இந்தியாவில் மிகவும் பிரபலமான வீடியோ செயலியான டிக் டாக் மீது பாதுகாப்பு தொடர்பான புகார்கள் எழுந்தன. ஆனால், டிக் டாக் செயலியை நிர்வகித்துவரும் சீன நிறுவனமான பைட்டான்ஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தது. எனினும், டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீனப் பின்னணியைக்கொண்ட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்து உத்தரவிட்டது. டிக்டாக் தடை மற்றும் சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவிக்கொண்டிருக்கும் நேரத்தில் வந்த மத்திய அரசின் உத்தரவு ஆகியவை தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்களைக் குவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், சீன செயலிகள் தடைக்கு காங்கிரஸ் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளது.
சீன செயலிகள் தடை தொடர்பாக மத்திய அரசு, ``இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று கூறியுள்ளது. இந்த 59 செயலிகளில் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர் உள்ளிட்ட பல செயலிகள் அடங்கும்.
இந்த நிலையில், செயலிகள் தடை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அகமது படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், ``எல்லையில் ஊடுருவல் மற்றும் இந்திய வீரர்கள் மீது சீனப் படையினர் தாக்குதல் ஆகியவற்றுக்குப் பதிலடி கொடுப்பதன் அடிப்படையில் சீனப் பின்புலம் உள்ள செயலிகளைத் தடை செய்த மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். மத்திய அரசு இன்னும் கடுமையான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இதேபோல காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, ``சீன செயலிகளைத் தடை செய்வது நல்ல விஷயம். ஆனால், பிஎம்கேர்ஸ் நிவாரண நிதி, சீன நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது நல்ல யோசனையா இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read: `டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செல்போன் செயலிகளுக்குத் தடை!’- மத்திய அரசு
source https://www.vikatan.com/news/india/what-about-chinas-fund-in-pm-cares-asked-congress-to-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக