பொதுவாகவே சஷ்டி திதி முருகப்பெருமானின் வழிபாட்டுக்கு உகந்தது. அதிலும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவது இன்னமும் சிறப்பு வாய்ந்தது. இவை இரண்டும் இணைந்து செவ்வாய்க்கிழமை வாய்ப்பது அதனினும் சிறப்பு. காரணம் செவ்வாய்க்கிழமை முருக வழிபாட்டுக்கானது.
கிழமை என்றால் உரிமை. செவ்வாய்க்கிழமை என்றால் செவ்வாய் கிரகத்துக்கு உரியது என்று பொருள். செவ்வாயை ஜோதிட சாஸ்திரம் பூமி காரகன் என்கிறது. அதேபோன்று அழகு, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் செவ்வாயே அதிபதி. அப்படிப்பட்ட செவ்வாயின் அனுகிரகம் பெற நாம் வணங்க வேண்டிய கடவுள் முருகப் பெருமான். செந்நிறமேனியனான சரவணனை வணங்கினால் செவ்வாய் பகவானால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சஷ்டியின் மகிமையால் பிழைத்த சூரபத்மன்!
பொதுவாக சஷ்டி திதியின்போது முருகப் பெருமானை விரதம் இருந்துவழிபட்டால் பகைவரால் உண்டாகும் துன்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை. சிறைப்பட்டிருந்த தேவர்களின் துயர் தீர்க்க முருகப்பெருமான் சூர்பத்மனோடு யுத்தம் செய்தார். பகைவரை வதம் செய்வதுதான் யுத்தம். ஆனால் முருகப்பெருமானோ சூரபத்மனை வதம் செய்யவில்லை. மாறாக அவனை சேவலும் மயிலுமாக்கி அவனுக்கு அழிவில்லாப் பெருவாழ்வை அருளினார். சூரபத்மனுக்கு முன்பாக முருகப்பெருமானை எதிர்த்த அசுரர்கள் பலரையும் வதம் செய்த முருகன் சூரபத்மனை மட்டும் கொல்லவில்லை. இதற்குக் காரணம் சஷ்டி திதி. இருவரும் நேருக்கு நேராக நின்று யுத்தம் செய்தனர். யுத்தகளம் என்றாலும் முருகப்பெருமானின் அருள் தரிசனம் சூரபத்மனுக்குக் கிடைத்தது.
சஷ்டி அன்று முருக தரிசனம் செய்தவர்க்கு அழிவு என்பது நிச்சயம் இல்லை. அதனால்தான் முருகக்கடவுள் சூரனைக் கொல்லாது அவனை உருமாற்றி அருளினார் எனலாம். பகைவனுக்கே திருவடி அருளிய சஷ்டி திதியில் சரவணனை வழிபட்டால் வழிபடுபவர்கள் அடையும் நன்மைகள் அளவிடற்கரியது. திதியில் சஷ்டியும் நட்சத்திரங்களில் கார்த்திகையும் முருக வழிபாட்டுக்கு உகந்தவை. இவை இரண்டுமே ஆறு என்னும் எண்ணோடு தொடர்புடையன. ஆறு கார்த்திகைப் பெண்களே சரவணப்பொய்கையில் மலர்ந்த அக்னியின் அம்சமான குழந்தைகளை வளர்த்தவர்கள். அதன் பயனாக எந்நாளும் நின்று பிரகாசிக்கும் நட்சத்திரங்களாகும் வரம் பெற்றனர். அந்த ஆறு நட்சத்திரங்களின் பெயரே கார்த்திகை. ஆறுமுகனான முருகப் பெருமானை ஆறாம் திதியான சஷ்டி அன்றும் ஆறு நட்சத்திரங்களின் தினமான கார்த்திகை நட்சத்திர தினத்தின் அன்றும் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
முருகப்பெருமான் சிவ வடிவம். அவரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர். முருகனுக்குத் தன் சக்தியை வேலாக வழங்கினாள் அன்னை பார்வதி. எனவே, முருகப்பெருமானை வழிபடுவது என்பது சிவசக்தி வடிவ வழிபாடே எனலாம்.
இன்று, செவ்வாய், சஷ்டிதிதி, கிருத்திகை நட்சத்திரம் ஆகிய மூன்றும் சேர்ந்து வந்துள்ளது. எனவே இந்த நாளில் முருகப்பெருமானை வழிபடுவது சகலவிதமான நன்மைகளையும் நமக்குத் தரும். எனவே கட்டாயம் இன்று மாலை முருக வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக, செந்நிற மலர்கள் கிடைத்தால் அதை முருகப்பெருமானுக்கு சூட்டுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் சாத்தி வழிபட்டால் செவ்வாய் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். மேலும் சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம் செய்வது சிறப்புவாய்ந்தது.
அருணகிரியார் அருளிய வேல்வகுப்பு, சச்சிதானந்த சுவாமிகள் அருளிய வேல் மாறல் ஆகியவற்றைப் பாராயணம் செய்யுங்கள். கந்த சஷ்டிக்கவசம் படிப்பதன் மூலம் நமக்கு வரும் இன்னல்கள் யாவும் நீங்கும் என்பது அடியார் வாக்கு. எனவே இன்று தவறாமல் முருக வழிபாடு செய்து நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.
source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-of-worshiping-lord-muruga-on-sashti-thithi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக