கோவிட்-19 வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பூசி, மருந்தை நோக்கி உலகமே எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்து, அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ள மனிதச் சோதனை அனுமதி, மகிழ்ச்சி செய்தியாகக் கிடைத்துள்ளது.
கோவாக்ஸின் (COVAXIN):
இந்தியா கண்டுபிடித்துள்ள கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசி, `கோவாக்ஸின் (COVAXIN)'. எபோலா வைரஸ், ஸிகா வைரஸ்(Zika) ஆகியவற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவிட்-19க்கான தடுப்பு மருந்தை ஏற்கெனவே கண்டுபிடித்திருந்தது. ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் முடிந்த நிலையில், மனிதர்களிடம் வரும் ஜூலை மாதம் முதல் மருந்தைச் செலுத்தி ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
Also Read: இந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம்... ஓர் அலெர்ட்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி இது. புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் கோவிட்- 19 நோயின் காரணியான SARS- CoV - 2 வைரஸின் ஸ்ட்ரெய்ன் தனிமைப்படுத்தப்பட்டு, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அது தரப்பட்டு, தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்தன. உலக அளவில் பல நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், நம்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்துக்கு அடுத்தகட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட ஒப்புதல் கிடைத்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
கடந்த திங்களன்று, சீனாவின் ராணுவம் அவர்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் 1.2 கோடி மக்களுக்கு மேல் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸை எதிர்க்க மருந்தும் தடுப்பூசியும் காலத்தின் தேவை. தடுப்பூசியில் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்குச் செல்லும் இந்தியா வெற்றியடைய வாழ்த்துகள்.
source https://www.vikatan.com/news/healthy/indias-first-vaccine-for-corona-virus-approved-for-human-trial
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக