இறக்குவதில்லை. ப்ளேயிங் லெவனில் ஒரு இடம் காலியாகவே இருப்பதுபோல் இருக்கிறது. ஆனால், ஜாதவுக்கும் தோனி ஒரு காரணம் வைத்திருப்பார்ல... என்ன காரணமாக இருக்கும் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்!


source https://sports.vikatan.com/ipl/dhonis-5-decisions-that-helped-him-to-defeat-mumbai-indians

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக