Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

செல்வன் கொலை வழக்கு: `உடைக்கப்பட்ட எம்.எல்.ஏ கார்; பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு’ - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது தம்பிகள் சிலுவைதாஸ், துரைராஜ் ஆகியோருக்குச் சொந்தமான, காந்திநகர் அருகிலுள்ள தங்களின் இடத்தை உசரத்துக் குடியிருப்பைச் சேர்ந்த தெற்கு மாவட்ட அ.தி.மு.க வர்த்தகஅணிச் செயலாளர் திருமணவேல் விலைக்கு வாங்கியுள்ளார். தனிஸ்லாஸுக்குச் சொந்தமான ஒன்னே முக்கால் ஏக்கர் நிலத்தையும் திருமணவேல் ஆக்கிரமித்து வேலி வைத்து அடைத்துள்ளார்.

உயிரிழந்த செல்வன்

இதுதொடர்பாக தனிஸ்லாஸின் மகன்கள் பீட்டர்ராஜா, பங்காருராஜன், செல்வன் ஆகியோருக்கும் திருமணவேல் தரப்பிற்கும் கடந்த இரண்டு வருடமாக பகை இருந்து வந்துள்ளது. இதில் அந்த நிலத்தில் திருமணவேல் நாட்டுவெடிகுண்டு வீசியதாக அவர் மீது தனிஸ்லாஸின் 3 மகன்களும் புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்தப்புகாரை தட்டார்மடம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் வாங்காமல், பதிலுக்கு 3 பேர் மீது திருமணவேல் அளித்த பொய்புகாரின் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டனராம்.

கடந்த ஜனவரி 19-ம் தேதியும் இப்பிரச்னையால் பங்காருராஜனை திருமணவேலின் ஆதரவாளர்கள் தாக்கினார்கள். இதில், பங்காருராஜன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில், ஹரிகிருஷ்ணன், அவரை அழைத்து வந்து ஸ்டேஷனில் வைத்து அடித்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், சகோதரர்கள் மூவர் மீதுள்ள வழக்கு ஒன்றின் ஜாமீன்மனு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதியிடம் திருமணவேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது புகார் கூறப்பட்டது. புகாரை அபிடவிட்டாக தாக்கல் செய்யக்கூறினார் நீதிபதி. அன்று மதியம் சொக்கன்குடியிருப்பிலுருந்து சாத்தான்குளம் சென்று கொண்டிருந்த செல்வன் காரில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு கிடந்தார்.

சிகிச்சைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்தார். இதையடுத்து செல்வனை தாக்கிய திருமணவேல் அவரது ஆதரவாளர்கள், கொலைக்குத் தூண்டிய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி செல்வனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், ’இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலைப் பெற்றுக் கொள்வோம்’ எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடைக்கப்பட்ட கார்

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக்கட்சியினர் ஊர்மக்களுடன் இணைந்து நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலர் குடும்பத்தினரை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்றனர்.

Also Read: தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு! #NowAtVikatan

அப்போது, மைக்கைப் பிடித்த அனிதா, ‘நம்ம சமுதாயத்தைச் சேர்ந்த ஒருத்தர் கொலை செய்யப்பட்டிருக்கார். அவரது இறப்புக்கு நீதி கிடைக்கணும். அதற்காக ஒன்றிணைந்து போராடுவோம். அதைவிட்டுட்டு பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டாம்” என்றார். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்கள் கிளம்பிச் சென்றனர். இதன்பிறகு நள்ளிரவில் தண்டுபத்து கிராமத்தில் உள்ள தன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடியை முகமுடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இக்காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக தண்டுபத்தைச் சேர்ந்த செல்வநாதன், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஜின்னா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘பஞ்சாயத்து பேச வந்தவர்களை திருப்பியனுப்பிய ஆத்திரத்திரத்தில் அடித்து நொறுக்கியிருக்கலாம்’ எனச் சொல்லப்படுகிறது.

உடைக்கப்பட்ட காரை பார்வையிட்ட எஸ்.பி

நள்ளிரவில் நடந்த கார் உடைப்புச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை தைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல, ஏற்கெனவே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அ.தி.மு.க நிர்வாகி திருமணவேல், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்திய உறவினர்களின் கோரிக்கை நிறைவேறியதால் செல்வனின் உடலைப் பெறாமல் 4 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.

`செல்வனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அவரது நிலப் பிரச்சினை தொடர்பான வழக்குகள் சுமுகமாக முடித்து வைக்கப்படும்' என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்து போராட்டத்தை முடித்துக் கொள்வதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர் மேலும் அவரது செல்வனின் உடலை பெறுவதற்கும் உறவினர்கள் சம்மதித்துள்ளனர்.

Also Read: நெல்லை: `கட்டப் பஞ்சாயத்து.. அடித்துக் கொலை!’ - இன்ஸ்பெக்டர்மீது வழக்கு பதிவு



source https://www.vikatan.com/news/crime/mla-car-was-attacked-in-thoothukkudi-in-selvan-murder-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக