Ad

சனி, 27 ஜூன், 2020

``வாபஸ் வாங்கச்சொல்லி, இந்து அமைப்பினர் மிரட்டினர்!'' - பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி

`காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை' என்ற அதிரடி அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்ட பால் முகவர்கள் சங்கம் ஒரே நாளில் `யு டர்ன்' அடித்து அறிவிப்பை வாபஸ் வாங்கியிருக்கிறார்கள்!

முழு ஊரடங்கு காலகட்டத்திலும்கூட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விநியோகத்துக்கு தடை விதிக்கப்பட மாட்டாது. அந்த வரிசையில், பச்சிளம் குழந்தைகளில் ஆரம்பித்து முதியோர் வரை அனைத்து தரப்பினருக்குமான ஆரோக்கிய உணவாக இருந்துவருவது ஆவின் பால். தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் பால் முகவர்கள் வீடுதோறும் ஆவின் பால் விநியோகம் செய்துவருகின்றனர்.

கொரோனா, ஊரடங்கு காலத்திலும் தங்கு தடையின்றி மக்களுக்கு பால் விநியோகம் செய்துவரும் இந்த முகவர் சங்கத்தினர் நேற்று முன்தினம், திடீரென ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அதில், `பால் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள முகவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்வது, பால் விநியோக மையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது எனத் தொடர்ந்து பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்துவருகின்றனர். எனவே, காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை' எனக் கடந்த வெள்ளிக்கிழமையன்று (26.6.2020) தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதற்கு அடுத்த நாளே அறிவிப்பை வாபஸ் வாங்கியது பால் முகவர்கள் சங்கம். இதன் பின்னணி குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமியிடம் விளக்கம் கேட்டோம்...

``காவல்துறையினர் தொடர்ச்சியாக எங்கள் முகவர்களுக்கு கொடுத்துவந்த இடையூறுகள் குறித்து தமிழக முதல்வர், பால் வளத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட அனைவரது கவனத்துக்கும் ஏற்கெனவே கொண்டு சென்றும்கூட உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வேறு வழியில்லாமல்தான், கனத்த இதயத்தோடு `காவலர் வீடுகளுக்கு பால் விநியோகம் இல்லை' என்ற முடிவை நேற்றைய தினம் எடுத்தோம்.

தென்பாரத இந்து மகாசபா எதிர்ப்பு

எங்களது இந்த அறிவிப்புக்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், கோயம்புத்தூரிலிருந்து பேசுவதாகச் சொன்ன சில இந்து அமைப்பினர், தங்களது அடையாளத்தை மறைத்து, தொலைபேசி வழியே எங்களை மிரட்டவும் செய்தனர். `தென்பாரத இந்து மகாசபா' என்ற அமைப்பு வெளிப்படையாகவே, சமூக ஊடகம் வழியே எங்களை வசை பாடியுள்ளனர்.

அதேசமயம், `காவல்துறையைச் சேர்ந்த ஒருசிலர் செய்கிற தவறுக்காக ஒட்டுமொத்தமாக அனைத்து காவலர்கள் வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்ய மாட்டோம் என்று அறிவிப்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. எனவே, மறுபரிசீலனை செய்யுங்கள்' என்று பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் எங்களிடம் கோரிக்கை வைத்ததோடு, எங்களது சிரமங்களையும் கனிவோடு கேட்டறிந்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும் எங்கள் பிரச்னைகளைக் கேட்டறிந்ததோடு, இதுகுறித்து சென்னைப் பெருநகர காவல் ஆணையாளரிடமும் பேசி சுமுக தீர்வு எட்ட உதவினார். காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளோடு பால் முகவர் சங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, `பால் முகவர்களுக்கு காவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்படும்' என்ற உத்தரவாதம் கிடைத்துள்ளது. இந்த உறுதிமொழியை ஏற்று எங்கள் போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெற்றுவிட்டோம். எனவே, வழக்கம்போல், அனைத்து வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்வதாக முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.

இதையடுத்து, இவ்விஷயத்தில் இந்து அமைப்பினர், காவலர்களுக்கு ஆதரவாகவும் பால் முகவர்களின் போராட்டத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்துவருவதன் பின்னணி என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் நோக்கத்தோடு, `தென்பாரத இந்து மகாசபா' தலைவர் வீர் வசந்தகுமாரிடம் பேசினோம்.

பொன்னுசாமி - வீர் வசந்தகுமார்

``சாத்தான்குளத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அடிப்படையாக வைத்து, காவலர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகத்தான் `காவலர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டோம்' என்று உள்ளர்த்தத்தோடு பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எங்கே யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், காவலர்களும் இந்தக் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு இன்னல்கள் - மன உளைச்சல்களுக்கு மத்தியில்தான் பணிபுரிந்து வருகின்றனர். யாரோ ஒருசில காவலர்கள் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக அனைத்து காவலர்கள் வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்ய மாட்டோம் என்று ஏன் சண்டித்தனம் செய்கிறீர்கள் என்றுதான் நாங்கள் சமூக ஊடகம் வழியே கண்டித்துள்ளோம். மற்றபடி நாங்கள் யாரையும் மிரட்டவில்லை.

Also Read: சாத்தான்குளம்: `அப்பவே நடவடிக்கை எடுத்திருந்தால்...’ -பிப்ரவரியில் நடந்தது என்ன?

சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்துபோனவர்கள் இரண்டு பேரும் கிறிஸ்துவர்கள். அதனால், இந்த விவகாரத்தை நாங்கள் மத ரீதியிலான பிரச்னையாக எடுத்துச் செல்கிறோம் என்று சொல்வது தவறு. இறந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உயிர் ஒன்றேதான். எனவே, தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

ஆவின் பால்

Also Read: டாக்டர் கிருஷ்ணசாமி மனைவிக்கு கொரோனா! -சீல் வைக்கப்பட்ட கோவை மருத்துவமனை

பால் முகவர்கள் இப்படியொரு மிரட்டல் போராட்டத்தை அறிவிப்பதற்கான தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள் என்பதுதான் எங்கள் கேள்வி. சாத்தான்குளம் படுகொலை விஷயத்துக்காக, ஏற்கெனவே வணிகர் சங்கங்கள் அடுத்தடுத்த நாள்களில் கடையடைப்பு நடத்தி அழுத்தம் கொடுத்துவிட்டனர். அடுத்தகட்டமாக `காவலர்களுக்கு பால் விநியோகிக்க மாட்டோம்' என்று பால் முகவர்களும் அறிவிக்கிறார்கள் என்றால், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ஒருவருக்கொருவர் தொடர்போடுதான் செயல்பட்டு வருகின்றனரோ என்றுதான் நாங்கள் சந்தேகப்படுகிறோம். மற்றபடி சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது!'' என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-nadu-milk-distributing-agents-association-withdraws-their-protest-against-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக