இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,28,859 ஆகவும் உயிரிழப்பு 16,095 ஆகவும் இருக்கிறது. இந்த மொத்த பாதிப்பில் 85.5 சதவிகித பாதிப்பு 8 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read: Corona Live Updates: அமெரிக்காவில் 25%; பிரேசிலில் 12.8%! - ஒரு கோடியைத் தாண்டிய மொத்த பாதிப்பு
அதேபோல், மொத்த உயிரிழப்பில் 87 சதவிகித உயிரிழப்பு இந்த 8 மாநிலங்களில்தான் பதிவாகியிருப்பதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
8 மாநிலங்கள்
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்குவங்கம். இது மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவினரிடம் சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் குழு இரண்டாவது முறையாக நேற்று கூடி இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனை முடிவில், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தும்படி வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், `பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் இந்தியாவில் 19 நாள்களாக இருக்கிறது. லாக்டௌனுக்கு முன்பாக இது 3 நாள்களாக இருந்தது’ என்றார். இந்தியாவில் 24 மணிநேர கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் 18,552 ஆகவும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரை முடிவடைந்த காலகட்டத்தில் 19,906 ஆகவும் இருக்கிறது.
பாதிப்பிலிருந்து மீண்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களது எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களிலேயே தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
ஜூன் 28 காலை நிலவரப்படி இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713 ஆக இருக்கிறது. சனிக்கிழமை நிலவரப்படி 58.13 சதவிகிதம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து வெற்றிகரமாகக் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என்கிறது சுகாதாரத்துறை அமைச்சகம். அதேநேரம், உயிரிழப்பு 3 சதவிகிதத்துக்கு அருகில் இருக்கிறது. இன்றைய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,095 ஆகவும் கடந்த 24 மணிநேரத்தில் 418 உயிரிழப்புகளும் பதிவாகியிருக்கின்றன.
உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் 25,96,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இதனால் பலியானோர் எண்ணிக்கையும் 1,28,152 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 46, 860 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 12,80,000-த்தைத் தொட்டிருக்கிறது.
உலக அளவில் மொத்த பாதிப்பில் அமெரிக்காவில் 25 சதவிகிதமும் பிரேசிலில் 12.5 சதவிகிதமும் பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. இந்தியாவின் பாதிப்பு மொத்த எண்ணிக்கையில் 5.3 சதவிகிதமாக இருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/8-states-record-855-percent-corona-cases-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக