ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் எனும் ரசாயன தொழிற்சாலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. சாலைகளில் மயங்கிக் கிடந்த மக்கள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த விஷவாயுக் கசிவால் சுமார் 11 பேர் உயிரிழந்ததாகவும், 1000-க்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிப்படைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தற்போது அதே விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்கள் 2 பேர் இறந்துள்ளதாகவும், 4 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாகப்பட்டினத்தில் உள்ள பர்வாடா எனும் பகுதியில், சைனார் லைஃப் சயின்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில், நேற்று இரவு 11:30 மணியளவில் பென்சிமிடாசோல் என்ற வாயு கசிந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாயுக் கசிவு ஏற்பட்டபோது, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக உயர் காவல்துறை அதிகாரி உதய்குமார் பேசும்போது, ``நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இறந்த இரண்டு நபர்களும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த தொழிலாளர்கள். சம்பவத்தின்போது அவர்கள் கசிவு நடந்த இடத்தில் இருந்துள்ளனர். வாயு வேறு எங்கும் பரவவில்லை” என்று கூறியுள்ளார்.
Also Read: `சாலையில் மயங்கி விழுந்த மக்கள்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை’ -ஆந்திராவைப் பதற வைத்த விஷவாயு கசிவு
இந்தச் சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன், அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``நிறுவனம் அமைந்துள்ள பகுதியேலேயே இந்த விபத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் இரண்டாவது முறையாக விஷயாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது, அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக 40 நாள்களுக்கும் மேல் மூடப்பட்டிருந்த எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையில் இருந்து திடீரென டாக்சிக் ஸ்டைரீன் என்ற வாயு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதிக நச்சுத்தன்மை உள்ள இந்த வாயுவால் அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் மூன்று கிராம மக்கள் பாதிப்படைந்தனர். வீடுவீடாகச் சென்று அதிகாரிகள் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் 1984-ம் ஆண்டு நடந்த போபால் வாயுக்கசிவுடன் ஒப்பிடப்பட்டது.
வரலாற்றில் நடந்த மிகவும் மோசமான பேரழிவுகளில் இந்த போபால் சம்பவமும் ஒன்றாகும். இந்த வாயுக் கசிவால் சுமார் 3,500 பேர் இறந்தனர். குறைந்தது ஒரு லட்சம் மக்கள், இந்த வாயுவால் உடலில் ஏற்பட்ட பிரச்னைகளால் நீண்டகாலம் பாதிப்படைந்தனர். இந்த நிலையில், தற்போது சில மாத இடைவெளியில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் ஆலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்களும் எழுந்துள்ளன.
Also Read: ஆழ்ந்த உறக்கத்தில் எமனாக வந்த விஷவாயு... விசாகப்பட்டினம் ஆலையின் அலட்சியமே காரணமா?
source https://www.vikatan.com/news/death/two-people-were-dead-in-visakapattinam-because-of-gas-leak
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக