குன்னூர் ஊட்டி மலைப்பாதை துவங்கும் இடமானா குன்னூர் மலை ரயில் நிலையத்தின், சற்று தொலைவில் சாலையோர சிறிய தடுப்புக் கட்டடத்தின் மீது புகைந்துகொண்டிருந்தது. அருகில் குளிருக்கு இதமாக ஸ்வட்டர், குல்லா அணிந்து முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவர்மீது கவனம் திரும்ப உற்றுக் கவனித்தோம். மாலை நேரம் என்பதால் குளிருக்கு தீ மூட்டியிருக்கலாம் என முதலில் நினைத்தோம். ஆனால், இரண்டு மூன்று சிறிய கற்களைக்கொண்டு அடுப்பு ஒன்றை உருவாக்கியிருந்தார். அதன் அருகிலேயே சில பாத்திரத்திரங்களும் இருந்தன.
சாலையோரமே சமையலறை.. வானமே கூரை!
அவரின் அருகில் சென்று பேசத்துவங்கினோம் தன் பெயர் ஜேம்ஸ் என்று அறிமுகம் செய்துகொண்டு நம்மிடம் பேசத்துவங்கினார். ``ஊட்டி டவுன்ல சொந்தமா வீடு இருந்தது. அம்மா, அப்பா ரெண்டுபேருமே தவறிட்டாங்க, திருமணம் செஞ்சிக்கல, சொந்த பந்தம்னு உறவுகளும் பெருசா யாரும் இல்ல. ஒரு பிரச்னையில எல்லாத்தையும் விட்டுட்டு வெளிய வந்துட்டேன்.
பல வருசமா இந்தக் குன்னூர் மார்க்கெட்தான் எனக்கு சோறு போட்டுச்சி. இங்க இருக்க கடைல மூட்டத்தூக்கி அதுல கெடக்கிற வருமானத்தால் சாப்பிட்டு வந்தேன். திடீர்னு கொரோனானு சொன்னாங்க. எல்லாமே மாறிப் போச்சி. கடையெல்லாம் மூடுனாங்க. வேலை இல்ல. சாப்பாட்டுக்கே வழி இல்ல. ரொம்ப கஷ்ட்டப்பட்டேன்.
அப்போ இருந்து கெடக்கிற பொருளை வச்சி, இந்த ரோட்டோரமா ஒரு அடுப்ப போட்டு அப்பப்போ சமைச்சி சாப்பிட்டுக்குவேன். இப்போ கடையெல்லாம் கொஞ்சம் திறக்குறாங்க. ஒன்னு, ரெண்டு வேலை கிடைக்குது. இருக்க காச வச்சி சமையலுக்கு பொருள்களை வாங்கி வந்து, பாட்டில்ல தண்ணி கொண்டுவந்து கொஞ்சம் விறகு சேகரிச்சு சமைச்சிக்குவேன்.
இப்போல்லாம் வாரத்துக்கு ஒரே நாள்தான் சமைக்க காசு கிடைக்குது. அந்த சாப்பாட்டை வச்சி ஒரு நாளைக்கு ரெண்டு வேளைனு ஒருவாரத்துக்கு சாப்பிட்டுவிக்குவேன். இந்த வாரம் கிடைக்கிற காசுல அடுத்தவாரம் சமையலுக்கு வச்சிக்குவேன்" என்று தன் நிலையை விவரித்துக்கொண்டிருக்கும்போதே, அந்த சாப்பாடு சூடாகிவிட்டது.
உடனே அந்தப் பாத்திரத்தை இறக்கிவிட்டு மீதம் இருக்கும் பொருள்களை எடுத்துக்கொண்டு ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீரை அடுப்பில் ஊற்றி தீயை அணைத்துவிட்டு, `நான் தங்கும் இடத்துக்குப் போகலாம் வாங்க' என அழைத்துக்கொண்டு நடந்தபடியே மீண்டும் பேசத் துவங்கினார். ``அடுப்ப அணைக்காம போனா காட்டுக்குள்ள தீ பரவிரும். அதான் எப்போதும் தண்ணிய ஊத்தி அணைச்சிருவேன்" என்றார்.
`பசினு யார்கிட்டயும் கேக்க புடிக்காது’
குன்னூர் மலை ரயில் நிலையத்தின் எதிரில் ஒரு பாழடைந்த கட்டடம் இருந்தது. அதன் முன் பகுதியில் சில கோணிப்பைகள் விரிக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் அமர்ந்தவர், ``இங்கதான் தங்கிக்குவேன், மழை வந்தா பக்கத்துல இருக்க வராண்டாக்கு போய்க்குவேன். பசினு யார்கிட்டயும் கேக்க புடிக்காது. குளிருக்கு கம்பளி, மாத்து துணி எல்லாம் இந்தப் பையில் வச்சிருக்கேன்” என நம்பிக்கையுடன் பேசினார்.
ஜேம்ஸ் தாத்தா குறித்து அருகில் இருந்தவர்கள் ``யாருடைய உதவியும் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார். இவருக்கு உறவினர்களோ அல்லது அரசு உதவியோ எதுவும் இல்லை. உணவு, தங்கும் இடம் இல்லாமல் தவிக்கிறார். எதேனும் ஆதரவு இல்லத்துக்கு அழைத்துச் சென்றால் நல்ல முறையில் இருப்பார்" என்கின்றனர்.
சாலையோரமே சமையலறை, வானமே கூரை என குன்னூரின் கடும் குளிரிலும் யார் உதவியையும் நாடாமல் வாழ்ந்துவரும் இந்த ஜேம்ஸ் தாத்தா நம்பிக்கையின் அடையாளமாகவே உள்ளார்.
source https://www.vikatan.com/news/general-news/story-about-a-poor-honest-old-man
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக