Ad

வெள்ளி, 26 ஜூன், 2020

பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! #Video

ஆனித் திருமஞ்சன உற்சவம் முதலில் பதஞ்சலி முனிவரால் தொடங்கப்பட்டது என்கின்றன புராணங்கள். பதஞ்சலி முனிவர் ஆதிசேஷனின் அவதாரம். ஒருமுறை திருமால் பாற்கடலில் சயனம் கொண்டிருந்தபோது கண்கள் மூடியிருந்த நிலையில் தன் மலர்போன்ற உதடுகளை விரித்துப் புன்னகை செய்தார். திருமாலே மனம் மகிழ்ந்து புன்னகை செய்யும் அந்தத் திருக்காட்சி என்னவாக இருக்கும் என்று ஆதிசேஷனுக்குத் தோன்ற அதை அவர் பெருமாளிடம் கேட்டார்.

“சுவாமி எந்தக் காட்சியைக் கண்டு தாங்கள் மகிழ்ந்தீர்கள்...” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பெருமாள், “சிவபெருமான் நடராஜ ரூபம் கொண்டு நடனமாடுகிறார். அந்த ஆனந்த தாண்டவம் கண்டு மகிழ்ந்தேன்” என்றார். 

உடனே ஆதிசேஷனும், “தனக்கும் அந்தத் திருக்காட்சி தரிசனம் பெற ஆசையாய் இருக்கிறது. அதற்குத் தாங்கள்தான் அருள வேண்டும்...” என்று கேட்க மகிழ்வோடு பெருமாள் சிவனை நோக்கித் தவம் செய்யுமாறு கூறுகிறார்.

நடராஜர்

சிவபெருமானை அடையும் வழி

இந்தக் காலத்தில் முக்கியஸ்தர்களின் அறிமுகம் எல்லாக் காரியங்களையும் சாதித்துத் தந்துவிடுகிறது. தகுதியில்லாமலேகூடப் பலரும் பலவற்றையும் பெற்றுவிடுகிறார்கள். அதேபோன்று மகாவிஷ்ணுவும் தன் சக்தியால் ஆதிசேஷனுக்கு அந்தக் காட்சி தரிசனத்தை ஒரே கணத்தில் காட்டியருளியிருக்கலாம். ஆனால் அவரோ ஆதிசேஷனை சிவனை நோக்கித் தவம் செய்யும்படி அறிவுறுத்துகிறார்.

சிவனின் திருவடி தரிசனம் என்பது யாராலும் அடையமுடியாதது. அரியும் பிரம்மாவும் சிவனின் அடிமுடியை அறியவிரும்பித் தோற்றனர். அப்படி மும்மூர்த்திகளில் இருவருக்கே எட்டாத திருவடி எப்படி சாதாரண முனிவர்களுக்கும் ஞானிகளுக்கும் பக்தர்களுக்கும் கிடைக்கும்?

திருவடிகளைப் பற்றிக்கொள்வதுதான் கலியுகத்தில் மீட்புக்கு ஒரே வழி. பிறயுகங்களில் யாகங்களும் தவங்களும் அளித்த பலன் இந்தக் கலியுகத்தில் திருவடியை தியானிப்பவர்களுக்குக் கிடைக்கும். அப்படியான அந்த உயர்ந்த வரத்தை இறைவன் பக்தர்களுக்கு எளிமையாக அருள வேண்டும் என்னும் திருவுளத்தோடு செய்த அவதாரமே திருவடியைத் தூக்கி நடனமாடிய நடராஜத் திருவுருவம். 

இறைவனின் திருநடனம் எப்போதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அதைக் காண நமக்கு அவன் அருள் வேண்டும். அதை அடையும் வழி தவமும் வழிபாடுமே. சிவபெருமானின் திருநடனத்தைக் காணவிரும்பிய ஆதிசேஷன் தவம் செய்தார். அவரின் தவத்தில் மயங்கிய ஈசன் அவர் முன்பாக பிரம்மாவின் வடிவில் தோன்றினார்.

நடராஜர்

'பிரம்மா, நமக்கு சாகாவரம் அளிக்க இயலாது. முக்தி நிலையை அருளமுடியாது. பிரம்மாவிடம் தவம் செய்து வரம் பெற்ற அசுரர்கள் எல்லாம் இந்த உலக சுகங்களையே வரங்களாகக் கேட்டுப் பெற்றனர். உயர்ந்த லட்சியமாகிய சிவபதம் விரும்புபவர்கள் சிவனையே தியானிக்க வேண்டும். தவத்தினாலும் பக்தியினாலும் கிடைக்கும் உலக சுகங்களில் தன் மதிமயங்காது இறைவனை தியானிக்க வேண்டும். இல்லையென்றால் தன் பக்தியினை இழந்து தம் லட்சியத்திலிருந்து வழுவ நேரிடும்' என்று நினைத்த ஆதிசேஷன், தன் லட்சியத்தில் உறுதியாக இருந்தார்.

தன் முன் தோன்றிய பிரம்மாவிடம், “தங்களிடம் நான் வேண்டுவது எதுவுமில்லை. எனவே நீங்கள் போகலாம்” என்று சொல்லித் தன் தவத்தினைத் தொடர்ந்தார். ‘எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர்’ என்பதைப் போல ஆதிசேஷனின் மன உறுதியைக் கண்ட ஈசன் அவருக்குத் தன் சுய வடிவில் காட்சிகொடுத்தார். அப்போது, ஆதிசேஷன், "நான் தங்கள் திருநடனம் காண விரும்புகிறேன்’ என்று கேட்க, அதற்கு சிவபெருமான், ‘சிதம்பரம் தலத்துக்கு வா’ என்று சொல்லி மறைந்தார்.

பகன்தேவதைக்கும் ஆனித் திருமஞ்சனத்துக்கும் என்ன தொடர்பு? 

தமிழகத்தின் பெருமை நடராஜர்

நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து. அதில் முதலாவது சிதம்பரம். இங்குதான் இறைவன் தன் எல்லையில்லாப் பெருநடனத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். ஆதிசேஷன் நடனக் காட்சியைப் பெற மனித வடிவம் எடுத்துவந்தார். ஆதிசேஷன் அப்படியே திருநடனம் காண விரும்பியிருக்கலாம். ஆனால் மனிதராகப் பிறப்பெடுத்தவர்கள் திருநடனத்தைக் கண்டபின்பு எப்படி சிவநிலைக்கு உயர்வார்கள் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தவே அவர் மனிதராகப் பிறப்பெடுக்கிறார். மேலும் சிவனின் தூக்கிய திருவடி நடராஜ வடிவத்தின் சிறப்பு. தேவர்களும் காண்பதற்கு அரிய அந்தத் திருவடியை ஈசன் இங்கு எளிமையாக பக்தர்களுக்குத் தன் திருநடனத்தின் மூலம் காட்சியருளி அவர்களை சிவபதம் அடைய வழிகாட்டுகிறார்.

தமிழகத்திலிருந்து பிறந்த கலை பரதம். அதன் ஆதர்ச வடிவம் நடராஜப் பெருமான் திருவடிவம். நடனமாடும் ஈசனின் இந்தத் திருவடிவம் தமிழகக் கோயில்களில் மட்டுமே பெரும்பாலும் காணப்படுகிறது. ஆடல் கலையின் நாயகனாம் ஈசனிடம் பிறந்த அந்தக் கலையைப் பெற்று மக்களுக்கு அருளினார் பதஞ்சலி என்கின்றன புராணங்கள்.

அவரே ஈசனுக்கு உகந்த ஆனி உத்திர நட்சத்திர தினத்தில் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தி மகிழ்ந்தார். அதன்பின் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த ஆனித் திருமஞ்சன வைபவம் நடைபெற்றுவருகிறது. ஆனித் திருமஞ்சனத்தைக் காண்பதன் மூலம் பிறவிப் பிணி தீரும் என்றும் இந்த உலகில் தொல்லையில்லாத பெருவாழ்வு கிடைக்கும் என்றும் ஞான நூல்கள் கூறுகின்றன.

நடராஜர்

ஆறு அபிஷேகங்களில் ஒன்று

‘சித்திரையில் ஓணம் முதல்; சீர் ஆனி உத்தரமாம்

சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பத்தி வளர்

மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசி மன்றீசர் அபிடேக தினமாம்.’ என்கிறது ஆகமம். இந்த ஆறு அபிஷேக தினங்களில் ஆனி உத்திரமும் மார்கழித் திருவாதிரையும் சிறப்புமிக்க விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. சிதம்பரத்தில் இந்த இரண்டுவிழாக்களும் பிரம்மோற்சவ விழாக்களாகும். இந்த விழாக்களில் பத்துநாள்கள் இறைவனுக்கு உற்சவம் நடத்திப் பின் அபிஷேக ஆராதனைகள் செய்வர். 

நடராஜர் அபிஷேகம் விசேஷமானது. 32வகையான திரவியங்கள் கொண்டு குடம்குடமாகச் செய்யப்படும் இந்த ஆறு அபிஷேகங்களும் ஆறு கால வேளைகளில் நடைபெறும். இதற்கு தேவர்களின் காலக் கணக்கை ஆகமங்கள் சொல்கின்றன. தேவர்கள் தாங்கள் நடராஜரை பூஜிப்பதோடு பூவுலகில் நடக்கும் நடராஜ அபிஷேகங்களையும் கண்டு மகிழ்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்புவாய்ந்த இந்த அபிஷேக ஆராதனைகளைக் காண்கிறவர்கள் இந்தப் பிறவியில் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்.

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம்

சிதம்பரத்தில் நாளை (28.6.2020) அதிகாலை 2 மணிக்குத் தொடங்கும் அபிஷேக ஆராதனைகள் காலை 7 மணிவரை நடைபெறும். வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்வார்கள். ஆனால் இந்த அசாதாரணச் சூழலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனாலும் இறைவனுக்கு ஆகம முறைப்படி சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் தம் மனக்கண்ணில் நடராஜரின் திருமஞ்சனக் காட்சியைக் கண்டு ஈசனை வழிபட்டு மாணிக்கவாசகப் பெருமான் அருளிய சிவபுராணத்தைப் பாராயணம் செய்ய சகல நன்மைகளையும் சிவபெருமானின் நல்லருளால் பெறலாம்.



source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-and-the-benefits-of-aani-thirumanchanam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக