காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது மாங்கனித் திருவிழாவாகும். காரைக்காலம்மையார் வரலாற்றை நினைவுகூரும்விதமாக, தொன்றுதொட்டு நடத்தப்படும் இத்திருவிழா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்திருக்கிறது.
காரைக்காலில் மத வேறுபாடில்லாமல் அனைவரும் கலந்துகொள்ளும் முக்கியப் பெருவிழா மாங்கனித் திருவிழாவாகும். சுவாமி வீதியுலாவின்போது வாரி இறைக்கப்படும் மாங்கனிகளைப் பெண்கள் மடியில் ஏந்தி உண்டால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும், வீட்டுக்குத் தேவையான எல்லாவிதமான பொருள்களையும் ஒரு மாதத்திற்குக் களைகட்டும் இத்திருவிழாக் கடைகளில் வாங்கி மகிழ்வார்கள்.
Also Read: வீதியெங்கும் வீசப்பட்ட மாம்பழங்கள் - காரைக்காலில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட மாங்கனித் திருவிழா!
விழாவின் முக்கிய நிகழ்வே பிச்சாடனார் புனிதவதியார் வீட்டுக்கு எழுந்தருளி அமுது உண்பதுதான். இதை உணர்த்தும்விதமாகத்தான் காரைக்காலம்மையார் ஒரு கையில் அன்னக் கரண்டியும் மற்றொரு கையில் அன்னப் பாத்திரமும் வைத்துக்கொண்டு பெருமானுக்கு அமுதுபடையல் அளிக்கும் புனிதவதியாய், மூலவராக காட்சியளிக்கிறார். இந்தக் கோலம் உலகத்தில் எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.
ஈசனார் அமுதுண்டது காரைக்காலம்மையாராய்ப் போற்றப்படும் புனிதவதியார் வீட்டில் மட்டும்தான் என்பது காரைக்காலுக்கு மற்றொரு சிறப்பாகும்.
எதிர்வரும் ஜூலை 2 - ம் தேதி மாங்கனித் திருவிழா தொடங்கவேண்டும். கொரோனா ஊரடங்கால் உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தேரோட்டத்திற்குக் கொடியேற்றம் நடந்தது. ஆனால் திருவிழா நடைபெறவில்லை. மதுரைச் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் நடைபெறவில்லை. ஆனால் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் புறப்பாடும் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டது.
இந்நிலையில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது பற்றிஸ்ரீ கைலாசநாதர் கோயில் நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் கேசவனிடம் பேசினோம். "கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு மாங்கனித் திருவிழாவை மிகவும் எளிமையாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். ஜூலை 2 -ம் தேதி திருக்கல்யாணம் அன்று மாலை வெள்ளைச்சாத்தி சுவாமி புறப்பாடு. 3 - ம் தேதி பிச்சாடனார் சிறப்பு அபிஷேகம். 4-ம் தேதி அமுது படையல்.
இவையாவும் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்தப்படும். அதேநேரத்தில் காணொலிக் காட்சி மூலம் வீட்டிலிருந்தபடியே பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடு செய்கிறோம். மாங்கனித் திருவிழா குறித்து அறங்காவலர் குழுவில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அரசுக்குத் தெரிவித்துள்ளோம். இன்னும் அரசிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.
source https://www.vikatan.com/spiritual/temples/will-mango-festival-happen-in-karaikal-ammaiyar-temple
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக