Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

`மகாராஷ்டிராவை பாதித்த கொரோனாதான் ஷரத் பவார்!’ - பா.ஜ.க உறுப்பினரால் எழுந்த சர்ச்சை

மகாராஷ்டிராவில், சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆட்சி பற்றி பா.ஜ.க-வினர் கடுமையாகத் தாக்கிப் பேசிவந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிகளவில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த மகாராஷ்டிர சட்டமேலவை உறுப்பினர் கோபிசந்த் படல்கர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது கடந்த சில நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

கோபிசந்த் படல்கர்

பா.ஜ.க-வைச் சேர்ந்த மகாராஷ்டிர சட்டமேலவை உறுப்பினர் கோபிசந்த் படல்கர், ``மகாராஷ்டிராவை பாதித்த ஒரு கொரோனாதான் ஷரத் பவார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கு அஜித் பவார், ``ஒவ்வொருவரும் தங்களது மதிப்பை கருத்தில்கொண்டு பேச வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். இதுதான் நம்முடைய கலாசாரம். மறைந்த மகாராஷ்டிராவின் முதல்வர் யஷ்வந்த்ராவ் சவான் எங்களுக்கு இதைத்தான் கற்றுக்கொடுத்துள்ளார். நாம் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் சதாரா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அஜித் பவார் இந்தக் கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், பா.ஜ.க-வில் படல்கர் இல்லாதபோது பேசிய விஷயங்களைக் குறிப்பிட்டார். அதில், ``பிரதமர் மோடியைப் பற்றி படல்கர் கடந்த காலங்களில் என்ன சொன்னார் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Also Read: `நான் வருத்தப்படுவதுபோல் தெரிகிறதா?!’ -செய்தியாளர் சந்திப்பில் கலகலத்த அஜித் பவார்

பா.ஜ.க-வில் இணைந்த பிறகு படல்கர் பாரமதி பகுதியில் நடந்த தேர்தலில் அஜித் பவாருக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனால், ஏற்கெனவே அவர்களுக்கிடையில் கடுமையான முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன. இந்த நிலையில், ஷரத் பவாரை இத்தகைய முறையில் பேசியதற்காக அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`பவார் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படும் பாரமதி போன்ற 100 நகரங்கள் இருந்தால் முழு நாடும் முன்னேற்றம் அடையும்' என்று மறைந்த பா.ஜ.க தலைவர் அருண் ஜெட்லி கூறியதையும் அஜித் பவார் நினைவுகூர்ந்தார். பிரதமர் மோடிக்குப் பிறகு அருண் ஜெட்லி இரண்டாவது தளபதியாக இருந்தார் என்றும் `பெரிய மனிதர்களுக்கு எதிராகப் பேசுவதன் மூலம் கேவலமான சில மனிதர்கள் பிரபலமடைய நினைக்கிறார்கள்' என்றும் அஜித் பவார் குறிப்பிட்டார்.

அஜித் பவார்

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 5,318 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,133 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 7,273 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், அஜித் பவார் பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று ஆய்வினை மேற்கொண்டபோது, சதாரா மாவட்ட மருத்துவமனையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் கொரோனா பரிசோதனை நிலையத்தை அமைக்க அதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: `பா.ஜ.க-வை எதிர்ப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்!’ - ஷரத் பவார் பேச்சு



source https://www.vikatan.com/government-and-politics/controversy/sharad-pawar-was-a-corona-that-is-infected-maharashtra-says-bjp-mlc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக