Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

30 ஆண்டு உழைப்பில் 3 கி.மீ கால்வாய் வெட்டிய விவசாயி... டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

ரம் நட்டு, குளம் வெட்டி தன் நாட்டு மக்களுக்காகச் சேவை செய்த மன்னர் அசோகரைப் பற்றிப் பாட புத்தகங்களிலும் கதைகளிலும் கேள்விப்பட்டிருப்போம். இங்கு ஒரு ஏழை விவசாயி தன் கிராமத்து மக்களுக்காக 3 கி.மீ நீளத்தில் ஒரு கால்வாயை வெட்டி நிகழ்கால அசோகராகியிருக்கிறார்!

Also Read: கோவை: 2 கிலோ தங்கம்... 58 கிலோ வெள்ளி... 66 கேரட் வைரம்! - ஜோதிட குடும்பத்தின் வரதட்சணைக் கொடுமை

பீகாரில் உள்ள கயாவைச் சேர்ந்த லாங்கி புயானுக்கு வயது ஏறக்குறைய 75-க்கு மேலே இருக்கும். ஏழை விவசாயியான இவர், தண்ணீரே வராத தனது கிராமத்தின் நீர்ப்பாசன நோக்கங்களுக்காகக் கால்வாய் ஒன்றைத் தோண்டியுள்ளார். தன் ஊருக்கு அருகில் இருக்கும் மலைப்பகுதியிலிருந்து தன் கிராமத்தின் வயல்கள்வரைக்கும் இவர் வெட்டிச் சென்றுள்ள கால்வாய் கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் நீளமுடையது. லாங்கி புயானின் கடந்த 30 ஆண்டுகள் உழைப்பில் இந்தக் கால்வாய் உருவாகியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய லாங்கி புயான், "என் கிராமத்தின் நீர்ப்பாசன வசதிக்காக இந்தக் கால்வாயை ஏற்படுத்தியுள்ளேன். கடந்த 30 வருடங்களாக என் கால்நடைகளை மேய்த்துக்கொண்டே இந்தக் கால்வாயை வெட்டினேன். இதற்காக நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. கிராமவாசிகள் எல்லாரும் வாழ்வாதாரத்துக்காக நகரங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் நான் அப்படிச் செல்லாமல் என் கிராமத்திற்காக ஏதாவது செய்ய விருப்பப்பட்டேன்" என்று கூறியுள்ளார்.

ஆனந்த் மஹிந்த்ரா அளித்த பரிசு

தன் கிராமத்து மக்களுக்காக தனியொருவராகக் கால்வாய் வெட்டிய இவரைப் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவத் தொடங்கின. இவரைப் பற்றி ரோஹின் குமார் என்பவர் தன் ட்விட்டர் பகுதியில், ``தன் கிராம மக்களின் நலனுக்காக 30 ஆண்டுகள் தனியாகக் கால்வாய் வெட்டியுள்ள இவர் அதற்குப் பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தன்னிடம் ஒரு டிராக்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்" என்று பதிவிட்டு மஹிந்திரா குழுமத்தின் சேர்மேனான ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து, 'இந்த விவசாயியைப் பெருமைப்படுத்த மஹிந்திரா விரும்புவர் என்று நான் கருதுகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், 'அவருக்கு டிராக்டர் பரிசளிப்பதை என் பாக்கியமாகக் கருதுகிறேன்' என்று பதிவிட்டிருந்தார். அவர் கூறியிருந்தவாறு நேற்று விவசாயி லாங்கி புயானுக்கு மஹிந்திரா குழுமம் சார்பில் ஒரு புது டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/anand-mahindra-gifts-tractor-to-farmer-in-bihar-who-dug-3-km-canal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக