Ad

சனி, 27 ஜூன், 2020

சாத்தான்குளம்:`அப்பா, மகன் தரையில் புரண்டதால் ஏற்பட்ட காயம்!'- எஃப்.ஐ.ஆர் சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், கடை அடைப்பது தொடர்பாக போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டார். தந்தை தாக்கப்பட்டதைத் தட்டிக்கேட்ட மகன் பென்னிக்ஸும் தாக்கப்பட்டார். இதையடுத்து, இருவர் மீதும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்தனர். கடந்த 22-ம் தேதி இரவில் பென்னிக்ஸ் நெஞ்சுவலியாலும், மறுநாள் 23-ம் தேதி காலை ஜெயராஜ் காய்ச்சலாலும் உயிரிழந்ததாக போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது.

பென்னிக்ஸ், தந்தை ஜெயராஜ்

ஆனால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தாக்கியதால்தான் உயிரிழந்ததாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இருவரது உயிரிழப்பு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரும் நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், பல்வேறு நாடார் சமுதாய அமைப்புகளும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளன.

இதுமட்டுமல்லாமல், நாடார் சமுதாயத்தைச் சார்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களும் சாத்தான்குளத்தில் பொதுமக்கள், வியாபாரிகளுடன் திரண்டனர். இதையடுத்து, தந்தை, மகனைத் தாக்கியதாக வியாபாரிகள் குற்றம்சாட்டப்படும் எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார் எஸ்.பி அருண்பால கோபாலன். `ஆயுதப்படைக்கு மாற்றுவதெல்லாம் ஒரு கண்துடைப்பு’ என வியாபாரிகள் கொந்தளித்ததால், அடுத்த ஒருமணிநேரத்தில் அந்த 2 எஸ்.ஐ-க்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

சஸ்பெண்டு செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் - ரகுகணேஷ்

இந்த நிலையில் போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில், `கடையை அடைக்கச் சொன்னோம். அதற்கு எங்களையே அவதூறாகப் பேசி அப்பாவும் மகனும் தரையில் புரண்டார்கள். அதில், அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது' என உடலில் ஏற்பட்ட காயத்துக்குக் காரணம் சொல்லி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எப்.ஐ.ஆர் பக்கங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீஸாரின் இந்த எப்.ஐ.ஆர், வியாபாரிகளிடையே மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Also Read: கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகன்! - போலீஸார் தாக்கியதுதான் காரணமா?

இதுகுறித்து சாத்தான்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம், ``ஜெயராஜையும், அவரின் மகன் பென்னிக்ஸையும் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போன தகவல் கேள்விப்பட்டு வியாபாரிகளுடன், சில வக்கீல்களும் போனோம். ஆனா, எங்களை உள்ளே விடலை. லத்தியால அடிச்ச அடியில ரெண்டு பேரின் அலறல் சத்தம் கேட்டுச்சு. சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நீதிபதி சரவணனிடம் அழைச்சுட்டுப் போகும்போதே நடக்க முடியாமத்தான் நடந்து வந்தாங்க. அப்போதான் போலீஸார், லத்தியால ஆசனவாயில் ஓங்கிக் குத்தினதா பென்னிக்ஸ் எங்கட்ட கண்ணீரோடு சொன்னார். ரெண்டு பேரோட இறப்புக்கும் அந்த ரெண்டு எஸ்.ஐ-க்களும்தான் காரணம்.

சாத்தான்குளத்தில் திரண்ட பொதுமக்கள்

இதில், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், இதற்கு முன்னால நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியபோது, அங்குள்ள லாட்ஜில் ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து சிக்கியதால் தூக்கியடிக்கப்பட்டவர். 15 நாள்களுக்கு முன்பு பேய்க்குளம் பகுதியில் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரின் தம்பியை இதே இரண்டு எஸ்.ஐ-க்களும், விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து சரமாரியாக அடித்ததில், வீட்டுக்குச் சென்றவர் மறுநாளே உயிரிழந்தார். அந்த விவகாரத்தை அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள். அப்போதே இரண்டு எஸ்.ஐ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த இரண்டு உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும். இரக்கமற்ற இதுபோன்ற எஸ்.ஐ-க்களுக்கு எப்.ஐ.ஆர் எழுதுவது ஒரு விஷயமா என்ன?” என்றனர் கொதிப்புடன்.



source https://www.vikatan.com/news/crime/fir-create-controversy-in-tuticorin-regarding-father-son-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக