Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

`பாய்ந்த பன்னீீர்... சீறிய சி.வி.சண்முகம்' - அவசரகதியில் முடிந்த அ.தி.மு.க கூட்டம்!

``மூன்றாண்டுகளாக பவ்வியம் காட்டிவந்த பன்னீரின் பாய்ச்சல் ஒருபுறமும், சி.வி.சண்முகத்தின் ஆக்ரோஷச் சீற்றத்தாலும் அவசரமாகக் கூட்டப்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் அவரசகதியில் முடிந்திருக்கிறது. இனி அ.தி.மு.க-வில் நடக்கப்போகும் களேபரங்களுக்கு இந்தக் கூட்டமே அடித்தளமாக மாறியிருக்கிறது’’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகளின் அவசரக்கூட்டம் தலைமைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள், மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர். வியாழக்கிழமை காலை பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் தலைமைக் கழகத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் குறித்த அழைப்பு சென்றிருக்கிறது. ஆனால், முதல்வர் தரப்பிலிருந்து ``அன்று மாலை எனக்கு நபார்டு வங்கி பிரதிநிதிகளுடன் சந்திப்பு இருக்கிறது” என்று சொல்லப்பட, வெள்ளிக்கிழமை மாலை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்கள். பன்னீர்-எடப்பாடி பழனிசாமி இணைப்பு நடந்த பிறகு பழனிசாமி தரப்பிலிருந்தே இதுவரை கட்சி நிர்வாகிகள் கூட்டம் குறித்த அறிவிப்புகள் நிர்வாகிகளுக்குச் செல்லும். ஆனால், முதன்முறையாக பன்னீர் தரப்பிலிருந்து அழைப்பு சென்றதே நிர்வாகிகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதற்குத் தோதாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது ``அம்மாவின் அரசியல் வாரிசு பன்னீர்செல்வம் வாழ்க” என அவரின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி வந்தபோது ``நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்க” என்று போட்டி கோஷமிட்டனர் அவருடைய ஆதரவாளர்கள். இதனால், கூட்டத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு அனைவரிடமுமே இருந்தது. கூட்டம் தொடங்கியதும், ஒருங்கிணைப்பாளர்களான வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பன்னீர் தரப்பிலிருந்தே பேச்சு ஆரம்பித்தது. ``கட்சிக்கு ஏற்பட்டுவரும் சலசலப்புகளுக்கு விரைவில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்” என்று மூத்த நிர்வாகி ஒருவர் ஆரம்பித்திருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கடந்த மாதம் எழுந்த `முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற சர்ச்சை, பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமிக்கு இடையேயான விரிசலுக்கு ஆரம்பப்புள்ளியானது. இந்த விவகாரம் வெடித்த பிறகே `இனியும் அமைதியாக இருக்கக் கூடாது’ என்று முடிவெடுத்த பன்னீர்செல்வம், தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் தனக்கு நம்பிக்கைக்குரிய அமைச்சர்களிடமெல்லாம் தனித்தனியாக ஆலோசனை செய்துவந்தார். ``முதலில் கட்சியின் தலைமை நீங்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யுங்கள்’’ என்று சிலர் ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள். அதன் தொடச்சியாகவே இந்தக் கூட்டத்தை நடத்த முடிவெடுத்திருக்கிறார் பன்னீர். அதேபோல் வழக்கமாக நிர்வாகிகள் கூட்டம் நடந்தால், ஒருங்கிணைப்பாளர்கள்தான் வரவேற்புரை ஆற்றுவார்கள். ஆனால், இந்த முறை கூட்டம் ஆரம்பித்தவுடனேயே, பன்னீர் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்தே கருத்து எழுந்தது. அவருடைய ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் ``இரண்டு அணிகளும் இணைந்த போது என்ன சொன்னீர்கள்... இணைப்புக்குப் பிறகு பதினோரு பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்தீர்கள். அந்த அறிவிப்பு என்ன ஆனது?” என்று கேட்க, எடப்பாடி தரப்பு ஷாக்காகிவிட்டது. சுதாரித்துக்கொண்ட எடப்பாடி, ``நாங்கள் இந்த மூன்று வருடங்களில் எத்தனை பொறுப்புகளைப் போட்டிருக்கிறோம். உங்கள் தரப்பிலிருந்துதான் எங்களுக்கு எந்தப் பட்டியலும் வரவில்லை” என்று பதில் கொடுத்திருக்கிறார்.

Also Read: `எங்கள் சாதனைகளை எடுத்துச் சொல்ல ஸ்டாலின் உதவுகிறார்!’ - எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

அதற்குப் பிறகு கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் ``பதினோரு பேர் கொண்ட குழு குறித்து விரைவில் முடிவு செய்யலாம். கட்சியை உடைக்கப் பலரும் நினைத்துவரும் நேரத்தில் அதற்கு நாம் வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது” என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது குறிக்கிட்ட மனோஜ் பாண்டியன் ``நீங்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். இரு அணிகள் இணையும்போது என்ன சொன்னீர்கள்... இரண்டு அணியிலும் உள்ளவர்களுக்கும் சம அளவில் கட்சிப் பதவி வழங்கப்படும் என்று சொன்னீர்கள். ஆனால், எங்கள் அணியைத் தொடர்ந்து புறக்கணித்துவருகிறீர்கள். மேலும், பன்னீர் எதுவும் செய்வதில்லை என்று வெளியில் வேறு சொல்லியிருக்கிறீர்கள்” என்று எகிறியிருக்கிறார். அவர் பேச்சுக்குப் பிறகு தங்கமணி, ``சரி, பிரச்னையை விட்டுவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று பேசுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

மனோஜ் பாண்டியன்

``விரைவில் பதினோரு பேர் கொண்ட குழுவை அமைத்துவிட்டால் பிரச்னைக்கே வேலையில்லை. நீங்கள் சொன்னதைச் செய்யாமல் போனதால்தான் இத்தனை பிரச்னைகளும்” என்று பன்னீர், தன் பங்குக்குப் பாய்ந்திருக்கிறார். இப்படிக் கூட்டத்தில் காரசார விவாதம் அரங்கேறியதால், கூட்டத்தை விரைந்து முடிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.

கூட்டத்தை முடிக்கலாம் என்று திட்டமிட்ட நேரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் எழுந்து ``என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க... இந்தக் கட்சியை ஒரு சாதிக்குச் சொந்தமான கட்சியா நினைக்கிறீங்களா?’’ என்று காரசாரமாகப் பேச, அவரை அமைதிப்படுத்த முடியாமல் பன்னீர், எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் திண்டாடியிருக்கிறார்கள். இனியும் கூட்டம் நடந்தால் கைகலப்புக்கூட வந்துவிடும் என்று அஞ்சிய தலைமைக் கழக நிர்வாகிகள், ``சரி... இத்தோடு கூட்டத்தை முடித்துக்கொள்ளலாம்’’ என்று அவசரமாகக் கூட்டத்தை முடித்துவிட்டு, செயற்குழு குறித்த அறிவிப்பை மட்டும் உடனடியாக டைப் பண்ணச் சொல்லி அறிக்கையாக வெளியிட்டனர். அதன்படி வரும் 28-ம் தேதி அ.தி.மு.க-வின் செயற்குழுக்கூட்டம் தலைமைக் கழகத்தில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

Also Read: எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு... தி.மு.க, அ.தி.மு.கவின் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

``இந்தப் பிரச்னையைச் செயற்குழுவில் வைத்துப் பேசிக்கொள்ளலாம். அதற்கு முன்பாக பதினோரு பேர் கொண்ட குழுவை இறுதி செய்துவிடலாம்’’ என்று எடப்பாடி, பன்னீர்செல்வத்திடம் சொல்ல, அரை மனதுடன் சரி சொல்லியிருக்கிறார் பன்னீர்.

சி.வி.சண்முகம்

பன்னீரின் பாய்ச்சலுக்கு அணைபோட நினைத்த எடப்பாடி, கடைசியில் சி.வி.சண்முகம் செய்த அதகளத்தால் கூட்டத்தையே முடிவுக்குக் கொண்டுவரும் நிலைக்கு வந்துவிட்டார். ``இனிதான் எடப்பாடிக்கு இறங்குமுகம் இருக்கப்போகிறது” என்று சொல்லிக்கொண்டே வெளிவந்திருக்கிறார்கள் பன்னீர் தரப்பினர்.

அவர்கள் சொன்னதற்குப் பின்னாலுள்ள அரசியலே இனி அ.தி.மு.க-வில் அதகளத்தை ஏற்படுத்தப்போகிறது!



source https://www.vikatan.com/government-and-politics/politics/aiadmk-meeting-ended-dramatic-manner-after-ops-and-cv-shamugam-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக