சாத்தான்குளத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவமே இன்னும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற பெண் ஒருவரை போலீஸார் அவமானப்படுத்திய சம்பவம், அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை ஆனைவிழுந்தான் குளத்து தெருவில் வசிப்பவர் லட்சுமி (35). சாலைகளில் தார் ஊற்றும் தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இவருடைய கணவர் விஜய் இறந்துவிட்ட நிலையில், ஒரு பெண் குழந்தையுடன் வசித்துவருகிறார். தற்போது அந்தப் பெண் குழந்தைக்கு 6 வயதாகிறது.
இந்நிலையில், சந்திரசேகர் என்பவருடன் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன் குழந்தையுடன் வாழ்ந்துவருகிறார். கடந்த 28-ம் தேதி மாலை, லட்சுமிக்கும் சந்திரசேகருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெண் குழந்தையை சந்திரசேகர் கடத்திக்கொண்டு போய்விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்தவர், அன்று இரவே பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். அப்போது பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ துரைராஜ், லட்சுமியை அழைத்து என்னவென்று விசாரித்ததுடன், மரியாதை குறைவாக நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது காவல் நிலையத்திலிருந்த சமூக ஆர்வலர் சதா.சிவக்குமார், அந்தப் பெண்ணுக்கு நடந்த அவமரியாதைக்கு நீதி கேட்டும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
Also Read: சாத்தான்குளம்: மிரட்டிய போலீஸ்; 3 மணிநேரம் போராடிய மருத்துவர்! -பதறவைத்த பரிசோதனைச் சீட்டு
காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து லட்சுமியிடம் பேசினோம். ``எனக்கு என்னோட குழந்தைதான் உலகம். அவளை என்னோட இரண்டாவது கணவர் கடத்திக்கொண்டு போய்விட்டார். குழந்தையைக் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றேன். அப்போது துரைராஜ் என்ற போலீஸ்காரர், என்னிடம் என்ன பிரச்னை எனக் கேட்டார். நான் அனைத்தையும் கூறினேன்.
அதன் பின்னர், `இது ஒரு குடும்பம், நீ ஒரு பொம்பளை... இந்தப் புகாரை தூக்கிக்கிட்டு வந்துட்ட. தூ' என்றதுடன், `போடி முதல்ல வெளியே' என தரக்குறைவாகப் பேசினார். பலர் முன்னிலையில் என்னை இப்படி அவமானப்படுத்தும் விதமாகப் பேசியதால், எனக்கு அழுகை வந்துவிட்டது. உடனே ஸ்டேஷனிலிருந்து வந்துவிட்டேன். இதைப் பார்த்த ஒருவர், செல்போன் மூலம் எல்லோருக்கும் தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து, அடுத்த நாள் டிஎஸ்பி என்னை அழைத்து விசாரித்தார். அவரிடம் நான் நடந்தவற்றைக் கூறினேன். உடனே நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததுடன், குழந்தை காணாமல் போனது குறித்து வழக்கு பதிய உத்தரவிட்டார். குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்காக தனிப்படையும் அமைப்பதாகக் கூறினார்" என்றார்.
சமூக ஆர்வலரான சதா.சிவக்குமாரிடம் பேசினோம். ``குழந்தை கடத்தப்பட்ட துயரத்தில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும், குழந்தை மீட்கப்பட வேண்டும் என ஒரு தாயாக தவித்து போலீஸ் ஸ்டேஷன் வந்த அந்தப் பெண்ணை, துரைராஜ் என்ற போலீஸ்காரர் அவமரியாதையுடன் நடத்தினார். இதனை நேரில் கண்டதால் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இதனை அறிந்த டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், `போலீஸ் மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இதுபோன்று ஒரு சம்பவம் எனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் நடந்திருப்பது வருத்தத்தைத் தருகிறது.
Also Read: சாத்தான்குளம் முதல் செல்லூர் வரை... காவல்துறையால் தொடரும் மர்ம மரணங்கள்!
அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட மரியாதைக் குறைவை எனக்கு ஏற்பட்டதாக நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கிறேன்' எனக் கூறியதுடன், உடனே கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடிக்க தனிப்படையும் அமைத்தார். அவருடைய செயல் எனக்கு பெரிய மரியாதையை உண்டாக்கியது" என்றவர்,
தொடர்ந்து, `` நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டதைக் கவனித்த போலீஸ்காரர் துரைராஜ், எனக்கு போன் செய்து, `காழ்ப்புணர்ச்சியால் நீங்க இதைச் செய்றீங்க. உங்களுடைய ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் வாழ்த்துகிறேன். அடுத்து என்ன செய்யப்போறீங்க?' எனக் கேட்கிறார். காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் போலீஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்" என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ்காரர் துரைராஜிடம் பேசினோம். ``கொரோனா பரவலை தடுப்பதற்காக தேவையில்லாமல் காவல் நிலையதுக்கு உள்ளே வரும் நபர்களை அனுமதிப்பதில்லை. சதா.சிவக்குமார் இன்ஸ்பெக்டரை பார்ப்பதற்காக வந்தபோது, கொஞ்சம் இருங்க என அவரைத் தடுத்துநிறுத்தினேன். இதனை மரியாதைக் குறைச்சலாக நினைத்த அவர், காழ்ப்புணர்ச்சியால் நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி என் மீது அவதூறு பரப்புகிறார். மாஸ்க் அணிந்திருந்த நான் எப்படி தூ எனத் துப்ப முடியும்?
அது மட்டுமல்லாமல், எம்.ஏ பட்டதாரியான எனக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனத் தெரியாதா... நான் சிறப்பாக பணிபுரிந்ததற்காக முதல்வர் கையால் இந்த ஆண்டுக்கான வெள்ளிப்பதக்கம் வாங்கியுள்ளேன். தற்போது, இரண்டு பெரிய வழக்குகளில் தொடர்புடையவர்களை பிடித்துக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளேன். இதற்காக, உயர் அதிகாரிகளிடம் பாராட்டு வாங்கினேன். என்னுடைய செயல் இப்பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். நான் அந்தப் பெண்ணை மரியாதைக் குறைவாக நடத்தவில்லை" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/woman-humiliated-by-police-ssi-in-pattukottai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக