செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (34). மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கலைக்கூடத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சௌமியா (28). 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்தத் தம்பதியினருக்கு 11 வயதில் சொர்ணா என்ற மகளும் விஜய்சாரதி (10) என்ற மகனும் உள்ளனர். பூஞ்சேரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் வீட்டில் 2-வது தளத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்தனர்.
ஊரடங்கையொட்டி மனோகரன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த 24-ம் தேதி மதியம் 2 மணியளவில் பூஞ்சேரியில் உள்ள ஒரு கடையில் ஆஃபரில் பிரியாணி விற்பதாக மனோகரன், மனைவியிடம் கூறியுள்ளார். உடனே சௌமியா, `பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டது. அதனால் பிரியாணி வாங்கி வாருங்கள், இன்று குடும்பத்துடன் சாப்பிடுவோம்' என்று கேட்டுள்ளார். இதையடுத்து மனோகரன், பிரியாணி வாங்க கடைக்குச் சென்றார். நேரமாகியதால் ஆஃபர் பிரியாணி விற்றுவிட்டது. குஸ்கா மட்டுமே இருந்துள்ளது. அதனால் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு குஸ்காவை வாங்கிக்கொண்டு மனோகரன் வீட்டுக்கு வந்தார்.
குஸ்கா
பிரியாணி இல்லை என்றதும் சௌமியா, கணவரிடம் கோப்பட்டுள்ளார். மேலும், எனக்கு குஸ்கா வேண்டாம் என்று கூறியதோடு கீழ்தளத்தில் உள்ள ஸ்டெல்லா என்பவரிடம் அதைக்கொடுத்துவிட்டார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் வீட்டைவிட்டு வெளியில் சென்றுள்ளார் சௌமியா. அப்போது கணவரின் பைக், அங்கு நிறுத்தப்பட்டுள்ளதைப் பார்த்துள்ளார் சௌமியா. உடனே வாட்டர் பாட்டிலை எடுத்த சௌமியா, கணவரின் பைக்கிலிருந்து பெட்ரோலை பாட்டிலில் பிடித்துள்ளார்.
பின்னர் பெட்ரோல் பாட்டிலுடன் மொட்டை மாடிக்குச் சென்ற சௌமியா, அதை ஊற்றி தீக்குளித்தார். சௌமியாவின் அலறல் சத்தம் கேட்டு மனோகரன் மற்றும் அங்கு குடியிருப்பவர்கள் மொட்டை மாடிக்குச் சென்றனர். அங்கு தீயில் சௌமியா கருகிக் கொண்டிருந்தார். உடனே தீயை அனைத்த மனோகரன், சௌமியாவை பூஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சௌமியா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
காதல் திருமணம்
இந்தச் சம்பவம் தொடர்பாக சௌமியாவின் சகோதரர் கலையரசன், மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்தார். கலையரசன் கொடுத்த புகாரில், `நான் செங்கல்பட்டு மாவட்டம், மணமை கிராமம் இசிஆர் கடும்பாடி சாலையில் குடியிருந்து வருகிறேன். என் உடன் பிறந்த தங்கை சௌமியா. அவர் கடும்பாடியைச் சேர்ந்த மனோகரனை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆஃபர் பிரியாணியை வாங்கச் சென்ற என் தங்கையின் கணவர் மனோகரனுக்கு குஸ்கா மட்டுமே கிடைத்துள்ளது. அதனால் குழந்தைகள், மைத்துனர் வீட்டிலிருக்கும்போது என் தங்கை மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்துள்ளார். சிகிச்சைப் பலனின்றி சௌமியா இரவு இறந்துவிட்டார். அவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கணவரை மிரட்ட நாடகம்:
சிகிச்சையிலிருந்த சௌமியாவிடம் போலீஸார் மரண வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில், `என் கணவர் மனோகரன், என் மீதும் குழந்தைகள் மீதும் பாசமாக இருப்பார். சம்பவத்தன்று மதியம் ஆஃபரில் பிரியாணி வாங்க சந்தோஷமாகச் சென்றார். பிரியாணி இல்லாமல் குஸ்கா வாங்கிக்கொண்டு வந்ததால் எனக்கும் மனோகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் கணவரைப் பயமுறுத்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தேன். விளையாட்டாக நான் செய்த செயல் வினையாகிவிட்டது.
எப்படியாவது என் கணவர் என்னைக் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். என் கணவரையும் குழந்தைகளையும் பிரிய எனக்கு மனமில்லை' என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். மேலும் கணவரிடம் `குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சௌமியா கூறியுள்ளார். 80 சதவிகிதம் தீக்காயங்கள் என்பதால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Also Read: `கொரோனா பீதியால் ஒரு ரூபாய்க்குப் பிரியாணி!' - 2 மணி நேரத்தில் காலியான 120 கிலோ சிக்கன்
போலீஸார் நடத்திய விசாரணையில் மனோகரனும் சௌமியாவும் மதியம் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பிரியாணி தொடர்பாக சண்டை வந்துள்ளது. அப்போது, உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று விளையாட்டாக மனோகரன் கூறியுள்ளார். அதனால்தான் மனமுடைந்த சௌமியா தீக்குளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்கொலை என்றே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரியாணிக்காக இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/social-affairs/crime/wife-commits-suicide-in-mahabalipuram-for-briyani-dispute
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக