கடந்த மே மாதத் தொடக்கத்தில் லடாக்கில் உள்ள இந்தியப் பகுதிகளான பாங்காங் ஏரியை ஓட்டிய பகுதியில் ஒரு சாலைப் பணியையும் கல்வான் பகுதியில் உள்ள தர்புக்-சையோக்-தவுலத் பெக் ஓல்டி(Darbuk-Shayok-Daulat Beg Oldie) சாலையை இணைக்கும் ஒரு சாலைப் பணியையும் தொடங்கியிருந்தது இந்திய அரசு. இந்த சாலைப் பணியை எதிர்த்த சீனா, எல்லையில் ராணுவப் படைகளை மே5, 6-ம் தேதிகளில் குவித்தது. அதைத் தொடர்ந்து இந்திய-சீனா எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.
மே மாத தொடக்கத்தில் இருநாட்டு வீரர்களுக்கிடையேயும் கைகலப்பு ஏற்பட, ஜூன் மாதத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் வரை சென்றது. ஜூன் 15, 16-ம் தேதிகளில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்துவிட்டனர் என்றும் பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை காரணமாகப் படுகாயமடைந்திருந்த 17 இந்திய வீரர்களும் உயிரிழந்துவிட்டனர் என்றும் இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டது. சீன ராணுவம் தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக சொல்லப்பட்டது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதனையடுத்து டிக்-டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளைத் தடை செய்தது மத்திய அரசு.
Also Read: PUBG:`FAU-G' அறிமுகம்; ஜிடிபி வீழ்ச்சி; சீனாவுக்கு எச்சரிக்கை - பப்ஜி தடையின் பின்னணி என்ன?
ஜூன் மாதம் நடந்த தாக்குதல்களுக்குப் பின் எல்லையில் நிலவி வந்த பதற்றமான சூழல் சற்றே தணிந்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. ``சீனா-இந்தியா எல்லைப் பதற்றம் அதிகரித்துவரும் இந்தச் சூழலில் சீன அரசுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுவதற்குத்தான் சீன செயலிகளைத் தடை செய்துள்ளது மத்திய அரசு’' என்கிற கருத்தை முன்வைத்தார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன், காட்டில் வேட்டையாடச் சென்ற அருணாச்சலப் பிரதேசத்தின் நாச்சோ பகுதியைச் சேர்ந்த ஐந்து கிராமவாசிகள் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக்கச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நேற்று (செப். 7) இந்திய-சீனா எல்லையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ், இந்திய ராணுவ வீரர்கள் சீன எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
அந்தப் பத்திரிகைக்கு பேட்டியளித்த சீனாவின் வெஸ்டன் தியேட்டர் கமாண்ட்-ன் செய்தி தொடர்பாளரும் சீனியர் கர்னலுமான சாங் ஷூலி, ``எல்லைக் கோட்டைத் தாண்டி அத்துமீறி நுழைந்த இந்திய வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் பணியிலிருந்த சீன ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கியால் வான் நோக்கிச் சுட்டனர். பின்பு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரச் சீன எல்லைப் பாதுகாப்புப் படையினர் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்'' என்று தெரிவித்துள்ளார். எனினும் எந்த மாதிரியான எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
Chinese border defense troops were forced to take countermeasures to stabilize the situation after the #Indian troops outrageously fired warning shots to PLA border patrol soldiers who were about to negotiate, said the spokesperson. https://t.co/wwZPA6BMDA
— Global Times (@globaltimesnews) September 7, 2020
Also Read: India-China FaceOff:`இந்திய சந்தையில் ஆதிக்கம்!’ - சீன பொருள்களைப் புறக்கணிப்பது சாத்தியமா?
மேலும், ``இதுபோன்ற ஆபத்தான நடவடிக்கைகளை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும். எல்லைக் கோட்டை கடந்து வந்த இந்தியப் படையினரை உடனடியாக பணிநீக்கம் செய்து எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தங்கள் படையைக் கட்டுப்படுத்த வேண்டும். சீனப் படையினரைத் தூண்டும் விதமாகத் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய இந்தியப்படையினர் மீது விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாது என்று இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்'' என்று சாங் ஷூலி வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய ராணுவம், `தாங்கள் எல்லையையும் தாண்டவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை எனக்கூறியுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லைப் பதற்றம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில்...
ஏற்கெனவே ஜூன் மாதம் நடைபெற்ற தக்குதல்களின் போது ``இது நிச்சயமாக 1962-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலைமை. 45 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் சீனாவுடனான எல்லை மோதலில் ராணுவ உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன'' என்று குறிப்பிட்டிருந்தார் ஜெய்சங்கர். மேலும் இதுபோன்ற மோசமான தாக்குதல் சம்பவங்கள் எல்லையில் இனிமேல் நடக்காது என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெறும் ஒத்துழைப்பு மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவிருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இதே மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ய்-ம் மாஸ்கோ சென்றிருக்கிறார். இந்த மாநாட்டின் போது இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் எல்லைப் பதற்றம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சு வார்த்தையின் மூலம் எல்லைப் பிரச்னையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/international/what-is-happening-in-india-china-border
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக