``2005-ல நான் காலேஜ் முடிச்சிட்டு வெளியே வர்றப்ப ஏஜிஎஸ் சினிமாஸ் கட்டிட்டு இருந்தாங்க. அப்பாவும், சித்தப்பாவும், `இந்த ப்ராஜெக்டை நீதான் முடிக்கணும்'னு சொல்லி என் கையில கொடுத்துட்டாங்க. அப்போ எனக்கு 22 வயசு. படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ்ன்றதால கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பத்தி எதுவும் தெரியல. கவர்மென்ட் அப்ரூவல், லீகல் விஷயங்கள்னு நிறைய விஷயங்களைக் கத்துக்கவேண்டியிருந்தது. இப்பவும் 15 வருஷமா கத்துக்கிட்டுத்தான் இருக்கேன். பூமி பூஜையில இருந்து தியேட்டர் திறக்குற வரைக்கும் எல்லா வேலைகளையும் பக்கத்துல இருந்து பார்த்தேன். ஒரு தியேட்டருக்கு டெக்னிக்கலா என்னென்ன விஷயங்கள் வேணும், பார்வையாளர்களோட கம்ஃபர்ட்டுக்கு என்னலாம் பண்ணணும்னு நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். முக்கியமா 22 வயசு வரைக்கும் ஸ்கூல், காலேஜ்னு வீட்டுக்குள்ளேயே இருந்ததால வெளி மனிதர்களோட பழகுற வாய்ப்பு கிடைக்கல. இந்த 15 வருஷத்துலதான் மனிதர்கள் எப்படி எல்லாம் இருப்பாங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஒவ்வொருத்தர்கிட்டயும் எப்படிப் பேசணும், என்னப் பேசணும், என்னப் பேசக்கூடாதுன்னு புரிஞ்சது. அப்போ, சின்னப்பொண்ணா தியேட்டர் அப்ரூவலுக்காக ஒரு கவர்மென்ட் ஆபீஸுக்குப் போயிருந்தேன். அங்க வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது கேஷுவலா கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருந்தேன். திடீர்னு ஒருத்தர் வந்து, `இங்க கால்மேல கால் போட்டுலாம் உட்காரக் கூடாது'னு சொல்லிட்டுப்போனார். வெளில எப்படி உட்காரணும்னுகூட அப்பதான் கத்துக்கிட்டேன்.''
``உங்க தயாரிப்பு நிறுவனத்துல முக்கால்வாசிப் படங்களை முன்னணி இயக்குநர்களோடத்தான் பண்ணியிருக்கீங்க. அவங்களோட உங்களுக்கு எதுவும் அனுபவங்கள் இருக்கா?''
``படத்தயாரிப்பைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு ஃபுல் ப்ராஜெக்ட்டை கையில எடுத்து முழுசா வொர்க் பண்ண படம் `பிகில்' மட்டும்தான். முன்னாடி அப்பா, சித்தப்பாகூட உட்கார்ந்து இயக்குநர்கள் கதை சொல்லும்போது கேட்டிருக்கேனே தவிர முடிவுகள் எதுவும் என்னோடது கிடையாது. `பிகில்' படத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்பாதான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டார்.''
``ஒரு இயக்குநர் கதை சொன்னதும் எதன் அடிப்படையில் இந்தக் கதையை தயாரிக்கலாம் என்கிற முடிவுக்கு வருவீர்கள்?''
``முதல்ல, இயக்குநர் சொல்ற கதை இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கணும். ஏஜிஎஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லா ஜானர்லயும் படங்கள் பண்ணியிருக்கோம். `திருட்டுபயலே' டு `பிகில்' வரைக்கும் நாங்க எடுத்த படங்கள் எல்லாத்துலயும் ஸ்டோரி லைன் ஸ்பெஷலா இருக்கும். நிறைய மொழிப்படங்கள் பார்க்குறதால, இப்ப என்ன மாதிரியான சினிமாக்கள் டிரெண்ட்ல இருக்கு, என்ன மாதிரியான கதைகள் ஓடும், ஓடாதுன்னு பேஸிக்கான ஒரு ஐடியா எங்களுக்குள்ள இருக்கும். நான் எல்லா மொழி, எல்லா ஜானர் படங்களையும் பார்ப்பேன்றதால என் இன்புட்ஸையும் அப்பா, சித்தப்பாக்கள் கேட்டுப்பாங்க. அனுபவத்தால இந்தக் கதையை படமா எடுத்தா எவ்ளோ கலெக்ஷன் வரும்ன்ற அளவுக்குக்கூட கணிக்கமுடியும்.''
`ஏஜிஎஸ் தயாரிப்புன்னு நீங்க முதன்முதல்ல பெருமைப்பட்ட படம் எது?''
``ஏஜிஎஸ் நிறுவனத்தோட படங்கள் நூறு சதவிகிதம் தரமா இருக்கும்னு இண்டஸ்ட்ரில எல்லோருக்குமே தெரியும். மக்கள்கிட்ட எங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தப்படம்னா அது `தனி ஒருவன்'தான். அப்பாவும், மோகன் ராஜா சாரும் நெருங்கிய நண்பர்கள். `தனி ஒருவன்' ராஜா சாரோட ஒரிஜினல் கதை. இந்தக் கதையை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே அப்பாகிட்ட அவர் சொல்லியிருந்தார். கொஞ்சம் கொஞ்சமா ஸ்க்ரிப்ட்டை டெவலப் பண்ணிட்டு திரும்ப அப்பாகிட்ட வந்து சொன்னார். படத்தை தியேட்டர்ல பார்க்குறப்போ இந்தப் படம் வேற லெவல் ஃபீல் கொடுத்தது. ரொம்பப் பெருமையா இருந்தது. மோகன் ராஜா சார் இயக்கத்துல நாங்க தயாரிச்சிருந்த `சந்தோஷ் சுப்ரமணியபுரம்' படமும் நல்ல பேரைக் கொடுத்தது.''
``ஒரு தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், நீங்கள் ஒரு தியேட்டர் அதிபரும் கூட.... ஓடீடீ நேரடி ரிலீஸ் விவகாரத்தில் இரண்டு தரப்பு பிரச்னைகளுமே உங்களுக்குத் தெரியும்ல?''
``இந்தக் கேள்விக்கு முதல்ல தயாரிப்பாளர் அர்ச்சனாவா பதில் சொல்றேன். ஓடீடீ, ஓடீடீ-ன்னு ஏதோ பூதாகரப்படுத்துற மாதிரியிருக்கு. ஓடீடீ, படங்கள் பார்க்குறதுக்கான இன்னொரு டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் அவ்ளோதான். யார் தடுத்தாலும், தடுக்கலைன்னாலும் மக்கள் இதுல படம் பார்க்கத்தான் போறாங்க. இதுதான் ரியாலிட்டி. சென்சார் இல்லாததுனால நிறைய வித்தியாசமான கன்டென்ட்டை அங்க முயற்சி பண்ண முடியும். நிச்சயமா, ஒரு புரொடக்ஷன்ஸ் ஹவுஸுக்கு இந்த சுதந்திரம் தேவை. தயாரிப்பாளருக்கு தியேட்டர் மற்றும் டிவி ரைட்ஸ் வழியா பணம் வர மாதிரியே ஓடீடீ வழியாவும் பணம் வரும். அதனால, இது தயாரிப்பாளர்களுக்கு லாபம்தரக்கூடிய நல்ல விஷயம்.
ஆனா, ஒரு தியேட்டர் உரிமையாளரா எனக்கு கொஞ்சம் பயம் இருக்கு. ஏன்னா, லாக்டெளன் முடிஞ்சு தியேட்டர்களைத் திறந்தாலும் எவ்ளோ பேர் படம் பார்க்க வருவாங்கன்னு தெரியாது. இப்படியே பழகிட்டா என்ன ஆகும்னு தோணுது. ஆனா, தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர்னு இதையெல்லாம் தாண்டி ஒரு லார்ஜர் பர்ஸ்பெக்டிவ்ல யோசிச்சா ரெண்டுத்துலயும் இருக்குற ப்ளஸ், மைனஸ் தெரியும். `பிகில்' மாதிரியான படங்களைத் தியேட்டர்ல குடும்பத்தோட, உறவினர்களோட, நண்பர்களோட உட்கார்ந்து பார்க்கும்போதுதான் அனுபவம் நல்லாயிருக்கும். ஓடீடீ-க்கான படங்கள்ன்றது வேற. தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்கான படங்களை ஓடீடீ-யால எப்போதுமே தரமுடியாது. இந்த லாக்டெளன் காலத்துல படம் தேங்கி நிக்குறதால வட்டி ஏறிட்டே போகுதேன்னு தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுறாங்க. தியேட்டர்கள் மூடியிருக்கிறதால வாடகை, சம்பளம்னு அங்கயும் நிறைய கஷ்டங்கள் இருக்கு. அதனால இப்போதைய சூழல்ல ரெண்டு பேருக்கும் இடையே நல்ல ஹெல்தியான ரிலேஷன்ஷிப் வேணும். இதை ரெண்டுபேருமே கொஞ்சம் விட்டுக்கொடுத்து, பேசித்தான் சரி பண்ணணும்.''
``நேரடியாவே கேட்குறேன். நீங்க ஓடீடீ-ல படங்கள் ரிலீஸ் பண்ணத் தயாரா இருக்கீங்களா?''
``ஓடீடீ-க்காக வெப்சீரிஸ் பண்ற ஐடியா இருக்கு. ஆனா, படங்களைப் பொறுத்தவரைக்கும் தியேட்டர் ரிலீஸுக்கானப் படங்கள் மட்டும்தான் நாங்க தயாரிப்போம். இந்த விஷயத்துல ரொம்பத் தெளிவா இருக்கோம். சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கிற ஐடியா எங்களுக்கு இல்லை.''
``ஏன் சின்ன பட்ஜெட் படங்கள் தயாரிக்க மாட்டீங்க. பெரிய படங்கள்லதானே ரிஸ்க் அதிகம்?''
``பெரிய படங்களுக்குத்தான் ரிஸ்க் குறைவு. சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு ரிஸ்க் அதிகம். ஏன்னா, ஆடியோ லான்ச் முடிஞ்சவுடனே பெரிய படங்களுக்கான உரிமை வித்துடும். தயாரிப்பு நிறுவனத்துக்கு இதுல ஜீரோ ரிஸ்க். இதே, சின்ன மற்றும் மீடியம் படங்கள் பண்ணா நாமளே விநியோகமும் பண்ணணும். தவிர, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் அவ்ளோ ஈஸியா விக்காது. பட ரிலீஸுக்கு முன்னாடி ஆடியோ ரைட்ஸ் மட்டும்தான் வித்திருக்கும். ஒருவேளை படம் தோல்வி அடைஞ்சிட்டா தயாரிப்பாளருக்கு கஷ்டமாகிடும். பெரிய படங்களைப் பொறுத்தவரைக்கும் எல்லோரையும் ஒன்றுதிரட்டி, ப்ராஜெக்ட்டை ஒரு வடிவத்துக்குக் கொண்டுவந்து ஸ்டார்ட் பண்றதுதான் கஷ்டம். அதை மட்டும் சரியா பண்ணிட்டோம்னா அப்புறம் எந்தப் பிரச்னையும் இல்ல.''
``பெரிய ஹீரோக்கள் நடிக்கிற படங்கள்ல தயாரிப்பாளர்கள் சும்மா பேருக்குத்தான் இருப்பாங்க. இயக்குநர் தொடங்கி ஹீரோயின், இசையமைப்பாளர்னு எல்லா முடிவுகளையுமே ஹீரோதான் எடுப்பார்னு ஒரு பேச்சிருக்கே?''
``இதுல கொஞ்சமும் உண்மையில்ல. ஒரு படத்தைப் பொறுத்தவரைக்கும் இயக்குநர்தான் கேப்டன். `பிகில்' படத்தோட கேப்டன் அட்லிதான். எல்லா கேரக்டருக்குமே அவர் மூணு சாய்ஸ் சொல்லுவார். அதில் டேட்ஸ், சம்பளம்னு யார் சரியா வர்றாங்களோ அவங்களை ஃபிக்ஸ் பண்ணுவோம். `பிகில்' படத்துல நிறைய நடிகைகள் நடிச்சிருப்பாங்க. இவங்களுக்கான சாய்ஸ்களை உதவி இயக்குநர்கள்கூட சொன்னாங்க. அதனால நாங்களும், இயக்குநர் டீமும் சேர்ந்துதான் எல்லா முடிவுகளையும் எடுத்தோம்.''
`` `லாக்டெளன் முடிஞ்சிடுச்சு. இனி சினிமா ஷூட்டிங்கை சில கட்டுப்பாடுகளோட நடத்திக்கலாம்'னு அரசாங்கம் சொல்லிட்டா நீங்க ஷூட்டிங் போகத் தயாரா இருக்கீங்களா?''
``இப்ப இருக்கிற சூழல் ரொம்ப கஷ்டமாயிருக்கு. ஒருபக்கம் உயிரைக் காப்பாத்திக்கணும். இன்னொருபக்கம் வேலைக்குப் போனாத்தான் வீட்ல இருக்குறவங்களைப் பார்த்துக்கமுடியும்னு எல்லோரும் ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தா இன்னும் மோசமாகிடும். அதனால இனிமேல் புதுவிதமான சூழல்லதான் வேலை பார்க்கப்போறோம், அதுக்கு என்னலாம் பண்ணணும்னு சில முடிவுகள் யோசிச்சிருக்கோம். மாஸ்க், சோஷியல் டிஸ்டன்ஸிங்கைத்தாண்டி ஒரு ஷெட்யூல் எடுத்து முடிச்சவுடனே எல்லோருக்கும் கொரோனா டெஸ்ட் பண்ணணும். பாசிட்டிவோ, நெகட்டிவோ எல்லோரும் ரெண்டு வாரம் க்வாரன்டீன்ல இருக்கணும். அதுக்கு அப்புறம்தான் ரெண்டாவது ஷெட்யூல்.
இன்னொரு முக்கியமான விஷயம் இனிமேல் முன்னாடி மாதிரி பெரிய டீம் வெச்சு ஷூட்டிங் நடத்தமுடியாது. ஆட்களைக் குறைச்சுத்தான் ஆகணும். கொரோனான்னு ஒண்ணு அழியிற வரைக்கும் இப்படி இருந்தா மட்டும்தான் தொழிலை நடத்தமுடியும்.''
``இன்னும் ஆறு மாசத்துக்கு தியேட்டர்களைத் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லைன்னு சொல்றாங்களே?''
``எங்களோட தியேட்டர்ஸைப் பொறுத்தவரைக்கும் எல்லாமே சொந்த இடத்துலதான் இருக்கு. அதனால, மற்ற மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்காரர்களைப் பார்க்குறப்போ எங்களுக்குப் பிரச்னை கொஞ்சம் குறைவுதான். ஆனா, பெரிய மேன்பவர் வெச்சிருக்கோம். நிறைய பேர் எங்ககிட்ட வேலை செய்றாங்க. அவங்க எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கணும். டிசம்பர் வரைக்கும் இப்படியே போச்சுனா எல்லாருக்கும் சம்பளம் கொடுக்குறதே கஷ்டமாகிடும்.''
``ஏஜிஎஸ் நிறுவனத்தோட ஃபிலிமோகிராஃபில பெரிய இயக்குநர்களோட பெயர்கள்தான் அதிகமாயிருக்கே... ஏன்?''
``அறிமுக இயக்குநர்கூட வேலை பார்க்குறதைவிட ஏற்கெனவே படம் பண்ண இயக்குநர்கூட வேலை பார்க்குறது ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு ஈஸியா இருக்கும். அறிமுக இயக்குநரோட படம் பண்ணி, அது சரியா போகலைன்னா போட்ட காசுல பத்து சதவிகிதம்கூட ரிட்டன் எடுக்க முடியாமப் போயிடும். அதாவது அறிமுக இயக்குநர் / புதுமுகங்கள் வெச்சு 10 கோடில படத்தை எடுத்தாலும் 10 லட்சம்தான் திரும்பக் கிடைக்கும். `பரியேறும் பெருமாள்' மாதிரி ஒரு சில படங்கள்தான் பெரிய ஹிட் அடிக்குமே தவிர எல்லா ப்ராஜெக்ட்லயும் லாபத்தை எதிர்பார்க்கமுடியாது. வங்கிகள்கூட நீங்க ஏற்கெனவே ஏதாவது பிசினஸ் பண்ணியிருந்தாத்தான் நம்பி பணம் கொடுக்குறாங்க.''
``ஒரு தயாரிப்பாளரா, ஒரு முதலாளியா நீங்க ரொம்பத் தெளிவா இருக்கீங்க. ஆனா, `பிகில்' ரிலீஸுக்குப் பிறகு அட்லி பட்ஜெட்டைத்தாண்டி நிறைய செலவு பண்ணிட்டார்னு வெளில சில பேச்சுகள் கிளம்புச்சு... அதெல்லாம் உங்க கவனத்துக்கு வந்ததா?''
``ஒரு படத்தோட பட்ஜெட்ன்றது இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையில மட்டுமே பேசப்படுற விஷயம். இதைப்பற்றி மத்தவங்கள்லாம் பேசவே கூடாது. நாங்க பணம் கொடுக்காம அட்லியால எப்படி பட்ஜெட்டைத் தாண்டி செலவு பண்ணியிருக்க முடியும்? படத்துக்கு என்ன தேவை, இந்த விஷயம் எதுக்குனு எல்லாத்தையும் எங்ககிட்ட முன்கூட்டியே டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் அவர் பண்ணுவார். அவர் சொல்றது டெக்னிக்கலாவும் அவ்ளோ சரியா இருக்கும். அவரோட எல்லையை அவர் எப்பவும் மீற மாட்டார். `பிகில்' படத்தை இந்த பட்ஜெட்குள்ள வேற யாராலையும் முடிச்சிருக்க முடியாது. கிராஃபிக்ஸ் வேலைகள் மட்டும்தான் நாங்க ப்ளான் பண்ணியிருந்த பட்ஜெட்டைவிட எக்ஸ்ட்ரா போச்சு. ஆனா, அதுக்கு அட்லி எப்படி பொறுப்பாக முடியும்? விஜய் மாதிரியான பெரிய ஸ்டார் பண்றப்போதான் நாமளும் பெரிய விஷயங்களை முயற்சி பண்ணிப்பார்க்க முடியும். அதுக்கு ஏத்த மார்க்கெட்டும் அவருக்கு இருக்கு. அதனால இதுல எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த பட்ஜெட் மேட்டரை இதோட விட்டா நல்லாயிருக்கும்.''
`` `பிகில்' படத்தை ரிலீஸுக்கு முன்னாடி பார்த்தப்போ விஜய் உங்ககிட்ட என்ன சொன்னார்?''
``படம் பார்த்ததும் விஜய் சாருக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே `ராயப்பன்' கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஏன்னா, அட்லி கதை சொல்லும்போது யாருமே விஜய் சாரை இந்த கேரக்டருக்காக மைண்ட்ல வெச்சிட்டு கேட்கல. அட்லியும் விஜய் சாரை யோசிக்கலை. ராயப்பன் கேரக்டருக்கு சீனியர் நடிகர் யாரை நடிக்க வைக்கலாம்னுதான் பேசிட்டிருந்தோம் ஆனா, யாரை யோசிச்சாலும் அது சரியாப் பொருந்திவரல. இதுக்கு நடுவுல மைக்கேல் கேரக்டருக்கு விஜய் சாருக்கான லுக் டெஸ்ட் எடுத்துட்டு இருந்தோம். இதுக்கு ப்ரீத்தி ஶ்ரீ-னு ஒரு காஸ்மெட்டாலஜிஸ்ட் மும்பைல இருந்து வந்திருந்தாங்க. அவங்கதான் `Chhichhore' படத்துல சுஷாந்த் சிங் பண்ற ரெண்டு லுக்கையும் காமிச்சாங்க. அப்பதான் சுஷாந்த் சிங் மாதிரியே ஏன் விஜய் சாரே ரெண்டு ரோல்லயும் நடிக்கக்கூடாதுன்னு தோணுச்சு. உடனே, விஜய் சார்கிட்ட சொல்லி ராயப்பன் லுக் டெஸ்ட்டும் எடுத்தோம். பிரமாதமா இருந்தார். விஜய் சாரும் வயசான கெட்டப்ல நடிச்சதில்லைன்றதால ஷூட்டிங் ஸ்பாட்ல ராயப்பனைப் பார்த்ததும் எல்லோருக்கும் புல்லரிச்சிரும். படம் பார்த்து முடிச்சவுடனே இந்தச் சம்பவத்தைப் பற்றித்தான் விஜய் சார் பேசினார்.''
source https://cinema.vikatan.com/tamil-cinema/archana-kalpathi-speaks-about-ags-entertainment-reveals-secrets-of-bigil-movie
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக