Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

திருச்சி: `தொடரும் வியாபாரிகளின் போராட்டம்’ - காந்தி மார்க்கெட் விவகாரத்தில் நடப்பது என்ன?

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க என அரசியல் கட்சியினரும் மாறி மாறி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரையிலும் எந்தவித நடவடிக்கை இல்லையென்று ஆதங்கப்படுகிறார்கள்.

கடையில் தீ விபத்து

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டது. மார்க்கெட்டில் உள்ள கடைகளில் திருட்டு நடப்பதும் தீப்பிடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் காந்தி மார்க்கெட்டில் பழனிச்சாமி என்பவரது கடையில் திடீரென்று புகை வந்தது. இதைப் பார்த்த வியாபாரிகள் விரைந்து தீயை அணைத்தனர். இதில் கடையின் முன்பகுதி மற்றும் உள் பகுதியிலிருந்த சாக்குகள் எரிந்து சாம்பலானது.

தொடர்ந்து, இது போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருப்பதால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திடீரென மார்க்கெட்டில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வணிகர் வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் கோவிந்தராஜுலு, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவர் கமலக்கண்ணன் மற்றும் ஹக்கீம் தலைமையில் வியாபாரிகள் என ஏராளமானோர் தர்ணாவில் பங்கேற்றனர்.

வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம்

தகவலறிந்த ஆர்.டி.ஓ விஸ்வநாதன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டகாரர்கள் ஆட்சியர் வந்து உறுதியை அளிக்கும் வரையிலும் நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் எனக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்பு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தற்பொழுது போராட்டம் நடத்தினால் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றனர். எனினும் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து போக மறுத்தனர். தொடர்ந்து கோவிந்தராஜுலு உட்பட 10 பேர் மட்டும் ஆட்சியரைச் சந்தித்து பேச அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

பாதுக்காப்பு பணியில் போலீஸார்

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் 28 பேரை குண்டுகட்டாக போலீஸார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதற்கிடையே கலெக்டரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், `வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது’ என்றார். இதனால் வியாபாரிகள் அவேசம் அடைந்தனர்.

இந்நிலையில் வியாபாரிகள் அடைக்கப்பட்ட மண்டபத்திற்கு வந்த தி.மு.க எம்.எல்.ஏ மகேஷ் பொய்யாமொழி கைதான வியாபாரிகளிடம் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், வியாபாரிகளிடம், ``எனது தெற்கு மாவட்ட எல்லைக்குள் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அமைந்துள்ளதால் அரசியல் லாபம் இன்றி வந்துள்ளேன்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

காந்தி மார்க்கெட் திறப்பு குறித்து முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் இதற்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நான் எப்போதும் குரல் கொடுப்பேன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்.

வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அமைச்சர்

சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ``இந்த மார்க்கெட் விவாகரம் குறித்து முதல்வரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. சட்டரீதியாக ஆலோசனைப் பெறப்பட்டு மார்கெட்டை திறக்கப்பாடுபடுவேன்” என்றவர், இறுதியாக ``என் உடம்பில் உயிர் உள்ளவரை இந்த மார்க்கெட்டை அகற்ற விடமாட்டேன்” என்று வியாபாரிகளிடம் உருக்கமாக பேசிவிட்டு சென்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/trichy-gandhi-marker-issue-vendors-protesting-to-open-the-market

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக