Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

`அந்தப் போராட்டங்களுக்கு எங்கள் நன்றி!' அமெரிக்காவை நெகிழ வைத்த கின்ஸ்பெர்க் யார்?

பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி பராக் ஒபாமா, இவாங்கா ட்ரம்ப் என அரசியல் தலைவர்கள் வரை அத்தனை பேரும் இவரை நினைவுகூருகின்றனர். பெண்ணியத்தின் அடையாளமாக, நீதியின் துணிச்சலான குரலாக ஒட்டுமொத்த தேசமும் இவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறது. அவர், அண்மையில் மறைந்த ரூத் பேடர் கின்ஸ்பெர்க். யார் இந்த ரூத் பேடர் கின்ஸ்பெர்க்?

Ruth bader ginsburg

அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக கால் நூற்றாண்டுக்கும் மேல் பணியாற்றியவர். புற்றுநோய் காரணமாக சில தினங்களுக்கு முன்னால் தன்னுடைய 87-வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்த கின்ஸ்பெர்க், 60 வருடங்களுக்கு முன்னால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஒரு கிளார்க்காக தன் கரியரை ஆரம்பித்தவர். இதன் பிறகு சட்டம் படிக்க முனைந்தவரைத் தொடர்ந்து ஒதுக்கியிருக்கிறார்கள். இதுதொடர்பான வழக்கை கின்ஸ்பெர்க் பதிவுசெய்ய, அது பாலின பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்திருந்த ஒரு மாநில சட்டத்தை முறியடிக்க வழிவகுத்தது. "நானொரு பெண். அதிலும் யூதப்பெண். நான்கு வயதுக் குழந்தைக்கு அம்மா. இந்த மூன்று காரணங்களுக்காகவே என்னை அவர்கள் புறம் தள்ளினார்கள்’ என்று பிற்கால பேட்டியொன்றில் கின்ஸ்பெர்க்கே இதைப் பகிர்ந்திருக்கிறார்.

Also Read: வரிக்கணக்கு தாக்கலில் அதிரடி மாற்றங்கள்... நன்மையா, தீமையா? - கவனத்தில்கொள்ள வேண்டிய அம்சங்கள்!

அமெரிக்கன் சிவில் லிபர்டி யூனியனின் (ACLU) கோ ஃபவுண்டர், அதே அமைப்பின் பெண்ணுரிமை தொடர்பான ப்ராஜெக்டின் கோ ஃபவுண்டர், அதன்பிறகு அதனுடைய ஜெனரல் கவுன்சில் பொறுப்பு . 1974-ல் ACLU சார்பில், பெண்களின் உரிமை தொடர்பாக 300 வழக்குகளில் ஆஜரானது, பாலினப் பாகுபாடு தொடர்பாக ரூத் ஆஜரான 6 வழக்குகளில் 5 வழக்குகளில் வெற்றிபெற்றது என்று அமெரிக்காவின் இன மற்றும் பாலின பாகுபாட்டு எதிர்ப்புச் சட்டத்தின் முகத்தையே பாசிட்டிவ்வாக மாற்றியவர் கின்ஸ்பெர்க் என நினைவுகூருகிறார்கள் அமெரிக்க பிரபலங்கள்.

இரங்கல்

மிச்செல் ஒபாமா, "நீங்கள் பெண்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த சம உரிமைக்காக நன்றி கின்ஸ்பெர்க்’ என்று புகழாரம் சூட்ட, இவாங்கா ட்ரம்ப், ’பெண்ணியத்தின் அடையாளம்’ என்று தன்னுடைய இரங்கலில் குறிப்பிட்டிருக்கிறார். நடிகை ஜெனிஃபர் லோபஸ் ‘பாலின பாகுபாட்டுக்கெதிரான உண்மையான சாம்பியன் நீங்கள்’ என்று தன்னுடைய ட்விட்டரில் உருக, பிரியங்கா சோப்ரா ’பெண்களால் என்ன செய்ய முடியும் என்பதை இந்த உலகுக்கு பறைசாற்றியவர் நீங்கள். உங்களை மறக்க முடியாது’ என்று நெகிழ்ந்திருக்கிறார். அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ட்ரம்ப்பின் பழைமைவாதக் கொள்கைகளை கின்ஸ்பெர்க் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும் , ’டைட்டன் ஆஃப் த லா’ என்று தன்னுடைய ட்விட்டரில் புகழ்ந்திருக்கிறார் ட்ரம்ப். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, ‘அந்தச் சிறிய உருவம் மிகப்பெரிய காரியங்களைச் சாதித்தது. அவர் புற்றுநோயுடன் மட்டுமல்ல, ஜனநாயகத்துக்காகவும் கடைசி வரை போராடியவர்’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.

நீதி தேவதைக்கு நம்முடைய இரங்கல்களும் வீர வணக்கங்களும் சென்று சேரட்டும்!

Also Read: புதிய வேளாண் சட்டங்கள்... ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க எம்.பி! - விவசாயிகளுக்கு நன்மையா, தீமையா?



source https://www.vikatan.com/lifestyle/remembering-justice-ruth-bader-ginsburg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக