Ad

திங்கள், 21 செப்டம்பர், 2020

#Dhoni கேப்டனாக பெற்ற 100 வெற்றிகளில் மறக்கமுடியாத மூன்று போட்டிகள்! #CSK

சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக வெற்றிகளில் சென்சுரி அடித்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. 437 நாட்களுக்குப்பின் மீண்டும் மும்பைக்கு எதிராக கிரிக்கெட் களத்துக்குத் திரும்பி 100-வது வெற்றியோடு 2020 கணக்கைத் தொடங்கியிருக்கும் தலைவன் தோனியின் வின்னிங் மொமன்ட்ஸில் மூன்று மட்டும் இங்கே!

தோனியின் வின்னிங் மொமன்ட்ஸைப் பார்க்கும்முன் அவர் 100 வெற்றிகளைப் பதிவு செய்ய உதவிய மூன்று முக்கிய விஷயங்களைப் பார்க்கவேண்டியது அவசியம்.

அணியே ஆதாரம்!

எந்தவொரு ஃபார்மேட்டிலும், தொடர்ந்து வெற்றிபெற ஒரு கோர் அணியை உருவாக்க வேண்டும். டி20 போட்டிகள் இளைஞர்களுக்கானது என எல்லோரும் ஒரு ரூட்டில் போனால், தோனி வேறு ரூட்டில் போனாதுதான் வெற்றிகளின் தொடக்கம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் அல்லது ஓய்வின் விளிம்பில் இருந்தவர்கள்தான் தோனியின் சாய்ஸ். தன்னுடைய களம் என்ன, அந்தக் களத்தில் சிறப்பாக பர்ஃபார்ம் செய்யக்கூடியவர்கள் யார் என்பதில்தான் தோனியின் கவனம் இருக்கும். வெறும் பேருக்காக, ஒன் சீசன் வொண்டர்களுக்காக போட்டிப்போட்டிக்கொண்டு பல கோடி ரூபாய்க்கு வீரர்களை வாங்கும் பழக்கம் தோனிக்குக் கிடையாது. ஐபிஎல்-ன் ஆரம்பத்தில் சென்னையின் மேட்ச் வின்னர்களாக மேத்யூ ஹேடனும், மைக் ஹஸ்ஸியும்தான் இருந்தார்கள். இவர்கள் அப்போது கரியரின் கடைசி கட்டத்தில் இருந்தார்கள். அப்போது தொடங்கிய பழக்கம் இப்போது ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர் வரை தொடர்கிறது.

#Dhoni

பலம், பலவீனம் அத்துப்படி!

அணிக்குள் இருக்கும் ஒவ்வொரு வீரரின் பலம், பலவீனம் என அத்தனையும் தோனிக்கு அத்துப்படி. ஒவ்வொரு வீரரிடமும் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவரும் திறமை தோனிக்கு உண்டு. பொதுவாக ஸ்பின்னர்களுக்கு இவர்தான் காட் ஃபாதர். ஒரு பேட்ஸ்மேனின் மனநிலையை அறிந்து அவருக்கு எப்படிப் பந்துவீசினால் விக்கெட்டுகள் விழும் என ஓவ்வொரு ஸ்பின்னருக்கும் வியூகம் அமைத்துக்கொடுப்பவர் தோனிதான். முத்தையா முரளிதன், ரவிச்சந்திரன் அஷ்வின் தொடங்கி ரவீந்திர ஜடேஜா வரை எந்த ஸ்பின்னரை எந்த நேரத்தில் பயன்படுத்தவேண்டும் என தோனிக்குத் தெரியும்.

கண்டுகொள்ளாதவர்களைக் கண்டுகொள்வது!

மற்ற அணிகள் எல்லாம் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களைப் பல கோடிகளுக்கு வாங்குவதில் ஆர்வம் காட்டும். ஆனால், தோனி எந்த அணியும் கண்டுகொள்ளாத வீரர்களை எல்லாம் ஒன்றுதிரட்டி மேட்ச் வின்னர்களாக மாற்றுவார். ஹில்ஃபனாஸ், பொலிஞ்சர், நிட்னி, ஜேக்கப் ஓரம் எனப் பல வெளிநாட்டு பெளலர்கள் சென்னை அணிக்குள் வந்தது இப்படித்தான். வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் பாலாஜி, கோனி, ஜோகிந்தர் ஷர்மா, மோகித் ஷர்மா, சுதிப் தியாகி என இப்போது ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் வரைப் பலவீரர்களை பட்டைத்தீட்டியிருக்கிறார் தோனி.

இப்படி தனக்கு ஏற்ற ஒரு அணியை வலுவாக உருவாக்கியதுதான் 100 வெற்றிகளுக்கான அடிப்படைக் காரணம். இனி வின்னிங் மொமன்ட்ஸஸ்களைப் பார்க்கலாம்.

#Dhoni

2010 - டென்ஷனாக்கிய பஞ்சாப்!

கேப்டன் கூலையே டென்ஷனாக்கிய போட்டி இது. தர்மசாலாவில், பஞ்சாப்புக்கு எதிராக நடைபெற்றது 2010 ஐபிஎல்-ல் சென்னையின் கடைசி லீக் போட்டி. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால்தான் சென்னை குவாலிஃபையருக்குத் தகுதிபெற முடியும் என்கிற நிலை. டாஸ் வென்ற தோனி பஞ்சாபை முதலில் பேட்டிங் செய்ய அழைக்கிறார். ஷான் மார்ஷும், இர்ஃபான் பதானும் சென்னை பெளலர்களை விரட்டி விரட்டி அடிக்க 192 ரன்களைக் குவித்துவிட்டது பஞ்சாப். சென்னையின் சேஸிங்கில் ஓப்பனர்கள் முரளி விஜய்யும், ஹேடனும் வந்தவேகத்தில் பெவிலியன்போக அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த சுரேஷ் ரெய்னாவும் 10-வது ஓவரில் அவுட். 27 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்தார் ரெய்னா. தோனி களத்துக்கு வரும்போது 62 பந்துகளில் 104 ரன்கள் அடிக்கவேண்டும் என்பதுதான் டார்கெட். ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட 10 ரன்கள் அடிக்கவேண்டும். பத்ரிநாத் கை கொடுத்தார். எப்போதுமே பயந்து பயந்து ஆடும் பத்ரிநாத் அன்று பாய்ந்து பாய்ந்து அடித்தார். 36 பந்துகளில் 53 ரன்கள் அடித்து பத்ரிநாத் அவுட் ஆகும்போது 20 பந்துகளில் 45 ரன்கள் அடிக்கவேண்டும்.

மோர்க்கல், தோனியோடு சேர்கிறார். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும். தோனி ஆன் ஸ்ட்ரைக். பேட்டிங்கில் கலக்கிய இர்ஃபான் பதான் பெளலிங். யார்க்கராக வந்த முதல் பந்தை கொஞ்சம் உள்ளே ஒதுங்கி லாங் ஆஃபில் அடித்து பவுண்டரியாக மாற்றுகிறார் தோனி. அடுத்த பந்தில் 2 ரன்கள். நான்கு பந்துகளில் 10 ரன்கள் அடிக்கவேண்டும். பதான் யார்க்கர்களை சரியாக வீசமுடியாமல் திணறுகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, பந்து எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணித்து அடுத்த இரண்டு பந்துகளையுமே லாங் ஆனில் சிக்ஸராக்கி சென்னையை வெற்றிபெறவைத்து குவாலிஃபையருக்குள் அழைத்துச்சென்றார் தோனி. ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே மறக்கமுடியாத கூஸ் பம்ப் மொமன்ட் இது.

2010 - மும்பையை வீழ்த்தி முதல் கோப்பை!

தோனியின் ஃபீல்ட் செட்அப்களால் மும்பை மிரண்ட போட்டி இது. சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து, ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தால், அரை சதத்தால் 168 ரன்கள் அடித்துவிட்டது. போட்டி நடந்தது மும்பை வான்கடேவில். இதெல்லாம் ஒரு டார்கெட்டே இல்லை என்கிற கெத்தோடு பேட்டிங் ஆட வந்தது மும்பை. ஆனால், விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்துகொண்டேயிருந்ததால் மும்பைக்குத் தேவையான ரன்ரேட் கூடிக்கொண்டே போனது. கடைசி மூன்று ஓவர்களில் 55 ரன்கள் அடிக்கவேண்டும். பொலிஞ்சர் சென்னைக்காக பெளலிங் போடுகிறார். பொலார்ட் பீஸ்ட் மோடில் ஆடுவார் என பொலிஞ்சர் எதிர்பார்க்கவேயில்லை. இந்த ஓவரில் ஒரே ஒரு டாட் பால்தான். 2 சிக்ஸர், 2 பவுண்டரி என மொத்தம் 22 ரன்கள் அடித்துவிட்டார் பொலார்ட். டார்கெட் சட்டென 12 பந்துகளில் 33 என குறைந்துவிட்டது. தோனி பதற்றப்படவேயில்லை.

#Dhoni

பொலார்ட் தொடர்ந்து ஸ்ட்ரெய்ட் பவுண்டரி லைனைத்தான் குறிவைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அடுத்த ஓவரில் மார்க்கலை பொலார்டுக்கு எங்கே பந்து வீசவைக்கவேண்டும் எனச் சொல்லிவிட்டு, அதற்கேற்றபடி ஃபீல்டிங் செட்அப்பை மாற்றுகிறார் தோனி. அதுவரை யாரும் பார்த்திராத ஃபீல்டிங் செட்அப் அது. கிட்டத்தட்ட அம்பயருக்கு அப்படியே நேர் பின்னால் மிட் ஆஃபில் ஒரு ஃபீல்டர். அவருக்கு அப்படியே பின்னால் லாங் ஆஃபில் ஒரு ஃபீல்டர் என இரண்டு ஃபீல்டர்களை ஸ்ட்ரெய்ட்டில் நிறுத்துகிறார். முதல் ஃபீல்டராக மிட் ஆஃபில் மேத்யூ ஹேடனை நிற்க வைக்கிறார். லோ கேட்ச்கள் பிடிப்பதில் வல்லவர் ஹேடன் என்பதால் அவருக்கு அந்த இடம். தோனியின் வியூகம் அந்த ஓவரின் கடைசிப்பந்தில் கைகொடுக்கிறது. தோனி எதிர்பார்த்தபடியே பொலார்ட் ஸ்ட்ரெட்யில் தூக்கியடிக்க மேத்யூ ஹேடனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார். சென்னை முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்கிறது. தோனியின் திறமையான ஃபீல்டிங் செட்அப்பால் கிடைத்த வெற்றி இது.

2011 - கெய்ல் புயல்!

நடப்பு சாம்பியன்களுடன் மோதி முதல்முறையாகக் கோப்பையை வெல்லும் கனவுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். போட்டி நடப்பது சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில். அந்த சீசன் முழுக்க உச்சகட்ட ஃபார்மில் மொரட்டு அடி அடித்துக்கொண்டிருக்கிறார் கிறிஸ் கெய்ல். 2 சதம் 3 அரை சதம் என அந்த சீசனில் மட்டும் 608 ரன்கள். கெய்லைப் பார்த்தே எல்லோரும் அலறுகிறார்கள். ஆனால், தோனி எப்போதும்போல் கூலாக கிறிஸ் கெய்லை சமாளிக்கவேண்டிய வியூகங்களோடு வருகிறார். டாஸ் வென்றால் முதலில் பெங்களூரை விளையாடவிடுவது ரிஸ்க் என முடிவெடுத்து, டாஸ் வென்றதும் முதல் பேட்டிங்கைத் தேர்வுசெய்கிறார். மைக் ஹஸ்ஸியும், முரளி விஜய்யும் சிறப்பாக ஆட சென்னை 205 ரன்கள் அடிக்கிறது.

#Dhoni

முரளி விஜய் 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார். 205 ரன்கள் அடித்திருந்தாலும் கெய்லை செட்டில் ஆகவிட்டால் ஆட்டம் கை மீறிப்போய்விடும் என்பதை உணர்ந்திருந்த தோனி, முதல் ஓவரிலேயே பெங்களூருவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். ரவிச்சந்திரன் அஷ்வினை முதல் ஓவர் போடவைத்தார் தோனி. அதுவரை பவர் ப்ளேக்களில் வேகப்பந்து வீச்சாளர்களைப்போட்டு துவைத்துக்கொண்டிருந்த கெய்லுக்கு இந்த முடிவே கொஞ்சம் பயத்தைத் தந்திருக்கும். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அஷ்வினின் ஆஃப் ஸ்பின் சிறப்பாக வொர்க் அவுட் ஆகும் என்கிற தோனியின் முடிவு எதிர்பார்த்ததுபோலவே சரியானது. கெய்ல், தோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட். மேட்ச் முதல் ஓவரிலேயே சென்னை பக்கம் திரும்பியது. சென்னை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது.

2018 - திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

சூதாட்டப் புகார் காரணமாக, இரண்டு வருடத் தடையில் இருந்து மீண்டும் 2018 சீசனுக்குள் வந்தது சென்னை. ஆனால், ஏலத்தில் எல்லா சீனியர்களையுமே சென்னை அணி வளைத்துப்போட அங்கிள்ஸ் ஆர்மி என கேலி, கிண்டல்கள் கிளம்பின. சென்னை சேப்பாக்கம் பிட்ச்சின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி அணியை உருவாக்கியிருந்தார் தோனி. ஆனால், காவிரி நதிநீர் பிரச்னை காரணமாக முதல் போட்டியோடு அந்த சீசனின் அத்தனை போட்டிகளும் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்டது. கலங்கிப்போனது சிஎஸ்கே கேம்ப். சேப்பாக்கத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட அணி எப்படி புனேவில் சிறப்பாக விளையாடும் எனப் பல கேள்விகள். ஆனால், தோனி பதில்களைக் கொடுத்துக்கொண்டேயிருந்தார்.

#Dhoni

சிஎஸ்கே வீரர்களுக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத புனே மைதானத்தில் விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் சென்னையை வெற்றிபெறவைத்தார் தோனி. வெளியே நடக்கும் எந்த விஷயமும் அணியின் பர்ஃபாமென்ஸை பாதிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார் தோனி. 2013 போட்டிகளின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் புகார்களால் சென்னை அணிக்குள்ளும் பிரச்னைகள் வந்தன. சென்னை அணியின் உரிமையாளராக அதுவரை பார்க்கப்பட்ட குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் கொல்கத்தாவில் 2013 ஐபிஎல் இறுதிப்போட்டியை ஆடியது சென்னை. இந்தப் போட்டியில் சென்னை தோற்றது. புறசூழல்கள் அணிக்குள் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என தோனி அப்போது எடுத்தப் பல முடிவுகள் 2018-ல் கைகொடுத்தது. அங்கிள்ஸ் ஆர்மியை வைத்தே கோப்பையை வென்றுகாட்டினார் தோனி.

சேப்பாக்கமோ, புனேவோ, மும்பையோ, அபுதாபியோ... போட்டி எங்கே நடந்தாலும், எந்த அணியாக இருந்தாலும் வெற்றிபெறுவதற்கான வியூகங்கள் தோனிக்குத் தெரியும்... 100 என்பது வெறும் நம்பர்தான்... தோனியின் வெற்றிகள் தொடரும் என்பதே அபுதாபி சொல்லியிருக்கும் செய்தி!


source https://sports.vikatan.com/ipl/winning-moments-of-csk-captain-dhoni

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக