``இந்த 21-ம் நூற்றாண்டில் சாதியை வைத்து அரசியல் செய்யும் நிலைக்கு, நூற்றாண்டு பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி சென்று விட்டது” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் கதர் சட்டைக்காரர்கள். ஆம், சாத்தான்குளத்தில் மறைந்த இரண்டு வர்த்தகர்களுக்குக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செய்யப்பட்ட மரியாதைகளில் இருவரின் சாதிய அடையாளத்தை தூக்கிப்பிடித்ததே இப்போது அந்தக் கட்சிக்குள் சர்ச்சைகள் உருவாகக் காரணமாகிவிட்டது.
சாத்தான்குளத்தில் சில தினங்களுக்கு முன்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் மரணம் அடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் அறிக்கை ஒன்றை 23-06-20-ம் தேதியன்று வெளியிட்டார். அந்த அறிக்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருவரின் பெயரையும் பயன்படுத்தும்போது பெயருக்குப் பின்னால் நாடார் என்கிற சாதிய அடையாளத்தையும் சேர்த்துப் பயன்படுத்தியிருந்தார். குறிப்பாக இறுதிப் பத்தியில் ``ஜெயராஜ் நாடார், பென்னிக்ஸ் இமானுவேல் நாடார் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்டபோது கடுமையான தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதனால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். கண்டனம் தெரிவித்து அறிக்கை விடும்போது அதில் எதற்காகச் சாதிய அடையாளத்தை வலியத்திணிக்க வேண்டும் என்று அப்போதே கட்சிக்குள் முணுமுணுப்பு எழுந்தது.
ஆனால், அறிக்கை வெளியான பிறகு அதைப்பெரிதாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள் காங்கிரஸ் கட்சியினர். தமிழகத்தில் எந்தக் கட்சியும் இவர்கள் இறப்புக்குக் கண்டனம் தெரிவித்தபோது அதில் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால், தேசியக் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரின் அறிக்கையில் இது இடம்பெற்றது. இந்த நிலையில், இறந்த குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கவும், அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும் சாத்தான்குளத்துக்கு 29-ம் தேதி செல்ல முடிவு செய்தார் அழகிரி. இதுகுறித்து அந்த மாவட்ட நிர்வாகிகளுக்குத் தகவல் சொல்லப்பட்டது. இறந்தவர்கள் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல வரும் மாநிலத் தலைவரை வரவேற்று அந்தக் கட்சியினர் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்த கொடுமையும் நடந்துள்ளது. அந்த விளம்பரம்தான் இப்போது சாதிய சர்ச்சைக்குள் அழகிரியைக் கொண்டுவந்துவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஸ்குமார் ஆகியோர் இணைந்து விளம்பரம் கொடுத்திருந்தனர். அந்த விளம்பரத்தில் ``சாத்தான்குளத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் நாடார் அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வருகை தருகிறார்கள் காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி” என்று குறிப்பிட்டிருந்தனர்.
``ஒரு பாரம்பர்ய கட்சியின் தலைவர் துக்கம் கேட்க வருவதைக்கூட விளம்பரப்படுத்துவது ஒருபுறம் என்றால், இறந்தவர்களின் சாதிய அடையாளத்தை எதற்கு திணிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சிக்குள் விவாதமும் எழுந்தது. இந்த நிலையில், நாளிதழில் வந்த விளம்பரத்தை அரசியல் விமர்சகர் சுமந்த் ஸ்ரீராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் ``துக்கத்துக்கு ஆறுதல் சொல்ல வரும் தலைவரை வரவேற்று விளம்பரம் கொடுப்பதே வெட்கப்படவேண்டிய ஒன்று. அதில் சாதிய அடையாளத்தையும் காட்டியுள்ளார்கள்” என்று கொந்தளித்திருந்தார். இவரின் ட்விட்டர் கருத்து சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது.
தொடர்ச்சியாகக் காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளராக உள்ள கோபண்ணா, சுமந்த் சி ராமன் பதிவுக்குப் பதில் சொல்லும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ``உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் கே.எஸ்.அழகிரி வருகிறார் என்ற தகவல்தான் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டவர் அதன் தொடர்ச்சியாக ``லல்லு பிரசாத் யாதவ் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் யாதவ், மோடி என்ற சாதி பெயர்களைப் பற்றி இவர்கள் கேள்வி எழுப்புவார்களா?... என்று கேட்டிருந்தார். கோபண்ணாவின் இந்தப் பதிலைப் பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ``இது முற்றிலும் அபத்தமானது மற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாத விளக்கம். காலங்கள் மாறிவிட்டன. சாதிய சொற்களுக்கு 21-ம் நூற்றாண்டில் இடமில்லை. சாதி என்பது இந்தியாவின் சாபம். சாதியை நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று பதிவிட்டார்.
இதற்கு உடனடியாக கோபண்ணாவிடமிருந்து ரியாக்ஷன் வந்துவிட்டது. கார்த்தியின் பதிலுக்குத் தனது பதிலடியாக கோபண்ணா ``ராஜா சர்.முத்தையா செட்டியார், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஷிவ் நாடார் ஆகியோர் இந்தச் சமூகம் எப்படி அழைத்ததோ அப்படித்தான் ஜெயராஜ் நாடாரும் அழைக்கப்பட்டார். அதனால்தான் தலைவர் அழகிரி அறிக்கையில் அவர் பெயர் அப்படிக் குறிப்பிடப்பட்டது” என்று பதில் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக ``இதன்மூலம்தான் தமிழகம், உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சமூகநீதிக்கு வெற்றி கிட்டியது. சாதியை ஒழிப்பதாகச் சொல்லி சமூகநீதியை ஒழித்துவிடக் கூடாது. நீண்ட நெடுங்காலமாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தினர் சாதி அடையாளத்தின் மூலம் பன்னெடுங்காலமாக போராடி சமூகநீதியைப் பெற்றார்கள்”என்று விளக்கம் கொடுத்தார்
இவற்றையும் தாண்டி காமராஜரையும் இந்த சாதிய அடையாள சண்டைக்குள் கொண்டுவந்துவிட்டார் கோபண்ணா. ``முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட கு.காமராஜர் நாடார் என்று அழைக்கப்பட்டார். பிறகு பெருந்தலைவர் காமராஜர் என்று மக்களால் நேசிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியிலிருந்த கிருஷ்ணசாமி நாயுடு, சட்ட நாத கரையாளர், மார்ஷெல் நேசமணி நாடார், பொன்னப்ப நாடார், என்று அழைக்கப்பட்டதை யாரும் மறந்திட முடியாது.பெயரோடு சாதி இருந்தால் அப்படித்தான் அழைக்கப்படுவார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று நீண்ட விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.
பெருந்தலைவர் காமராஜர் என்று காங்கிரஸ் கட்சியினர் அவரைக் கொண்டாடிவரும் நேரத்தில் காமராஜர் நாடார் என்றே அழைத்தார்கள் என்று கோபண்ணா பதிவிட்டது கட்சிக்குள் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கோபண்ணாவின் அந்த ட்விட்டுக்கு உடனடியாக ரியாக்ஷனைக் காட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், ``பெருந்தலைவர் காமராஜர் ஒரு காலத்தில் மிஸ்டர் நாடார் என்றே அழைக்கப்பட்டார். ஆனால், சாதி ஒழிப்புக்கொள்கை மீது பெரும் நம்பிக்கை கொண்ட அவர் தன்னை காமராஜ் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாம் அவரை பின்பற்ற வேண்டாமா?'' என்று கோபண்ணாவின் கருத்துக்குப் பதிலடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாக கோபண்ணாவுக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நடிகை குஷ்புவும் ``இந்த சாதிய ரீதியான கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்றும் எனது கட்சி சார்பாக இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: உதயநிதியை வைத்து கனிமொழிக்கு `செக்'? - கழக குடும்பத்தில் அரசியல் ஆடுபுலி
கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்கள் ``யார் மாநிலத் தலைவராக வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக ஒட்டிக்கொண்டு அறிக்கை தயார் செய்யும் வேலையைப் பார்த்துக்கொள்வார் கோபண்ணா. ஜெயராஜ் விவகாரத்தில் அவர் பெயருடன் சாதியும் இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால், போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் அவர் பெயர் ஜெயராஜ் என்று மட்டுமே இருக்கிறது. நாடார் என்று இல்லை. அழகிரி கொடுத்த அறிக்கைக்கு இவர்தான் பின்புலமாக இருந்துள்ளார். எனவே, அழகிரிக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்து வைக்கும் பொறுப்பும் இவரிடம் இருப்பதால் நூற்றாண்டு முந்தைய கதைகளை எல்லாம் இப்போது ஆதாரமாகச் சொல்கிறார். காங்கிரஸ் இருக்கும் நிலையில் சாதியை வைத்து அரசியல் செய்தால் எதிர்க்கட்சிக்கு எகத்தாளமாகிவிடாதா?” என்று புலம்புகிறார்கள்.
மற்றொருபுறம் இந்த மோதலை எதிர்க்கட்சியும் உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ``காமராஜர் வளர்த்த கட்சி காங்கிரஸ். அவரே தனது பெயருக்குப் பின்னால் சாதியைக் குறிப்பிடவேண்டாம் என்று கட்டுப்பாட்டுடன் இருந்தார். ஆனால், இன்று அந்தக் கட்சியே சாதியை வைத்து அரசியல் செய்யவேண்டிய நெருக்கடியை சந்தித்துள்ளது வேதனையான விஷயம். அதிலும் துக்கம் விசாரிக்கப் போகும்போது சாதிய அடையாளத்தைத் துடைத்துவிட்டு போகக்கூடாதா, இது ஒரு கட்சித் தலைமைக்கு அழகா? ” என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்.
மற்றொரு புறம் இந்த விவகாரத்தை வைத்து அழகிரிக்கு எதிர்கோஷ்டியினர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அழகிரி அறிக்கை முதல் கோபண்ணாவின் பதிவு வரை அனைத்தையும் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பு வேலையில் இறங்கிவிட்டார்கள். ஏற்கெனவே அழகிரிக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் மனக்கசப்பு இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. இப்போது கோபண்ணாவின் விவகாரத்தினால் கார்த்தி சிதம்பரம் தரப்பு கடும் ஆத்திரத்தில் இருக்கிறதாம். கோபண்ணாவின் பதிலுக்குப் பின்னால் அழகிரி இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறார்களாம். கலகத்துக்குப் பஞ்சம் இல்லாத காங்கிரஸ் கட்சிக்குள் இப்போது சாதியை வைத்து கலகம் ஆரம்பித்துள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/a-controversy-over-ks-alagiris-statement-on-sathankulam-police-brutality
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக