23.12.1962 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான அந்தப் பேட்டி இங்கே... #VikatanOriginals
``இன்றிரவு எட்டரை மணிக்கு ராணுவ அமைச்சர் உங்களைச்ச் சந்திக்க சம்மதித்திருக்கிறார். அக்பர் தெரு, 18-ம் நம்பரிலுள்ள அவரது இல்லத்தில் நீங்கள் அவரை சந்திக்கலாம்" என்று ராணுவ அமைச்சர் சவான் அவர்கள் செய்தி அனுப்பியவுடன், நான் சற்று நடுங்கினேன். ராணுவ மந்திரியைச் சந்திக்க வேண்டுமே என்பதனால் ஏற்பட்ட நடுக்கம் அல்ல; டெல்லிக் குளிரில் இரவு எட்டரை மணிக்கு வெளியே போக வேண்டுமே என்ற நடுக்கம்தான்!
ஆனால், `போர்முனையில் நமது ராணுவ வீரர்கள் நடுநடுங்கும் குளிரில் சீனா ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள். அப்படியிருக்க, இந்த சாதாரண குளிரைக் கண்டு நாம் நடுங்குவதா' என்று எனக்கு நானே தைரியம் அளித்துக்கொண்டு, அக்பர் தெருவில் வசிக்கும் அந்த `சிவாஜி'யை சந்திக்கச் சென்றேன்.
அமைதியான அந்த இரவு வேளையில், சாந்தமும் அடக்கமும், அத்துடன் வீரமும் கம்பீரமும் நிறைந்த ராணுவ மந்திரி யஸ்வந்த்ராவ் பல்வந்த் ராவ் சவான் அவர்கள், எனக்கு பேட்டி கொடுத்தார்.
``விகடன் வாசகர்களின் சார்பில் தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கெல்லாம் பெரு மகிழ்ச்சி. அன்று பாரதத்தைக் காக்க மகாராஷ்டிரத்திலிருந்து வீர சிவாஜி முன்வந்தார். இன்று அதே மகாராஷ்டிரம் மற்றொரு `சிவாஜி'யைத் தந்திருக்கிறது. சிவாஜிக்கு அன்று சமர்த்த ராமதாசர் வழிகாட்டியாக இருந்தார். இன்று, தங்களுக்கு நேருஜி அவர்கள் இருக்கிறார்கள்'' என்றேன்.
``உண்மை! சமர்த்தருக்கு இணையானவர்தான் நமது பண்டிட்ஜி! ஆனால், நான் என்னை எப்படி சிவாஜி என்று சொல்லிக் கொள்ளமுடியும்?'' என்று தன்னடக்கத்துடன் சிரித்துக்கொண்டே கூறினார், சவான்.
``அண்மையில் தாங்கள் பிரதமருடன் தேஜ்பூருக்குச் சென்றிருந்தீர்களே, அதைப்பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?'' என்று கேட்டேன்.
``தாராளமாக! அங்கு நமது வீரர்களின் உறுதி மிக்க உள்ளத்தைக் கண்டேன். எவ்வித அச்சமுமின்றி, நிதானத்தை இழக்காமல் கட்டுப்பாட்டுடன் எதிர்ப்பைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறார்கள். மீண்டும் சீனர்கள் படையெடுத்தால், நமது வீரர்கள் கடுமையான எதிர்ப்புக் கொடுப்பார்கள், அதில் சந்தேகமேயில்லை'' என்றார்.
``நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் சீனர்களின் படையெடுப்பு நேர்ந்ததுதான், சில இடங்களில் நாம் பின்வாங்க நேர்ந்ததற்கு காரணமாயிருந்தது அல்லவா?'' என்று கேட்டேன்.
``ஊம்... சில இடங்களில் தோல்வி ஏற்பட்டுத்தான் விட்டது. அதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றியெல்லாம் தீர யோசித்தாக வேண்டும். ஆனால், இனி அம்மாதிரி நேராது. இப்போது, நமது படை வீரர்கள் மிகத் திறமையுடன் இருக்கிறார்கள். குறிப்பாக லடாக் பகுதியில் நமது வீரர்கள் தீரமான சண்டை போட்டிருக்கிறார்கள். படைவீரர்கள் அவர்களது கடமையைச் செவ்வனே செய்வது போல், மக்களும் தங்கள் கடமைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் இன்று எழுந்துள்ள ஒரு விழிப்பும், ஒற்றுமை உணர்ச்சியும் மனதுக்கு மிகுந்த தெம்பை அளிக்கிறது'' என்றார்.
``ஆமாம்! எங்கள் தமிழ்நாட்டில்கூட எல்லாக் கட்சியினரும் தங்கள் குறிக்கோள், போராட்டம் ஆகியவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, தேசப் பாதுகாப்பு ஒன்றையே தங்களது ஒரே லட்சியமாகக் கொண்டு பாடுபட்டுவருகிறார்கள்'' என்றேன்.
``அதுதான் நமது சக்தி. சீனாக்காரர்கள் இந்தியாவை எல்லாவிதங்களிலும் சரியாக எடை போட்டிருக்கலாம். ஒருவேளை நமது ராணுவ பலத்தைக்கூட அவர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால், நமது மக்கள் பலத்தை அவர்கள் உணரவில்லை. `இந்தியாவில் பல உள்நாட்டுச் சச்சரவுகள் இருக்கின்றன. பிரிவினை சக்திகளும், பிளவுச் சக்திகளும்இடம் பெற்றிருக்கின்றன. இதுதான் நாம் படையெடுக்க தக்க தருணம்' என்று எண்ணிவிட்டார்கள். ஆனால், இந்திய மக்கள் இப்படி ஒன்றுபடுவார்கள், அவர்களின் எழுச்சி இத்தனை மகத்தானதாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை.
``நான் சமீபத்தில் தேஜ்பூருக்குப் போயிருந்தபோது, அங்கு இளைஞர்களெல்லாம் ஒன்று கூடி, `தடுப்பு இயக்கம்' ஒன்று ஆரம்பித்திருப்பதைக் கண்டேன். `பகைவன் உள்ளே நுழைந்தால் அவனைக் கண்டு நாம் அஞ்சுவதில்லை, பின் வாங்குவதில்லை. எதிர்த்துச் சமாளிப்போம். அந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவி செய்வோம்' என்று உறுதிகொண்டிருக்கிறார்கள். எந்தக் கணமும் பகைவன் நுழைந்துவிடலாம் என்ற நிலைமையில் இருந்த ஊர் தேஜ்பூர். அந்த இடத்தில் மக்களிடம் காணப்பட்ட தைரியமும் மன உறுதியும் என்னை வியக்கவைத்தது.
ஆனால், உடனடியாக பாதிக்கப்படாதபடி வெகுதொலைவில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களிடமும் அதே விழிப்பையும், மன உறுதியையும், அச்சம் இன்மையையும் காணும்போதுதான், `நமது சக்தி மகத்தானது, நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை' என்ற எனது நம்பிக்கை உறுதியாகிறது. அதுதான் நமது சக்தி. இதை நாம் இழந்துவிடக்கூடாது. இப்போது ஏற்பட்டுள்ள இந்த தேசிய ஒருமைப்பாட்டு உணர்ச்சியை விட்டுவிடக்கூடாது'' என்று உணர்ச்சியுடன் கூறினார், நமது பாதுகாப்பு மந்திரி.
``இந்த சீனப் போர் நெடுநாளைய விவகாரம். எளிதில் தீர்ந்துவிடாது என்று பிரதமர் அடிக்கடி சொல்கிறாரே?''
``ஆமாம்! இது எளிதில் தீர்ந்துவிடும் பிரச்னை அல்ல. கள்ளத்தனமும் கயமைத்தனம் நிறைந்த அண்டை நாட்டானின் உண்மை உருவம் இப்போதுதான் நமக்குத் தெரியவந்தது. எப்படி இருப்பினும் நமது அண்டை நாட்டை, நாம் அவனுடன் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் இனி விழிப்புடன் வாழ வேண்டும். அது சுலபத்தில் முடிந்துவிடுகிற காரியமல்ல."
``தேசிய ஒருமைப்பாடு உண்டாகிவிட்டது. இனி எந்த நெருக்கடியையும் சமாளிக்க முடியும் என்ற தைரியம் நமக்கு உண்டாகிவிட்டது'' என்றேன் நான்.
``ஆமாம்! இனி நாம் மிகவும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும். எந்த விஷயத்தையும் பாதுகாப்புக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். தொழில் வளர்ச்சி பெருக வேண்டும். மக்களின் உழைப்பு பெருக வேண்டும். அத்துடன் NCC (National Cadet Corps), `ஹோம் கார்ட்' முதலியவற்றில் அதிக நாட்டம் கொள்ள வேண்டும்'' என்றார்.
Also Read: நவம்பரில் திடீரென யுத்தத்தை நிறுத்திய சீனா... 1962-ல் நடந்தது என்ன? #IndiaChinaFaceOff - பகுதி 4
``தமிழ்நாட்டில் பல பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் NCC பலப்படுத்தப்படுகிறது. இளைஞர்களிடையே உற்சாகம் பெருகியிருக்கிறது'' என்றேன்.
``அதுதான் தேவை. ஆனால் NCC, `ஹோம் கார்ட்' என்ற உடனேயே யுத்த தளவாடங்கள் தேவை என்கிறார்கள். தளவாடங்கள் ராணுவத்துக்குத் தேவை. முதலில் நாம் எல்லோரும் ஒன்றுகூடி, நம்முடைய ஒற்றுமையை வளர்க்க வேண்டும். கிராமங்களிலும் நகரங்களிலும் சிலராகவும், பலராகவும் ஒன்றாகச் சேர்ந்து, நமக்குள் நிலைமையை விவாதித்து, நமது சக்தியைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். நமக்குள் இருக்கும் சிறுசிறு சச்சரவுகளை அறவே ஒழித்துக்கட்டி, ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும்'' என்றார் உறுதியான குரலில்.
பிறகு, ``அண்மையில் சமுதாய நல திட்டத்தின் மூலம்கூட மக்கள் ஒற்றுமைக்கு வழி காண முயன்றுள்ளோம். ஒற்றுமைதான் நமது ஜீவநாடி. அதை உணர்ந்தால் போதும். எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம் நாம்'' என்றார் அந்த அஜாத சத்ரு.
ஆமாம்! நமது ராணுவ மந்திரி சவான், மகாராஷ்டிரத்து மக்களால் `அஜாத சத்ரு' (பகைவன் அற்றவன்) என்றுதான் அழைக்கப்படுகிறார்.
1914-ம் ஆண்டு பிறந்த அவர், தமது 16-வது வயதிலேயே தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு, சிறை வாசம் அனுபவித்தார். நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பெரும் தலைவர்களில் ஒருவர் ஆவார். அவரை பிடித்துத் தருபவர்களுக்கு 1000 ரூபாய் இனாம் தருவதாகக்கூட பிரிட்டிஷ் சர்க்கார் ஒருமுறை அறிவித்திருக்கிறது. அத்தகைய தீவிர தேச பக்தர் அவர்.
திரு.சவான், பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் கொண்டவர். மகாராஷ்டிரா வாரப் பத்திரிகை ஒன்றையும், தின பத்திரிகை ஒன்றையும் தொடங்க அவர் பேருதவி செய்திருக்கிறார்.
எனது பேட்டியின்போது, ஆனந்த விகடனில் வெளியான அட்டைப்படத் துணுக்கையும், அரசியல் கார்ட்டூன்களையும் பார்த்து பாராட்டினார். மத்திய சர்க்கார் அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்கள் விகடனில் எழுதி வரும் கட்டுரைகளை பார்த்து, அவர் எழுதி, விகடன் வெளியிட்டுள்ள புத்தகத்தையும் கண்டு, `சுப்பிரமணியம் அவர்களை அரசியல் வானில் வளர்ந்து வரும் ஒரு தாரகையாகத்தான் நான் அறிவேன். அவர் சிறந்த எழுத்தாளரும் கூட என்பதை அறிந்து மகிழ்கிறேன்'' என்றார்.
செஞ்சீனாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியபோது, மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராக இருந்தார், சவான். அப்போது ஒரு பொதுக்கூட்டத்தில், ``நாட்டைப் பாதுகாக்க, எல்லைப் புறத்திற்குச் சென்று போரிட நான் எனது முதல் மந்திரிப் பதவியையும் துறக்கத் தயார்'' என்று அறிவித்தார்.
இன்று, மாநில முதல் மந்திரி பதவியைத் துறந்துவிட்டார், இந்திய பாதுகாப்பு மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டுவிட்டார், எல்லையைக் காக்க புறப்பட்டுவிட்டார். ஜவான்களுக்கு ஊக்கமூட்ட புறப்பட்டுவிட்டார், திரு.சவான்.
இரவு 9 மணிக்கு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பியபோது, டெல்லி குளிர் எனக்கு உறைக்கவே இல்லை. உடலில் ஒரு வேகம் பிறந்திருந்தது, உள்ளத்திலே புதிய சக்தி பிறந்திருந்தது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ex-defence-minister-yb-chavans-interview-to-vikatan-at-1962
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக