கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பிரமுகரின் தந்தை ஒருவர் பா.ஜ.க நிர்வாகி ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் கோபாலன் (68) இவருடைய மகன் வாசுதேவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அப்பகுதியின் மண்டலப் பொறுப்பாளராக இருந்தவர். ஓய்வுபெற்ற ஆசிரியரான கோபாலன் ஸ்ரீ ஸ்ரீ 108 அபினவ உத்திராதி மடத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தமடத்தின் தலைமை அலுவலகம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ளது. இந்த மடத்திற்கு என நாச்சியார்கோயில் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனை கோபாலன் நிர்வகித்து வந்துள்ளார். இந்நிலையில் மடத்திற்குச் சொந்தமான 13 கடைகள் நாச்சியார்கோயில் பகுதியில் உள்ளது. இதில் பி.ஜே.பியின் நகரத் தலைவரான சரவணன் (48) என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். அந்தக் கடையைக் காலி செய்ய வேண்டும் சில ஆண்டுகளாக கோபாலன் கூறிவந்துள்ளார்.
அதற்கு சரவணன், `எங்க அப்பா நடத்திய இந்தக் கடையை இப்போது நான் நடத்துகிறேன். நாங்க மூன்று தலைமுறையாக இங்கு கடையை நடத்தி வருகிறோம் நீதிமன்றத்திற்குச் சென்றால் எங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும்' எனக் கூறியதுடன் கடையைக் காலி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். அதற்கு கோபாலன் தரப்பில், `கடையைக் காலி செய்வதற்கு 2 லட்ச ரூபாய் பணம் தருகிறோம். நீ கடையை ஒப்படைத்துவிட வேண்டும்' எனப் பேசியுள்ளனர்.
ஆனால், சரவணன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து மடத்தின் ஆலோசனையின் பேரில் கோபாலன் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார். அங்கு மடத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததுடன் கடையைக் காலி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சரவணன், கோபாலனிடம், `நான் கடையைக் காலி செய்து கொள்கிறேன். நீங்க கொடுப்பதாகச் சொன்ன 2 லட்சத்தைக் கொடுங்க' எனக் கேட்டுள்ளார்.
அதற்கு கோபாலன், `கோர்ட்டுக்குப் போறதுக்கு முன்னாடி பணம் தர்றேன் எனச் சொன்னேன். இப்ப தர முடியாது' எனக் கூறியதுடன், `உடனடியாகக் கடையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு போய்விடு இல்லையென்றால் நாங்க எடுத்து வெளியே வைத்து விடுவோம்' எனக் கூறியிருக்கிறார். இதனால் சரவணன் கோபாலன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கோபாலன் நேற்றிரவு 9 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு வெளியே நின்றுள்ளார். அப்போது போதையில் அங்கு வந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலன் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முகம் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுப்பட்டதால் கோபாலன் அலறியபடி அப்படியே சரிந்து விழுந்தார். இதையடுத்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையறிந்த அருகில் இருந்தவர்கள் நாச்சியார்கோயில் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததுடன், கோபாலனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள்ளாகவே கோபாலன் இறந்துவிட்டார். இதுகுறித்து நாச்சியார்கோயில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்ததுடன் நேற்று இரவே சரவணனைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``கடையை காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். இந்நிலையில் கொரோனாவால் டெய்லர் கடை வருமானமும் போய்விட்டதால், பணரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் கோபாலன் மீதான ஆத்திரம் அதிகமாகியுள்ளது.
Also Read: `ராத்திரி முழுவதும் தலைவலி’ - கொரோனா தொற்று உறுதியான பெண் வெளியிட்ட வீடியோ
இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சரவணன் மாம்பழம் வெட்டுவதற்கு எனக் கூறி புதிய கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு முன் நின்றுகொண்டிந்த கோபாலனிடம், ` என் கடையைக் காலி செய்ய வைத்துவிட்டாயே.. உன்னை சும்மாவிடமாட்டேன்' எனக் கூறி கத்தியைக் கொண்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரவணனைக் கைது செய்துவிட்டோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/old-man-murdered-by-bjp-cadre-in-kumbakonam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக